img/728x90.jpg
எஸ்.எம்.ஜி இனி எம்முடன்…

எஸ்.எம்.ஜி இனி எம்முடன்…

தடம் எடுத்து வைத்த போது தோள்தட்டிக் கொடுத்தவர் விடைகொடுத்திடும் நேரமதில் மௌனத்தை கலைத்தேயாக வேண்டிய அழுத்தத்தில்கருத்தரித்த உணர்வின் வரிகளிவை...

எஸ்.எம்.ஜி – கோபு - பாலரட்ணம் போன்ற பல புனை பெயர்களைக் கொண்ட எஸ்.எம். கோபாலரத்தினம் அவர்களுக்கு தமிழ் ஊடக உலகில் அறிமுகம் தேவையில்லை. அத்தகைய ஒரு மாபெரும் ஆளுமை தொடர்பாக எங்கே ஆரம்பிப்பது, எப்படி முடிப்பது என்று ஒரு புறமும், எதனை எழுதுவது, எதனை தவிர்ப்பது என்று மறுபுறமும் மனதுக்குள் ஒரு போராட்டம். அதீத நினைவாற்றல் இல்லாவிட்டாலும் முடிந்தரை முயல்கிறேன் நினைவுகளை கோர்வையாக்க.

சரிநிகர் ஒரு பத்திரிகையாக விளங்கி சஞ்சிகையாக மாறுவதற்கிடையில் 'நிகரி' 2002 சனவரியில் 'ராவய' வளாகத்தில் தோற்றம் பெறுகிறது. அந்த தளத்தில் , அந்த தருணத்தில்தான் தமிழ் ஊடகப் பரப்பில் எனது அத்தியாயத்தை ஆரம்பிக்கிறேன்.

 

எஸ்.எம்.ஜி 50 ஆவது ஆண்டில் தடம் பதித்த காலப்பகுதியில், தமிழ் ஊடகப் பரப்பில் நான் எனது முதல் தடத்தை எடுத்து வைத்தேன். அந்த தருணத்தில்தான் சிவா அண்ணா எஸ்.எம்.ஜியை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

தமிழ் ஊடகப் பரப்பின் மூத்த ஆளுமையையும், ஆரம்ப நிலையிலிருந்த என்னையும் உள்வாங்கி 'நிகரியை' ஆரம்பிப்பதற்கான ஒரு குழுமத்தை உருவாக்கினார் சிவா அண்ணா. இந்த குழுமத்தில், ரேவதி அக்கா, ஒரு காலப்பகுதியில் யசோ ஆகியோருடன் வியாழக்கிழமைகளில் சிவராம் அண்ணா, விக்கி அண்ணா, பல தருணங்களில் சரவணன் அண்ணாவும் ஒன்றிணைவார்கள்.

 

நான் கட்டுரைகளை எழுதும் போது அவற்றை வாசித்து, செழுமைப்படுத்தி எனக்கு அறிவுரைகளை வழங்கி வழிப்படுத்தும் எஸ்.எம்.ஜி, சுவாரசியமான கதைகளையம் அனுபவங்களையும் பகிர்வார். பன்முக ஆளுமையை கொண்டிருந்த எஸ்.எம்.ஜி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆணவத்தோடு செயற்பட்டதை நான் பார்த்ததில்லை. எமது பணியகத்தின் மேல் மாடியில் விக்டர் ஐவனையும், கீழே எஸ்.எம்.ஜியையும் பார்க்கும் போது இரு ஆளுமைகளின் வெவ்வேறு பரிமாணங்களை அறியமுடிந்தது.

 

எஸ்.எம்.ஜிக்கும் எனக்கும் குரு – சிஷ்யனாக இருந்திருக்க வேண்டிய உறவு எளிமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அவரது பண்பால் ஒரு பேரனுக்கும் பூட்டனுக்குமுள்ள ஒரு உறவு போல் பரிணமித்தது. இதுவே, கோபு ஐயா என அழைக்கப்பட்டிருக்க வேண்டியவரை எந்தவித தயக்கமுமின்றி எஸ்.எம்.ஜி என உரிமையோடும் வாஞ்சையோடும் அழைக்கத் தூண்டியது.

