img/728x90.jpg
மூன்று அறிக்கைகள்... முடிவுக்கு வருமா தாதுமணல் கொள்ளை?!

மூன்று அறிக்கைகள்... முடிவுக்கு வருமா தாதுமணல் கொள்ளை?!

 தென் தமிழகக் கடற்கரையில் தாதுமணல் கொள்ளை என்ற குற்றச்சாட்டு குறித்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் நேரடி விசாரணை மூலமாகச் சூடுபிடித்து வரும் நிலையில், அடுத்தடுத்து பல்வேறு பகீர் தகவல்கள் ஆவணங்களாக வெளிப்பட ஆரம்பித்துள்ளன. அதைப் பற்றிய கட்டுரையின் கடந்த இதழ் தொடர்ச்சி இதோ...

 
அணுசக்தி சட்டம் 1962-ன் கீழ் வரையறுக்கப்பட்டக் கனிமமாக மோனசைட் உள்ளது. எனவே, மோனசைட்டை எந்த வகையிலும் கையாளும் அனுமதி தனியார் நிறுவனங்களுக்கு இல்லை. இந்தியன் ரேர் எர்த் லிமிடெட் (IREL) என்ற பொதுத்துறை நிறுவனம் மட்டுமே, இதைக் கையாளவும் உற்பத்தி செய்யவும் அனுமதி பெற்ற ஒரே நிறுவனம். அப்படியிருக்க, வி.வி மினரல்ஸ் உள்ளிட்ட தனியார் தாதுமணல் நிறுவனங்களிடம், மோனசைட் டெய்லிங்ஸ் சார்ந்த தாதுமணல், அளவுக்கு அதிகமாகக் குவிந்து கிடப்பது ஆச்சர்யமே. 
 
கண்டுகொள்ளாத அரசுத் துறைகள்!
 
மோனசைட் செறிவுள்ள மற்ற கனிமங்களை ஏற்றுமதி செய்தால்கூட, அவற்றில் மோனசைட் சதவிகிதச் சமன் 0.25 என்ற அளவைத் தாண்டக் கூடாது என்பது அணுசக்தித் துறை விதித்திருக்கும் கட்டுப்பாடு. இது, 2007-ம் ஆண்டில் தனியார் கம்பெனிகளின் லாபியால் விலக்கிக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. அணுசக்தித் துறை இப்போது ஏ.இ.ஆர்.பி அமைப்பு மூலம் மோனசைட் டெய்லிங்ஸின் கதிர்வீச்சை மட்டுமே கண்காணிக்கிறது. மோனசைட் உள்ள டெய்லிங்ஸ் எவ்வளவு உள்ளது, எந்த இடத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது, வருடாவருடம் அதன் அளவு என்னவாக உள்ளது என்பதையெல்லாம் கண்காணிப்பதில்லை.
 
 
 
‘‘தனியார் நிறுவனங்கள் மோனசைட் உற்பத்தியில் ஈடுபட அனுமதி இல்லாதபோது, சாஹு குழுவால் சேகரிக்கப்பட்ட 118 மாதிரிகளில் (53% மாதிரிகள்) எப்படி மோனசைட் அளவு, 2007 வரை வரையறுக்கப்பட்டிருந்த அளவைவிட பல மடங்கு அதிகமிருக்க முடியும்? மோன சைட்டையோ, மோனசைட் அளவு அதிகம் கொண்ட டெய்லிங்ஸையோ, மற்ற தாதுக்களின் பெயரில் தனியார் தாதுமணல் கம்பெனிகள் கடத்தின என்று சொல்லப்படும் குற்றச் சாட்டுக்கு இது வலுச் சேர்க்கிறது’’ என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்!
 
ஏற்கெனவே நீதிமன்ற அறிவுரையாளர் சுரேஷின் அறிக்கை, ககன்தீப் சிங் பேடி அறிக்கை ஆகியவற்றில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், கடந்த 20 வருடங்களில் பெருமளவு தாதுமணல் சட்டத் துக்குப் புறம்பாக அள்ளப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ள சூழலில், மோனசைட் டெய்லிங்ஸ் குறித்துத் தற்போது வெளிவந்துள்ள தகவல்கள்  அதிர வைக்கின்றன! 
 
