• :
  • :
களத்தில்

விடுதலைப் புலிகளும் மத சுதந்திரமும் - பாகம் இரண்டு

விடுதலைப் புலிகளும் மத சுதந்திரமும் - பாகம் இரண்டு

விடுதலைப் புலிகளும் மத சுதந்திரமும்


( பாகம் இரண்டு )


 
தமிழீழ மக்களின் சுதந்திர இயக்கம் என்ற ரீதியில், நாம் எமது மக்களின் அடிப்படையான சுதந்திரங்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடி வருகிறோம். இதில் வழிபாட்டுச் சுதந்திரம் முக்கியமானது. இறை வழிபாடு மனிதர்களின் அடிப்படையான உரிமை. புனிதமான இந்த உரிமையை எமது இயக்கம் கௌரவிக்கிறது.
 
மெய்யுண்மையைத் தரிசிக்க விழையும் மனிதனின் ஆன்மீகத் தேடுதலானது, எல்லாக் காலங்களிலும் எல்லாச் சமூகங்களிலும் ஒரு முடிவில்லாத இலட்சியப் பயணமாகத் தொடர்கிறது. வாழ்வியக்கத்தின் அர்த்தத்தையும், பிரபஞ்சத்தின் அற்புதத்தையும் புரிந்து கொள்ள விழையும்மனிதத்தின் மிகவும் ஆழமான அபிலாசையாக, இந்த விழைதல் தொடர்கிறது. ஆன்மீகமும் சரி, விஞ்ஞானமும் சரி, இந்த விழைதலின் தோற்றப்பாட்டையே குறித்து நிற்கின்றன.
 
எந்த வழியிலோ, எந்த வடிவத்திலோ உண்மையைத் தேடும் உரிமை மனிதனுக்கு உண்டு. இது அவனது ஆன்மீக உரிமை. தனது ஆன்மீக அபிலாசைகளுக்குதிருப்திகாணும் வகையில் ஒரு மனிதன் சிந்திப்பதும், செயல்படுவதும், தேடுவதும், நம்புவதும் நம்பாமல் விடுவதும், வழிபடுவதும் வழிபடாமல் விடுவதும், அவனுக்கே உரித்தான தனிமனித சுதந்திரமாகும். இந்த வகையில் வழிபாட்டு உரிமையானது, மனிதனின் சிந்தனைச் சுதந்திரத்தைச் சார்ந்து நிற்கிறது. இந்த உரிமையை எமது விடுதலை இயக்கம் மதிக்கிறது;கௌரவிக்கிறது. ஏனென்றால் இது சுதந்திரமான மனித வாழ்விற்கும், உன்னதமான மனித வளர்ச்சிக்கு இன்றியமையாதது.
 
மத வழிபாடு எமது மக்களின் பண்பாட்டு வாழ்வுடன் இழையோடி நிற்கிறது. பண்பாட்டு வாழ்வு எமது தேசியத்திற்கு ஆதாரமானது.
 
எமது தேசியம் ஒரு சுதந்திர அரச நிர்மாணத்திற்கு அத்திவாரமானது.
 
தேசிய உரிமைப்பாட்டின் அடிப்படையில், தன்னாட்சி கோரி ஒரு வீரசுதந்திரப் போரை நடத்திவரும் விடுதலை இயக்கம் என்ற ரீதியில், எமது மக்களை தேசிய ரீதியில் தேசிய மக்கள் சக்தியாக அணிதிரட்டுவது எமது அடிப்படை அரசியல் இலட்சியம். இந்த இலட்சியத்தை நிறைவேற்றுவதாயின் எமது தேசியத்திற்கு ஆதாரமாகவும், எமது தேசியக் கட்டுமானத்திற்கு தூண்களாகவும் விளங்கும் எமது பண்பாட்டு வடிவங்களைப் பேணிப் பாதுகாப்பது, அத்தியாவசியமானது. இந்த வகையில், தமது பண்பாட்டுக் கோலமாக எமது மக்கள் வரித்துள்ள மத வாழ்வுக்கு, நாம் மதிப்பளிக்கிறோம். அந்த மத வழிபாட்டு வாழ்வின் மேம்பாட்டுக்காக எமது இயக்கம் உழைக்கும்.
 
அடிப்படையான தனிமனித உரிமைகளும் சுதந்திரங்களும் பேணப்படும் சமூக உலகில் தான், மனித வாழ்வு சிறப்புறும்; முழு மனித விடுதலை சாத்தியமாகும்; மனிதமும் தர்மமும் தழைத்தோங்கும். தனிமனித சுதந்திரங்கள் பேணப்படாமல், சமூக நீதியுடைய சமத்துவ சமுதாயத்தை கட்டி எழுப்ப முடியாது. தனிமனித தனித்துவத்தை மறுதலித்து பொருளுலகத்தைச் சீரமைக்க முயன்ற சமூகப் பரிசோதனைகள் தோல்விகளையே சந்திக்க முடிந்தது.
 
தமிழீழ சமுதாயம் அந்நிய ஆதிக்கத் தளைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள விழைகிறது. விடுதலையை நோக்கிய இந்த விழைதல், மண் விடுதலையை மட்டும் நோக்காக கொண்டதல்ல. தனிமனித தமிழன் ஒவ்வொருவனும் தனது ஆன்மீக அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு சுதந்திர தேசத்தை கட்டி எழுப்புவது தான் எமது விடுதலைப் புரட்சியின் இறுதி இலட்சியமாகும்.
 
வழிபாட்டு உரிமையைக் கௌரவித்து, எமது மக்களின் அடிப்படைச் சுதந்திரங்களுக்காகப் போராடும் எமது விடுதலை இயக்கத்தின் இலட்சிய போருக்கு, மதங்களும் துணை நிற்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மனிதர்களின் விடிவிற்காக எமது தேசத்தில் ஒரு தர்மப்போர் நிகழ்ந்து வருகிறது. இந்த சத்திய யுத்தத்திற்கு ஆதரவாக எமது மத நிறுவனங்கள் குரலெழுப்ப வேண்டும். சகல மதங்களதும் தவிர்க்க முடியாத தார்மீகக் கடப்பாடு இது.
 
மக்களின் விடிவிற்காகத் தனது உயிரை அர்ப்பணிக்கும் ஒரு சுதந்திர வீரனின் தியாகமும் சாராம்சத்தில் புனிதமானது; ஒரு ஆழமான பரிமாணத்தில் ஆன்மீகமானது என்றும், சொல்லலாம்.
 
("விடுதலைப் புலிகள்" இதழ் ஆடி - ஆவணி 1992)