img/728x90.jpg
img/728x90.jpg
தியாகி திலீபனுக்கு நல்லூரில் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக நினைவேந்தல்

தியாகி திலீபனுக்கு நல்லூரில் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக நினைவேந்தல்

தமிழீழத்தில் இந்திய – சிறிலங்கா அரசுகளின் ஆக்கிரமிப்புக்களுக்கும் இனச் சுத்திகரிப்புக்கும் எதிராக உண்ணா நோன்பிருந்து தனது உயிரை ஆகுதியாக்கிய தியாகி திலீபனின் 32 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது. 

தாயகத்தில் பல இடங்களிலும் புலம்பெயர் தேசங்களிலும் இருந்து வருகைதந்த பொதுமக்கள் மக்கள், தமிழ்த் தேசியப் பற்றாளர்கள், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர், அரசியல்வாதிகள், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டுவந்து திலீபனுக்கு வணக்கம் செலுத்தினர். 

திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியினார்  கடந்த ஆறு தினங்களுக்கு முன்னர் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட நடை பயணம் இன்று (26) முற்பகல் 10.15 மணியளவில் நல்லூரில், தியாகி திலீபனின் நினைவுத் தூபியை வந்தடைந்தது. 

இதனைத் தொடர்ந்து திலீபன் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த இடத்தில், அவர் உயிர்நீத்த 10.48 இற்கு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இதன்போது, தாயக விடுதலைப் போருக்கு தனது இரு பிள்ளைகளை உவந்தளித்த, இரு மாவீர்களின் வீரத்தாய் ஒருவர் சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் மலரஞ்சலி செலுத்தினர். 

பின்னர், நல்லூர் தியாகி திலீபன் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் வணக்க நிகழ்வு இடம்பெற்றது. இங்கும் மேற்படி வீரத்தாய் பொதுச் சுடர் ஏற்றினார். தொடர்ந்து நினைவுத் தூபியில் உள்ள திலீபனின் திருவுருவப் படத்திற்கு அவர் மலர் மாலை அணிவித்தார். 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் இன்றைய நிகழ்வை ஒழுங்குபடுத்திய போதிலும், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஏனைய கட்சிகளைச் சார்ந்தவர்களும் இதில் கலந்துகொண்டு திலீபனுக்கு வணக்கம் செலுத்தினர். 

யாழ். மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் மற்றும் மாநகர சபையின் உறுப்பினர்கள் பலரும் இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டு தியாக தீபத்திற்கு வணக்கம் செலுத்தினர். 

கடந்த ஆண்டுகளை விடவும், பேரெழுச்சியாக இன்றைய நிகழ்வு இடம்பெற்றிருந்தது.