தடைக்குப்பின் பிடிபட்ட கடத்தல் தாதுமணல்
 
 சேரன்மாதேவி சப்-கலெக்டரால், 11.08.2016 அன்று ராதாபுரம் வட்டம், கரைசுத்துப் புதூரில், நான்கு வாகனங்களில் கடத்தப்பட்ட தாதுமணல் பிடிக்கப்பட்டது. உவரி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது (FIR 83 of 2016).
 
 07.12.2016 அன்று TN 52 B7188 என்ற எண் கொண்ட வி.வி மினரல்ஸ் கம்பெனியின் லாரி, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில், சட்டவிரோதமாக இல்மினைட் கடத்தியதாகப் பிடிபட்டது. சூளகிரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது (FIR No. 516/16)
 
 ஏற்றுமதிக்கு சுங்கத்துறை விதித்த கெடுபிடிக்குப் பிறகு, தூத்துக்குடி சுரங்கம் மற்றும் கனிமத் துறை துணை இயக்குநரிடம் போலியான சான்றிதழ் பெற்று, 420 டன் தாதுமணலை வி.வி மினரல்ஸ் கடத்த முயன்றது. இது தூத்துக்குடி சுங்கத் துறை ஆணையரின் விசாரணையில் அம்பலமானது. இதைத் தொடர்ந்து அந்தக் கனிமத் துறை துணை இயக்குநர் தமிழக அரசால் சஸ்பெண்டு செய்யப்பட்டார் (G.O. (D) No.45 Industries (E1) Department, dated 21.03.2017)
 
 வி.வி மினரல்ஸ் நிறுவனம் கொச்சி துறைமுகம் வழியே கடத்த முயன்ற 3,107 டன் கார்னெட், துறைமுகக் கெடுபிடியால் (Issuance of Trade Facility-13/2016) தடைபட்டது. இதை எதிர்த்து வி.வி மினரல்ஸ் நிறுவனம், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறது.
 
அள்ள அள்ள ஊழல்!
 
2017 ஜூன் 20-ம் தேதியிட்ட அறிக்கையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 2000-01 முதல் 2015-16 வரையிலான காலகட்டத்தில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் அள்ளப்பட்டு, ஏற்றுமதி செய்யப்பட்ட வெவ்வேறு கனகனிமங்கள் (தாதுமணல்) குறித்த விவரங்களைத் தொகுத்திருக்கிறார் நீதிமன்ற அறிவுரையாளர் வீ.சுரேஷ். IBM - Indian Bureau of Mines, AMD மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் சுரங்கம் மற்றும் கனிமத்துறை ஆகியவற்றிடமிருந்து பெற்ற அதிகாரபூர்வமான தகவல்கள் அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்டு, இந்த விவரங்கள் தொகுக்கப் பட்டுள்ளன.
 
அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமாக அள்ளுவது ஒருபுறம் இருக்க, அனுமதிக்கப்பட்ட சரக்குப் போக்குவரத்து அளவைத் தாண்டியும், தாதுமணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2013-ம் ஆண்டில் தாதுமணல் அள்ளவும், எடுத்துச்செல்லவும், அரசாணைகள் மூலம் விதிக்கப்பட்ட தடையானது வெறும் காகிதத்தில் மட்டுமே இருந்துள்ளது. அரசாணை போட்ட பிறகும் தொடர்ந்து தாதுமணல் கடத்தப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முக்கியமாக, பல ஆண்டுகளாக மணல் அள்ளுவது தொடங்கி ஏற்றுமதி வரை ஊழல்கள் நடந்துள்ளது பற்றியும், இதில் சுரங்கத்துறை, மாவட்ட ஆட்சியர்கள், சுங்கத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்களின் பங்கு பற்றியும் அதிர்ச்சியளிக்கும் கேள்விகள் எழுந்துள்ளன.
 