 

ஒரு கட்டத்தில் எஸ்.எம்.ஜி மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் படுகொலை தொடர்பாகவும், நான் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை தொடர்பாகவும் சிவா அண்ணாவின் அறிவுறுத்தலுக்கு அமைய எழுதினோம். கட்டுரை எழுதி முடிந்ததும், எனது கட்டுரையை வாங்கி வாசித்த எஸ்.எம்.ஜி, நான் ஈ.பி.டி.பி என எழுதிய இடங்களில் ஆயுதம் தாங்கிய தமிழ்க் கட்சி என மாற்றம் செய்தார். அவரது மாற்றத்தோடு உடன்பாடு இல்லாதபோதும் இறுதியில் எதிர்ப்புக்காட்டவில்லை. ஆயினும், அவரது முன்னெச்சரிக்கை பின்னர் பல தடவைகளில் எனக்கு உதவியது.

 

2002 ஏப்ரல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் ஊடகவியலாளர் மாநாட்டுக்கு சென்றிருந்த போது, வன்னியில் எதிர்பாராத ஒரு சந்திப்பு நிகழ்கிறது. அந்த சந்திப்பின் போது நிமலராஜன் அவர்களின் படுகொலை தொடர்பாக நான் எழுதிய கட்டுரையில் ஈ.பி.டி.பி என குறிப்பிடாமல் ஆயுதம் தாங்கிய தமிழ்க் கட்சி எனக் குறிப்பிட்டதற்கான காரணத்தை அறியவிரும்பினார் என்னோடு உரையாடிய பொறுப்பாளர்களில் ஒருவர். அது எஸ்.எம்.ஜியின் ஆலோசனைக்கு அமைவாக மாற்றப்பட்டது என தெரியப்படுத்திய போது, குறித்த பொறுப்பாளர் அதற்குப் பின் அது தொடர்பான கேள்வி எதனையும் கேட்காமல் மௌனமானர். 2004 யூன் மாதம் எஸ்.எம்.ஜி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரினால் கௌரவிக்கப்பட்டார். இந்த மதிப்பளிப்பு தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இளம் ஊடகவியலாளர்கள் தமது திறன்களை வளர்த்துக்கொள்வதற்காக அவர்களை வழிப்படுத்துவதற்கான எஸ்.எம்.ஜியின் தேவையும் எடுத்துக்கூறப்பட்டது. குறித்த பொறுப்பாளரின் மௌனம் இந்த அறிக்கையை வாசித்த போது சற்று புரிதலை ஏற்படுத்தியது.

 

எதிர்பாராதவிதமாக, "நிகரி" குடும்பத்தின் கூடு கலைந்த போது எஸ்.எம்.ஜிஉம் நானும் திசைக்கொருவரானோம். எதிர்பாராதவிதமான சந்திப்பு. பின்னர் பிரிவு. மீண்டும் எதிர்பாராதவிதமான சந்திப்பு என உறவு தொடர்ந்தது.

 

