img/728x90.jpg
img/728x90.jpg
திருகோணமலை கன்னியா போராட்டத்திற்கு வடக்கு கிழக்கிலிருந்து பெருந்திரளான மக்கள் சென்றிருந்தனர்

திருகோணமலை கன்னியா போராட்டத்திற்கு வடக்கு கிழக்கிலிருந்து பெருந்திரளான மக்கள் சென்றிருந்தனர்

திருகோணமலை கன்னியா பிள்ளையார் கோவிலில் வழிபாடு நடத்தச் சென்ற தமிழ் மக்கள், பிரதான வீதியில் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில்,வீதியில் நின்று பிரார்த்தனைகளை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து வெளியேறினர்.
   
கன்னியா வெந்நீரூற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்திற்கு வடக்கு கிழக்கிலிருந்து பெருந்திரளான மக்கள் திருகோணமலைக்குச் சென்றிருந்தனர்.

எனினும் போராட்டம் இன முறுகலை எற்படுத்தும் என பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து,கன்னியா வெந்நீரூற்று கிணறுகள் அமைந்திருக்கும் இடத்திற்கு ஆர்ப்பாட்டமாக செல்ல முயன்ற தமிழ் மக்களை, இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து தடுத்தனர்.
அதன் பின்னர் வழிபாடுகளை மேற்கொள்ள மாத்திரம் அனுமதி தருமாறு மக்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

எனினும் பொலிஸார் அதற்கு அனுமதியளிக்காத நிலையில், கன்னியா பிரதான வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த மக்கள், அந்த இடத்திலேயே பிரார்த்தனைகளை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து வெளியேறினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் வெந்நீரூற்று கிணறுகள் அமைந்திருந்த பிரதேசத்திற்கு குறித்த கிணறுகள் அமைந்துள்ள காணியின் உரிமையாளரான கோகிலரமணி அம்மையார் மற்றும் தென் கையிலை ஆதீனத்தை சேர்ந்த அகர்த்தியர் அடிகளார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

இதன்போது, அங்கு குழுமியிருந்த சிங்களவர்கள் சிலர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவரையும் அநாகரிகமாக அணுக முற்பட்டதையடுத்து,

பேச்சுவார்த்தை முயற்சியை கைவிட்ட பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர் குழுமியிருந்த இடத்திற்கு அவர்களை திருப்பி அழைத்து வந்தனர்.

இதனையடுத்து,அநாகரிகமாக அணுக முற்றபட்டவர்களை பொலிஸார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பொலிஸார்,குறித்த விடயம் தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளுமாறும் தாங்கள் மேலதிக நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் உறுதியளித்திருந்தனர்.

அதேவேளை, கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவிலிருந்து சென்ற வாகனங்களை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை செய்து கெடுபிடிகளை மேற்கொண்டனர்.

முல்லைத்தீவு ஊடாக கன்னியாவுக்கு செல்லும் பஸ்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் என பெருந்திரளானோர் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில்,

புல்மோட்டை பகுதியில் புல்மோட்டை- முல்லைத்தீவு வீதியிலும் மற்றும் புல்மோட்டை-திருகோணமலை வீதியிலும் 3 இடங்களில் போராட்டத்திற்கு செல்லும் பஸ்கள் மட்டும் தனியாக அடையாளப்படுத்தப்பட்டு பஸ்களில் செல்பவர்கள் கடுமையான உடல் உடமை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

போராட்டத்திற்கு செல்பவர்களையும் பஸ்களையும் இராணுவம் மற்றும் பொலிஸார் புகைப்படங்கள் எடுத்து அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டனர்.

மேலும் பருத்தித்துறையிலிருந்து புல்மோட்டை ஊடாக கன்னியா போராட்டத்திற்கு சென்ற பஸ்ஸை வழிமறித்து படையினர் மற்றும் பொலிஸார் பரிசோதனைகளை செய்தபின் பஸ்ஸின் முன் சில்லை கூரிய ஆயுதத்தால் குற்றி காற்றுபோக செய்து பயணத்தை தடை செய்யும் விதமாக நடந்தது கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.