img/728x90.jpg
img/728x90.jpg
மட்டக்களப்பு வாகனேரி, முள்ளிவட்டவான், பொத்தானை, குளத்துமடு கிராம மக்கள் குடிநீர் மற்றும் யானை பிரச்சினை காரணமாக பெரிதும் பாதிப்பு

மட்டக்களப்பு வாகனேரி, முள்ளிவட்டவான், பொத்தானை, குளத்துமடு கிராம மக்கள் குடிநீர் மற்றும் யானை பிரச்சினை காரணமாக பெரிதும் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி, முள்ளிவட்டவான், பொத்தானை, குளத்துமடு கிராம மக்கள் குடிநீர் மற்றும் யானை பிரச்சினை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக கிராம மக்களுக்கு குடிப்பதற்கு மற்றும் குளிப்பதற்கு நீர் இன்மையால் வாகனேரி குளத்தினை நாடி வருகின்றனர்.ஆனால் குளத்திலும் நீர் குறைந்து காணப்படுகின்றது.

இதனால் குளத்தின் அருகில் பூவல் மூலம் தண்ணீரை வடித்து எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளதாக மக்கள் தெரிவிப்பதுடன், குளத்தில் நீர் எடுக்கும் போது யானைகள் வருவதால் பயத்தில் தண்ணீர் எடுக்காமல் செல்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

"தற்போது எங்களுக்கு தண்ணீர்ப் பிரச்சினையோடு யானைப் பிரச்சினையும் பாரிய பிரச்சினையாக உள்ளது. எங்களது நிலைமை தொடர்பாக எவரும் கவனத்தில் கொள்வதில்லை. யானையின் வருகையால் எங்களது உறவுகளில் சிலரை இழந்து காணப்படுகின்றோம்.

இவ்விடயமாக பல தடவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை. எங்களை வந்து பார்ப்பதும் இல்லை.

நாங்கள் எங்களின் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கிறோம்" என்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு வாகனேரி குளத்தினை நம்பி 2500 குடும்பங்களுக்கு மேல் வாழ்கின்றன. 8500 ஏக்கர் வேளாண்மை தமிழ் மற்றும் முஸ்லிம் விவசாயிகளால் செய்கை பண்ணப்படுகின்றது.

ஆயிரக்கணக்கான கால் நடைகள், உயிரினங்களும் இக்குளத்துக்கு பகலிலும், இரவிலும் நீர் பருக வருகின்றன. இக்குளத்தை நம்பி வாழும் விவசாயிகள் வரட்சியால் ஒரு போதும் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. ஆனால் இக்குளத்தை புனரமைப்பு செய்வதாக தெரிவித்தார்கள்.

இன்னும் அது இடம்பெறவில்லை. அதுவே இன்றைய நிலைமைக்குக் காரணம் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.