img/728x90.jpg
‘ஒருத்தரும் வரேல’ ஆவணப்படத்துக்காக... திவ்யபாரதியைத் தேடிவரும் போலீஸ்!

‘ஒருத்தரும் வரேல’ ஆவணப்படத்துக்காக... திவ்யபாரதியைத் தேடிவரும் போலீஸ்!

இன்னும் வெளியிடப்படாத ஓர் ஆவணப்படத்துக்காக, அதன் இயக்குநரும் வழக்கறிஞருமான திவ்யபாரதியைக் கைது செய்ய போலீஸார் துடிக்கிறார்கள். 

மதுரையைச் சேர்ந்த திவ்யபாரதி, ‘கக்கூஸ்’ என்ற ஆவணப்படத்தைக் கடந்த ஆண்டு வெளியிட்டார். அந்த ஆவணப்படம், மலம் அள்ளும் தொழிலாளர்களின் பிரச்னை குறித்து ஒரு விவாதத்தைக் கிளப்பியது. அந்தப் படத்துக்காக, திவ்யபாரதி பல நெருக்கடிகளைச் சந்தித்தார். ஒகி புயல் தாக்கியபோது குமரி மாவட்ட மீனவர்கள் சந்தித்த பாதிப்புகளை ‘ஒருத்தரும் வரேல’ என்ற பெயரில் இப்போது ஆவணப்படமாக எடுத்துள்ளார் திவ்யபாரதி. அதை வெளியிடவுள்ள நேரத்தில்தான்,  கைது செய்வதற்காக போலீஸார் தன்னைத் துரத்துவதாக அவர் புகார் எழுப்பியுள்ளார்.

 

மதுரை அரசு சட்டக்கல்லூரியில் படித்த திவ்யபாரதி, அப்போதே சமூகப் பிரச்னைகளுக்காகப் பல போராட்டங்களை முன்னெடுத்தார். சட்டப்படிப்பை முடித்தும், சில வழக்குகள் காரணமாக வழக்கறிஞராக அவர் பதிவுசெய்ய, பார் கவுன்சிலில் தடை விதிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில்தான், அந்தத் தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த வாரம், தம்மை ஒரு வழக்கறிஞராகப் பதிவுசெய்துகொண்டு அவர் நீதிமன்றம் செல்லத் தொடங்கினார்.

 

இந்த நிலையில், “ஜூலை 2-ம் தேதி அதிகாலையில், நான் வீட்டில் இல்லாத நேரத்தில் ஏராளமான போலீஸாரும், உளவுத்துறையினரும் ஏதோ ஒரு பெரிய குற்றவாளியைப் பிடிப்பதைப்போல என் வீட்டைச் சுற்றிவளைத்தனர். இவர்கள் சேலம் போலீஸார். ‘ஒருத்தரும் வரேல’ ஆவணப்படம் பற்றி திவ்யபாரதியை விசாரிக்க வேண்டும் என்று கூறிவிட்டு, வீடு முழுவதும் சோதனை செய்துள்ளனர். என் அப்பாவை உளவுத்துறையினர் மிரட்டியுள்ளனர்’’ என்று திவ்யபாரதி தன் முகநூலில் கூறியிருந்தார்.  

 

பிறகு அதே போலீஸார், மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் திவ்யபாரதியிடம், ‘உங்களிடம் விசாரிக்க வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தி அழைத்துள்ளனர். இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் நடந்தது. அங்கு, வழக்கறிஞர்கள் குழுமிவிட்டனர். அதனால், போலீஸால் ஒன்றும் செய்ய முடியவில்லை. திவ்யபாரதி, வழக்கறிஞர் சேம்பரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டார். அங்கிருந்து போலீஸார் சென்றுவிட்டனர். போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (த.மு.எ.க.ச) கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து த.மு.எ.க.ச-வின் மாநிலத்தலைவர் சு.வெங்கடேசன், “திவ்யபாரதி, த.மு.எ.க.ச-வின் மதுரை மாவட்டக்குழு உறுப்பினராக உள்ளார். இவர், ஒகி புயல் பாதிப்புகள் பற்றி ‘ஒருத்தரும் வரேல’ என்ற ஆவணப்படத்தை எடுத்துள்ளார். சமீபத்தில், அதன் டீஸர் வெளியானது. ஜூலை 2-ம் தேதி அதிகாலையில், பெண் காவலர்கள் உள்பட 15-க்கும் மேற்பட்ட போலீஸார் திவ்யபாரதியின் வீட்டைச் சோதனையிட்டுள்ளனர். ‘ஒருத்தரும் வரேல’ படத்தின் வீடியோ எங்கே இருக்கிறது என்று கேட்டு வீடு முழுவதும் தேடியுள்ளனர். மாவட்ட நீதிமன்றம் சென்றிருந்த திவ்யபாரதியின் வாகன சாவியைப் பிடுங்கிக்கொண்டு, ‘உங்களிடம் விசாரிக்க வேண்டும்’ என்று மிரட்டியுள்ளனர்.

 

 

 

அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் ஒருவரின் கலைச்செயல்பாட்டு உரிமையில் போலீஸார் தலையிடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. உரிய ஆவணங்கள் இல்லாமல் வீட்டைச் சோதனையிடுவதும், விசாரணைக்கு வலுக்கட்டாயமாக அழைப்பதும், நீதிமன்ற வளாகத்திலேயே அத்துமீறி நடப்பதும் சட்டமீறலாகும். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். சம்பந்தப்பட்ட போலீஸார்மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். 

 

தற்போது, த.மு.எ.க.ச-வினர் மற்றும் வழக்கறிஞர்களின் பாதுகாப்பில் திவ்யபாரதி இருந்துவருகிறார். அவரை, ‘ஒருத்தரும் வரேல’ ஆவணப்படம் வெளியிடப்படுவதற்கு முன்பாகக் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டிவருகிறார்கள். 

 

- செ.சல்மான்

 

PDF

PDF Link