ஒரு நாள், "நமது ஈழநாடு" பத்திரிகைப் பணியகத்தில் ராதேயன் அண்ணாவுடன் உரையாடி விட்டு வெளியேறும் போது, எதிர்ப்பட்ட கண்ணன் சொன்னார், உங்களை தெரிந்த ஒருவர் உங்களை சந்திக்க விரும்புகிறார் என்று. என்ன ஆச்சரியம். முதுமை அவரைத் தொட்டபோதும், பார்வைக்கு அதே கம்பீரத்துடனும், புன்சிரிப்போடும் எங்கள் எஸ்.எம்.ஜி. மட்டற்ற மகிழ்சி எனக்கு. "நமது ஈழநாடு" பணியகத்துக்கு சென்று வருவதற்கே சிந்திக்க வேண்டி இருந்த தருணத்தில், அந்த வயதிலும் அச்சமற்றவராய் எஸ்.எம்.ஜி "நமது ஈழநாட்டில்" பணியாற்றினார். அவரது படைப்புகள் தொடர்பாக உரையாடினோம். புதிய நூலுருவாக்க பணியில் ஈடுபட்டிருந்த அவருக்கு, சில பழைய தமிழ் அரசியல்வாதிகளின் ஒளிப்படங்கள் தேவைப்பட்டது (வரதன் அண்ணா போன்ற அதீத நினைவாற்றல் இருந்திருக்குமாயின் குறித்த அரசியல்வாதிகளின் பெயர் இன்றும் நினைவில் நின்றிருக்கும்). அதனை நிவர்த்தி செய்ய என்னால் இயன்றவரை முயல்கிறேன் என்றேன். போர் நிறுத்த காலப்பகுதி என்றபடியால் ஏரிக்கரையில் தினகரனுக்கும் சென்று சில ஒளிப்படங்களை அவர்களின் சுவடிகள் காப்பகத்தில் கட்டணம் செலுத்தி பெறமுடிந்தது. அவர் தேடிய ஒளிபடங்கள் எல்லாவற்றையும் பெற்றுக்கொடுக்க முடியாமல் போனாலும் கணிசமாக ஒளிப்படங்களை பெற்றுக்கொடுக்க முடிந்தது.

 

எனது நினைவுக்கெட்டிய வரையில் "நமது ஈழநாடு" பணியகத்தில் வைத்தே எங்களுக்கிடையில் சில தொடர் சந்திப்புகள் இடம்பெற்றது. அவருடைய நூல்களையும் அங்கே வைத்தே அவரது கையொப்பம் இட்டு எனக்கு வழங்கினார். அங்கேதான் இறுதிச் சந்திப்பும் இடம்பெற்றதாக நினைவு.

பின்னர், 'யாரென்று தெரிகிறதா' என்ற தலைப்போடு, எஸ்.எம்.ஜியோடு நண்பர் ஜெரா நிற்கின்ற ஒளிப்படத்தை பார்த்த போது, எனது அன்பை எஸ்.எம்.ஜிக்கு தெரியப்படுத்துமாறு ஜெராவை கேட்டுக்கொண்டேன்.

சந்திப்பு - பிரிவு - இணைவு – பிரிவு எனத் தொடர்ந்த எங்கள் உறவு இறுதியில் நிரந்தரப் பிரிவோடு ஈடுசெய்யமுடியாத மற்றுமொரு பேரிழப்பாக முற்றுப் பெறுகிறது. ஆயினும், மரணத்துக்குள்ளும் வாழ்ந்த எஸ்.எம்.ஜி மரணத்திற்குப் பின்னும் இனி எம்மோடு ஆத்மார்த்தமாக வாழ்வார் என்ற நம்பிக்கை உண்டு.

 

இறுதி வணக்கங்கள் எஸ்.எம்.ஜி! இருக்கின்ற சிறைகளையும் இனிவரும் சிறைகளையும் பற்றி எழுத வல்லமை தருவீர்களாக! ஒவ்வொரு உயிரும் உன்னதமானது என்ற சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்த நீங்கள் குறைந்தது 146, 679 தமிழர்களுக்கு முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது என அறியும் நீதிக்கான போராட்டம் தேக்கமடையாமலிருக்கும் திடத்தினை அளிப்பீர்களாக! ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்னரே அரசியல் கைதிகளின் விடுதலைக்காக எழுதிய நீங்கள், காத்திருப்போடும், கதறியழும் வாழ்வோடும் நகரும் தாய்களின் கண்ணீரை நிறுத்த வழிகாட்டுவீர்களாக!

 

  - ச.பா.நிர்மானுசன் -