img/728x90.jpg
வடக்கில் இந்திய அரசினது முகவர் அமைப்பாக உருப்பெற்றிருக்கின்றது யாழ் முகாமையாளர் சம்மேளனம்!

வடக்கில் இந்திய அரசினது முகவர் அமைப்பாக உருப்பெற்றிருக்கின்றது யாழ் முகாமையாளர் சம்மேளனம்!

வடக்கில் சத்தம் சந்தடியின்றி இந்திய அரசினது முகவர் அமைப்பாக உருப்பெற்றிருக்கின்றது யாழ்.முகாமையாளர் சம்மேளனம்.யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள், அரசியல்வாதிகள் இணைந்து இவ்வாறான அமைப்பினை தோற்றுவித்திருப்பதாக சொல்கின்ற போதும் உண்மையில் இந்திய தூதரகத்தின் ஆலோசனையில் முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் மற்றும் அவரது சகபாடிகளிற்கு புத்துயிர் வழங்கும் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் அமைப்பாக அது மாறியுள்ளது.

தங்களை தாங்களே புத்திஜீவிகள் என சொல்லிக்கொள்ளும் ஓய்வூதியவர் கூட்டமொன்றின் கூடாரமாக உள்ள அதில் இந்திய தூதரக ஏற்பாட்டில் இந்திய ஊடகவியலாளர்களது இல்லாத பொல்லாத நூல் வெளியீடுகளை களமிறக்குவதும் நடப்பது வழமை.

தற்போது கோத்தபாயவிற்காக பிரச்சார களமிறங்கி இருக்கின்ற திஸ்ஸ விதாரண சகிதம் புதிய சந்தையினை இக்கும்பல் திறந்துள்ளது.தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான  இணைப்பாளராக தன்னைத் தற்போது மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளதாகவும் ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன் மீது நம்பிக்கை வைத்துத் தமிழ் மக்கள் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்குமாறு முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண இம்முதியோர் கூடத்தில் வைத்து பிரச்சாரம் செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுக்கும் யாழ்.முகாமையாளர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள்(?), அரசியல்வாதிகளுக்குமிடையிலான விசேட அரசியல் கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை(25) முற்பகல்10 மணி முதல் யாழ். நல்லூர் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு நீண்ட உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார்.

ஏற்கனவே கோத்தபாயவிற்கு அவரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற பின்னர் பாவ மன்னிப்பு அறிவித்துள்ள வரதராஜப்பெருமாள் தரப்பின் ஏற்பாட்டில் ஓய்வூதிய இல்லத்திற்கு அழைத்துவரப்பட்ட திஸ்ஸ தானும் பாவ மன்னிப்பு வழங்க முன்வந்துள்ளார்.

குடாநாட்டின் உண்மையான அபிவிருத்திக்கென பொறியியலாளர் இராமதாசன் போன்றவர்களால் நிறுவப்பட்ட நல்லூர் யூரோவில் மாநாட்டு மண்டபம் இப்போது பாவ மன்னிப்பு வழங்கும் வத்திக்கான் தேவாலயமாகியிருப்பது பரிதாபகரமானதே.