img/728x90.jpg
img/728x90.jpg
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக வறண்ட காலநிலை - 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக வறண்ட காலநிலை - 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழையுடனான காலநிலை நிலவிவருகின்ற நிலையில், மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக வறண்ட காலநிலை காணப்படுகின்றது.

இதனால் மன்னார் மாவட்டத்தில் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேட்டு நிலப் பயிர்ச் செய்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குடிநீர் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக நானாட்டான், மாந்தை, மடுப் பிரதேசங்களில் விவசாய குடும்பங்களால் மேற்கொள்ளப்பட்ட மேட்டு நிலப் பயிர்ச் செய்கைகள் மற்றும் வீட்டுத் தோட்டங்கள் பாதிப்படைந்த நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கிணற்று நீரும் வற்றி வருகின்றது.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் இறுதி அறிக்கையின் படி இவ்வறட்சி காரணமாக மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள 104 கிராம அலுவலகப் பிரிவுகளில் 18ஆயிரத்து 704 குடும்பங்களைச் சார்ந்த 63 ஆயிரத்து 115 பேர் நேரடியாக பதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 13ஆயிரத்து 416 குடும்பங்களைச் சார்ந்த 46 ஆயிரத்து 632 பேருக்கு மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிவாரண சேவையினால் நாளாந்தம் 7,101 லீற்றர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மடு பிரதேச செயலகப் பிரிவில் 4,099 குடும்பங்களும், முசலிப் பிரதேசத்தில் 3,723 குடும்பங்களும் குடிநீர் பிரச்சினைகளுக்கு அதிகமாக முகங்கொடுத்து வருகின்றனர்.

இதேவேளை, குடிநீர் வழங்குவதற்காக எட்டு மில்லியன் ரூபாய் நிதி அரசாங்கத்திடம் கோரியிருக்கின்ற போதும் இதுவரை இரண்டு மில்லியன் ரூபாயே கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் மேலும் நிதி கிடைக்கப்பெறவுள்ளது.