இப்படி முறைகேடுகள் அனைத்தும் அரசுத்துறை அறிக்கைகள் மூலமாகவே நீதிமன்றத்தில் வெளிப்பட்டுவருகின்றன. அணுசக்தி பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இந்த வழக்கின் முடிவு  உலக நாடுகளையும் உலுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ‘வடகொரியா, சீனா போன்ற நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து மோனசைட் கடத்தப்படுகிறது’ என்று உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே இருக்கின்றன. அவற்றுக்கு இன்னும் விளக்கம் கிடைத்தபாடில்லை.
 
‘இந்திய அணுசக்தித் துறை, சுரங்க அமைச்சகம் உள்பட மத்திய, மாநில அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகளின் பங்கு இல்லாமல் நீண்டகாலம் தாதுமணல் கொள்ளை நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்த விசாரணை ஒரு முடிவை எட்டுவதற்கு, தொடர்ச்சியான நீதிமன்றக் கண்காணிப்பு அவசியம். எனவே, தாதுமணல் விவகாரத்தில் உயர் நீதிமன்ற மேற்பார்வையில், சிபிஐ-யின் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று தன் அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளார் வீ.சுரேஷ்.
 
 
 
வி.வி.மினரல்ஸின் விளக்கம்!
 
தாதுமணல் கடத்தல் தொடர்பான நீதிமன்ற அறிக்கைகள் மற்றும் வழக்குகள் பற்றி வி.வி.மினரல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் நீண்ட விளக்கம் ஒன்று தரப்பட்டுள்ளது. ‘உலகின் எந்த மூலையிலும் மோனசைட் அணுகுண்டு உற்பத்திக்கோ, அணுமின் உற்பத்திக்கோ பயன்படுத்தப்படுவதில்லை. இப்போதுதான் இதுதொடர்பான ஆராய்ச்சிகள் ஆரம்பக் கட்டத்தில் உள்ளன. இந்தியாவிலிருந்து தோரியம் கடத்தப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என நாடாளுமன்றத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. தாதுமணல் சுரங்கப் பணி செய்வது மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எந்த நிலையிலும் ஏற்றுமதி தடைசெய்யப்படவில்லை. ஏற்றுமதி என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் வராது.
 
நீதிமன்ற அறிவுரையாளர் வீ.சுரேஷின் அறிக்கையும், ககன்தீப் சிங் பேடி அறிக்கையும், சாஹு கமிட்டி ஆய்வறிக்கையும் சட்ட விதிகளில் கூறியபடியும், இந்திய அரசு வகுத்துள்ள நெறிமுறைப்படியும், உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைப்படியும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிப்பு அனுப்பி அவர்களது முன்னிலையில் அளவீடு மேற்கொண்டு தயாரிக்கப்பட்டவை அல்ல. ஆனாலும், சாஹு கமிட்டி அறிக்கை கூறியுள்ளவற்றில் ஐந்தாறு விஷயங்களைத் தவிர மற்ற எல்லாமே எங்கள் நிலையை உறுதிசெய்வ தாகவே உள்ளன. இதை நீதிமன்றத்திலேயே எங்கள் வழக்கறிஞர் கூறியுள்ளார். 
 
தாதுமணல் தொழில் நிறுத்தத்தால் மாநில அரசுக்கு ஆண்டுக்குச் சுமார் 780 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுக்குச் சுமார் 2,000 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி இழப்பு. நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தத் தொழிலால் வேலைவாய்ப்பு பெற்றிருந்த சுமார் 50,000 தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப் பட்டுள்ளார்கள்’ என்பது இந்த நிறுவனங்கள் சொல்லும் வாதம்.
 
தர்மம் மறுபடி வெல்லும்!
 
இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் வேகமெடுத்து விரைவில் இறுதிக்கட்டத்தை அடையும் என நம்பப்படுகிறது. கண்மூடித்தனமாக இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்கள் தண்டிக்கப்பட்டு, அவர்களின் முடிவு, பிறருக்கு ஒரு பாடமாக அமையும் வகையில் தீர்ப்பு வரும் என்று நம்புவோம்.