img/728x90.jpg
கொங்கு மண்டலத்தில் ஐ.டி ரெய்டு! - ஓ.பன்னீர்செல்வம் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு செக்?

கொங்கு மண்டலத்தில் ஐ.டி ரெய்டு! - ஓ.பன்னீர்செல்வம் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு செக்?

 கொங்கு மண்டலத்தில் ஐ.டி ரெய்டு! - ஓ.பன்னீர்செல்வம் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு செக்?

விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டுக்குப் பிறகு, 14 மாதங்கள் கழித்து கிறிஸ்டி நிறுவனம் குறிவைக்கப்பட்டிருக்கிறது. அரசியல் ஆலோசகரின் ஆட்டத்துக்கு பன்னீர்செல்வம் துணைபோகிறார்' என்கின்றனர், அ.தி.மு.க-வின் முன்னணி நிர்வாகிகள்.
கொங்கு மண்டலத்தில் ஐ.டி ரெய்டு! - ஓ.பன்னீர்செல்வம் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு செக்?
தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு பொருள்களை வழங்கிவரும் திருச்செங்கோடு கிறிஸ்டி நிறுவனத்தைக் குடைந்து கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. 'எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்காகவே ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது. இதன் பின்னணியில், பன்னீர்செல்வமும் பா.ஜ.க-வுக்கு வேண்டிய சிலரும் இருக்கின்றனர்' என முணுமுணுக்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் இயங்கிவருகிறது கிறிஸ்டி ஃபிரைடு கிராம் நிறுவனம். தி.மு.க ஆட்சியில் இருந்தாலும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தாலும், கிறிஸ்டி நிறுவனத்தின் ஆதிக்கமே மேலோங்கும். ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வரும் கிறிஸ்டி நிறுவனத்தில், இன்று காலை முதலே சென்னையிலிருந்து சென்ற வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய வருமான வரித்துறை அதிகாரி ஒருவர், "குமாரசாமியின் வீடு, நிறுவனம் ஆகிய இரண்டும் ஈரோடு செல்லும் வழியில் அமைந்துள்ளன. பத்துக்கும் மேற்பட்ட குழுவினர் இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சத்துமாவு, முட்டை ஆகியவற்றை விநியோகம்செய்ததில், 15 கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததாகப் புகார் வந்தது. மேலும், போலியான நிறுவனங்களைக் கணக்குக் காட்டி வங்கியில் கடன் பெற்றதும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் கிறிஸ்டி ஃபிரைடு கிராம் நிறுவனத்தில் சோதனை நடத்தப்படுகிறது. இது, வழக்கமாக நடக்கும் சோதனைதான்" என்கின்றனர்.

"தமிழக அரசின் சமூக நலத்துறையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் அடிப்படையில், அங்கன்வாடி மையங்களுக்குச் சத்துமாவு வழங்கப்படுகிறது. இந்த மாவு டெண்டரில் கிறிஸ்டி நிறுவனத்தைத் தவிர வேறு எந்த நிறுவனமும் பங்கேற்க முடியாத அளவுக்கு அரசியல் கட்சிகளும் அதிகாரிகளும் லாபி செய்கின்றனர். அதேபோல, நாளொன்றுக்கு 70 லட்சம் முட்டைகள் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக சப்ளை செய்கின்றனர். இதில், ஒட்டுமொத்தமாகக் கொள்முதல்செய்யும்போது விலை குறையவே வாய்ப்பு அதிகம். ஆனால், அதிகப்படியான விலைக்கு வாங்கப்படுகிறது. இதுகுறித்து கேட்டால், ’தேசிய அளவில் முட்டை என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ, அதே விலைப்பட்டியலைத்தான் கடைப்பிடிக்கிறோம்’ என ஒற்றை வார்த்தையில் கூறிவிடுகின்றனர். நாளொன்றுக்கு 70 லட்சம் முட்டைகள் கொள்முதல் என்றால், எவ்வளவு பணம் விளையாடும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை" என விவரித்தார், தலைமைச் செயலக அதிகாரி ஒருவர்,

