• :
  • :
களத்தில்

வேல்முருகன் தேசத்துரோக வழக்கில் சிறைப்படுத்தப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

வேல்முருகன் தேசத்துரோக வழக்கில்  சிறைப்படுத்தப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

வேல்முருகன் தேசத்துரோக வழக்கில்  சிறைப்படுத்தப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

 
தேர்தல் அரசியலில் ஈடுபட்டிருக்கும் மற்ற  தலைவர்களிலிருந்து தோழர் வேல்முருகன் ஓரிடத்தில் வேறுபடுகிறார்.
 
தொடக்கத்தில் தமிழ்நாடு விடுதலைக்கான முயற்சிகளில் தீவிர செயல்பாடுடையவராக இருந்த அவர், பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்ததன் பிறகும், அதன்பிறகு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடங்கிய பின்னரும் வழமையான தேர்தல் அரசியலாளர் போலவே  நடைமுறைகளைக் கொண்டிருந்தார்.
 
அண்மைக்காலமாகத் தமிழக உரிமை குறித்த போராட்டங்களில் பங்கேற்ற அவர், அப்போராட்டங்களில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளையும் ஒருங்கிணைத்துத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு என்று ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்.
 
ஏதோ தேர்தல் நலனுக்கான, வாக்குகளைப் பெறுவதற்கான கூட்டமைப்பாக இல்லாமல் தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பாகவே அதை ஒழுங்கமைத்தார். தேர்தலில் பங்கேற்கிற  கட்சிகளையும், இருக்கிற முதலாளிய அமைப்புக்கான தேர்தல் தளத்தை ஏற்காத இயக்கங்களையும் ஒருங்கிணைத்து கூட்டமைப்பில் ஈடுபடுத்தினார். அதுமட்டுமல்லாமல் இந்தியப் பார்ப்பனியத்தை எதிர்க்கிற நோக்கோடு இயங்குகிற தமிழ்தேசிய இயக்கங்களையும் , பெரியாரிய அம்பேத்கரிய இயக்கங்களையும், புரட்சி இலக்கு கொண்ட இயக்கங்களையும் ஒருங்கிணைத்து அக் கூட்டமைப்பில் ஈடுபடுத்தியது தனிச்சிறப்புடையது.
 
கடந்த  காலங்களில் புலவர் கலியபெருமாள் அவர்களின் முன்முயற்சியில் கட்டமைக்கப்பட்ட ஒடுக்கப்பட்டோர் உரிமை மீட்பு கூட்டமைப்புதான் அத்தகைய முன்சான்றுக்குரிய (முன்உதாரணத்திற்குரிய)  கூட்டமைப்பாகச் செயல்பட்டது.
 
அதன்பிறகு அமைக்கப்பட்ட கூட்டமைப்புகளில் எல்லாம் ஏதாவது ஒருசில நிலைப்பாடு உடையவர்கள் இணையாமலேயே இருந்து வந்திருக்கின்றனர். 
 
ஆனால் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் செயல்பாடுகளில் பெரும்பாலும் அனைவரும் காலத் தேவையால் ஒருங்கிணைந்து இருந்தனர். 
 
தமிழ் இயக்கங்களோடு ஒருங்கிணைய மாட்டோம், திராவிட இயக்கங்களோடு ஒருங்கிணைய மாட்டோம், தேர்தல் கட்சிகளோடு ஒருங்கிணைய மாட்டோம் என்றெல்லாம் மறுத்து வந்துகொண்டிருக்கிற இயக்கங்கள் அனைத்தையும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இணைத்த சிறப்பு தோழர் வேல்முருகனுக்கு உண்டு.
 
இதை அறிந்த இந்திய பார்ப்பனிய அதிகார ஆட்சியாளர்களே எப்படியும் அந்த இணைவு போக்குகளைச் சிதைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.
 
தமிழ்த் தேசிய இயக்கங்களுக்கு எதிராகத் திராவிடர் கருத்துடைய இயக்கங்களையும், திராவிடர் கருத்துடைய இயக்கங்களுக்கு எதிராகத் தமிழ்த்தேசிய இயக்கங்களையும் முரண் படுத்துவது என்கிற பார்ப்பனிய நடைமுறையைக் கண்டறிந்து கொண்டு,  அதற்கு ஆட்படாமல் அந்த இயக்கங்களை ஒருங்கிணைத்த சிறப்பு தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் வேல்முருகனுக்கு உண்டு.
 
எனவேதான், வேல்முருகனைச் சிறைப்படுத்துவதன்வழி,  தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் முயற்சிகளை முடக்குகிற நோக்கத்தோடு இந்தியப் பார்ப்பனிய வெறி அரசும், அதற்கு ஒத்து ஊதிக் கொண்டிருக்கக் கூடிய எடப்பாடி அரசும் செயல்பட்டிருக்கின்றன.
 
எனவே, இத்தகைய புரிதல்களில் இருந்து தோழர் வேல்முருகனின் விடுதலைக்குப் போராடுவதும், தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பை முன்னெடுத்துச் செல்வதும் நம் அனைவரின் கடமையும் ஆகும்.