கிறிஸ்டி ஃபிரைடு கிராம்

"கடந்த அ.தி.மு.க ஆட்சியில், முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி (ரெய்டுக்கு ஆளான) ஒருவர்தான் கோலோச்சி வந்தார். 500 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட டெண்டர் என்றால், அவர் தேர்வு செய்தால்தான் அந்த கம்பெனிக்கு கார்டன் வாசல்கதவுகள் திறக்கும். கிறிஸ்டி நிறுவனத்தை வளர்த்தெடுத்ததில் அந்த அதிகாரிக்கு முக்கிய பங்கு உண்டு. அதற்கேற்ப, இதர நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்காதபடி விதிகளை வளைத்ததில் அந்த அதிகாரியின் பங்கு அளப்பறியது. இதேகாலகட்டத்தில், அமைச்சர்களுக்கும் கார்டனுக்கும் முக்கிய பாலமாக இருந்தவர், எடப்பாடி பழனிசாமி. தவிர, கிறிஸ்டி நிறுவனத்தின் உரிமையாளரும் எடப்பாடி பழனிசாமியும் நல்ல உறவில் இருந்து வருகின்றனர். சத்துமாவு, முட்டையை அடுத்து பொதுவிநியோகத் திட்டத்திலும் இந்த நிறுவனம் கால்பதித்தது. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த இந்த விவகாரம் பெரியளவில் வெடித்தது. பொதுவினியோகத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 13,461 டன் துவரம் பருப்பு, 9 ஆயிரம் டன் உளுத்தம்பருப்பு, 16,708 கிலோ லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதற்காக, ஒவ்வொரு மாதமும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு இறுதிசெய்யப்படுகின்றன. இதில் பங்கேற்க பல நிறுவனங்கள் முன்வந்த போதிலும், பல்வேறு காரணங்களைக் காட்டி அவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், நான்கு நிறுவனங்கள் மட்டுமே ஒப்பந்தப்புள்ளிகளை வழங்க அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள், ஒருமாதத்தில் திறக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த டெண்டருக்கான ஊழல் பணமாக 40 கோடியை உடனே தர வேண்டும் என அரசுத் தரப்பில் கட்டாயப்படுத்துவதாகப் புகார் எழுந்தது.

இதில், அதிக விலை கொடுத்து வாங்கவிருப்பதால், உளுத்தம் பருப்புக் கொள்முதலில் அரசுக்கு ரூ.350 கோடி மசூர்பருப்பு கொள்முதலில் ரூ.380 கோடி என மொத்தம் ரூ.730 கோடி இழப்பு ஏற்படும் என்ற தகவல் வெளியானது. வெளிச்சந்தையில் கிடைப்பதைவிடவும் 25 சதவிகிதம் அதிக விலைக்கு வாங்கப்படுவதாக மருத்துவர் ராமதாஸும் சுட்டிக்காட்டியிருந்தார். ஒவ்வோர் ஆண்டும் இந்த அவலம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதைப் பற்றியெல்லாம் ஆட்சியில் உள்ளவர்களும் கண்டுகொள்ளவில்லை. டெண்டர் விதிகளை வளைத்த அந்த அதிகாரியும் பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். மிகச் சிறிய அளவிலான முட்டைகள் விநியோகம், சத்துமாவில் குறைபாடு என கிறிஸ்டி நிறுவனத்தின்மீது தொடர்ந்து புகார்கள் சுமத்தப்பட்டாலும், ஆட்சியில் இருந்தவர்களின் ஆசீர்வாதம் இருந்ததால் தப்பித்து வந்தனர். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடர்ச்சியான ரெய்டுகள் நடந்தபோது, கிறிஸ்டி நிறுவனத்தின்மீது அதிகாரிகள் கை வைக்கவில்லை. இப்போது ரெய்டு நடத்தப்படுவதன் பின்னணி மிக முக்கியமானது" என்கின்றனர் விரிவாக.

ஓ.பன்னீர்செல்வம்அதேநேரம், அ.தி.மு.க-வின் முன்னணி நிர்வாகிகள் இந்த விஷயத்தை வேறு மாதிரியாகக் கவனிக்கின்றனர். " அ.தி.மு.க-வில் அணிகள் இணைந்த பிறகும், முதல்வர் பதவியை நோக்கியே ஓ.பன்னீர்செல்வம் காய்களை நகர்த்தினார். ஆனால், பதவியை விட்டுத்தருவதற்கு எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை. நிதி அமைச்சர், வீட்டு வசதித்துறை என வலுவான துறைகளை மட்டும் வாங்கிக் கொண்டார் ஓ.பி.எஸ். அடுத்து வந்த நாள்களில், அரசு விழாக்களின் அழைப்பிதழ்களிலும் மேடைகளிலும் ஓ.பி.எஸ் புறக்கணிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதற்கு ஆதாரமாக, அமைச்சர் பென்ஜமின் நடத்திய அரசு விழாவின் அழைப்பிதழையும் சுட்டிக்காட்டினர். அதேபோல, 'அரசு ஒப்பந்தங்களிலும் பன்னீர்செல்வம் ஆட்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம்' என வாய்மொழியாக எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டதாகவும் தகவல் வெளியானது. வெளி உலகின் பார்வைக்கு இணைந்த கைககள் போல இவர்கள் தென்பட்டாலும், தாமரை இலை தண்ணீரைப் போலத்தான் இருவரும் செயல்பட்டுவருகின்றனர்.

இது ஒருவகையில் பா.ஜ.க மேலிடம் வைக்கும் செக்காகவே பார்க்கின்றனர் கொங்கு மண்டல அமைச்சர்கள். இருவரும் முட்டிக்கொண்டிருந்தால்தான், தங்களுக்கு லாபம் என அவர்கள் நினைக்கின்றனர். இதில், எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காக பன்னீர்செல்வத்துடன் கைகோத்திருக்கிறார் பா.ஜ.க-வின் முக்கிய ஆலோசகர் ஒருவர். இவர்தான் பன்னீர்செல்வத்தைத் தர்மயுத்தத்துக்குத் தயார்படுத்தியவர். அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல் ஆணையம் அண்மையில் அங்கீகாரம் அளித்தது, கட்சிக்குள் பன்னீர்செல்வத்தின் கரத்தை பலப்படுத்திவிட்டது. இதன் அடுத்தகட்டமாக, எடப்பாடி அரசை ஓர் ஊழல் அரசாங்கமாகக் காட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதே கிறிஸ்டி நிறுவனம் தி.மு.க ஆட்சியிலும் கோலோச்சியதால், ஒரே நேரத்தில் தி.மு.க-வையும் எடப்பாடியையும் வீழ்த்துவதற்கு கிறிஸ்டியை ஓர் ஆயுதமாகக் கையில் எடுத்துவிட்டார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது. விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டுக்குப் பிறகு, 14 மாதங்கள் கழித்து கிறிஸ்டி நிறுவனம் குறிவைக்கப்பட்டிருக்கிறது. அரசியல் ஆலோசகரின் ஆட்டத்துக்கு பன்னீர்செல்வம் துணைபோகிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது" என்றார் விரிவாக.

'அடுத்து வரக்கூடிய நாள்களில், ஓ.பி.எஸ்ஸை எடப்பாடி பழனிசாமி எப்படிக் கையாளப்போகிறார் என்பதைப் பொறுத்து, அதிகாரத்தை நோக்கிய அடுத்தக்கட்ட பாய்ச்சலை கவனிக்கலாம்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்!