img/728x90.jpg
முகிலன் முதல் பாலபாரதி வரை கைது பின்னணி நிறையும் சிறைகளும்... தொடரும் போராட்டங்களும்

முகிலன் முதல் பாலபாரதி வரை கைது பின்னணி நிறையும் சிறைகளும்... தொடரும் போராட்டங்களும்

 விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் கூறப்போன முன்னாள் சி.பி.எம்., எம்.எல்.ஏ., பாலபாரதி இன்று (7.7.2018) கைதாகியிருக்கிறார். இன்னும் எத்தனை கைவிலங்குகள் வைத்திருக்கிறது இந்த அரசாங்கம்?

 
கைது நடவடிக்கை என்ற ஒற்றை வார்த்தை, தமிழகத்தில் இன்று சாதாரணமாகிருக்கிறது. 'யாரையும் விசாரணைக்கு அழைக்கலாம், விசாரிக்காமலே கைது செய்யலாம், இந்த சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் கைது செய்து ஆஜர் செய்கிறோம் என்று கோர்ட்டில் நிறுத்தி சிறைக்கு அனுப்பலாம்' என்ற நிலை காணப்படுகிறது. யார் எதிர்க்கேள்வி எழுப்பினாலும் கைது தான். எழுதினாலும் கைதுதான். சூழலியலாளரான முகிலன் கைதாகி இன்றோடு 280-வது நாள் என்ற போஸ்டர்கள், கடந்த 23.6.2018-ம் தேதி கரூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் ஒட்டப் பட்டிருந்தது. இன்றைய தேதிப்படி 296 நாட்களாக முகிலன் சிறையில் இருக்கிறார்., 300-வது நாள் தொட்டு விடும் தூரத்தில்தான் இருக்கிறது. முகிலனுக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் நிமிடங்களில் காணாமல் போனது போல், போஸ்டரை ஒட்டிய சிலர் கடந்த 15 நாட்களாக இருக்கும் இடம் தெரிய வில்லை என்ற தகவல், முகிலன் கைது சம்பவத்தை விட அதிக கிலியடிக்கிறது. 'போஸ்டரை ஒட்டியதால் போலீஸ் தேடுகிறது என்ற வார்த்தையைக் கேட்டவுடன் அந்த இளைஞர்கள் அன்று முதல் ஆளையே காணோம். போலீஸ் பிடித்துக் கொண்டு போவது ஒருபக்கம் என்றால், போலீஸ் பிடிக்குமோ என்ற பயத்தில் காணாமல் போகிறவர்கள் அதிகமாகி விட்டனர்' என்று சல்லிய குரலில் பேசுகின்றனர் அரவக்குறிச்சி, கரூர் வாசிகள். போஸ்டர்கள் ஒட்டப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு (21.6.2018) முன்னர்,  பாளையங்கோட்டை சிறைக்குப் போய் இன்னொரு சம்மனை, போலீஸார் முகிலனிடம் கொடுத்துள்ளனர். 'அரவாக்குறிச்சியின், சீத்தாப்பட்டி கிராமத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதால் இந்த சம்மன்' என்று அப்போது சொல்லப் பட்டிருக்கிறது.
 
"அம்பேத்கர், பாரதிதாசன் பிறந்த நாள் பொதுக்கூட்டம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் பெரியார் திராவிடர் மாணவர் இயக்கம் சார்பில் நடந்தபோது அதில் பங்கேற்று முகிலன் பேசியுள்ளார். "தமிழ்நாடு என்ற நாட்டை இல்லாமல் அழிக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு சதிவேலைகளை இந்திய அரசு செய்து வருகிறது. நியூட்ரினோ, ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன் போன்ற நாசகாரத் திட்டங்களை தமிழகத்திற்கு இந்திய அரசாங்கம், தொடர்ந்து கொண்டு வருகிறது" என்று முகிலன் பேசியதாகப் போலீஸ் தரப்பில் குற்றஞ் சாட்டப்பட்டது. அரவக்குறிச்சி போலீஸ் எஸ்.ஐ., அமிர்தலிங்கம் 2017, டிசம்பர்-17 அன்று கொடுத்த புகாரில், இன்ஸ்பெக்டர் ஜெயமோகன், முகிலன் மீது 537/17ச/பி 124(ஏ), 153(ஏ)(1), 505(1) (பி) ஐபிசி ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தார். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் செப்டம்பர், 29, 2016-ல் மணல் குவாரிகளை ரத்து செய்யக்கோரி சட்டவிரோதமாக ஒன்று கூடி அரசு உத்தரவை மீறி ஊர்வலமாக வந்து உண்ணாவிரதம் இருந்ததாக... இப்படிப் போனதாக, வந்ததாக முகிலன் மீது அடுத்தடுத்து ஏராளமான வழக்குகள் பாய்ந்துள்ளன.குளோபல் விட்னெஸ் அமைப்பு, கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், "உலகம் முழுக்க சுற்றுச்சூழலுக்காகவும், ஆதிவாசிகளுக்காகவும் அரசுகளையும், பெரு நிறுவனங்களையும் எதிர்த்துப் போராடிய சூழலியலாளர்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்" என்று சுட்டிக்காட்டியதோடு  அதற்கான, ஆதாரங்களையும் வெளியிட்டது. '2015-ல் 185 பேரும், 2016-ல் இருநூற்றுச் சொச்சம் பேரும் அந்தவகையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்' என்றது, குளோபல் விட்னஸ் அமைப்பு. 2017-ல் இது மேலும் கூடுதலாகலாம் என்றும் சொல்லி அதிர வைத்துள்ளது. அந்தக் கணிப்பு பொய்க்கவில்லை, 'தி கார்டியன்' என்ற ஊடக நிறுவனமும், குளோபல் விட்னஸ் அமைப்பும் நடத்திய ஆய்வில், '2017-ம் ஆண்டில் மட்டுமே உலகம் முழுவதிலும், 134 சூழலியாளர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்' என்ற தகவல் கிடைத்துள்ளது. முகிலன், பியூஷ்மானஷ், பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் போன்றோர் சூழலியலாளர்கள்தான் என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். சூழலியலாளர்களை கொன்று குவித்த நாடுகள் வரிசையில், மெக்ஸிகோ, பிரேசில், பெரு, கொலம்பியா, ஹண்டுராஸ், நிகாரகுவே போன்றவை மட்டுமல்ல இந்தியாவும் இருக்கிறது. மக்கள் நலன் சார்ந்து சிந்திப்பதை வெளிப்படுத்தும் அனைவருமே ஏதாவதொரு குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப் படுகிறார்கள். 
 
 
எட்டுவழிச்சாலை சாலை ரூட்
 
சூழலியலாளர்கள் மட்டுமல்ல மதுரை நந்தினி போன்ற மது விலக்கிறகு எதிரான போராளிகளும் சிறைக்கு வெளியே இருக்க முடிவதில்லை. மதுவிலக்குக் கோரும் தொடர் போராட்டத்தை, தந்தை ஆனந்தன் துணையுடன் நடத்திவரும் நந்தினி கைதுக் கணக்கை, செஞ்சுரியில் சேர்க்கும் விதமாகக் கடந்த மாதம் 24-ம் தேதி, மீண்டும் போலீஸ் கைது செய்தது. மதுவிலக்கு அமல், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் போன்ற கோரிக்கையுடன், பிரதமர் வீடு முன்பாக போராட்டம் நடத்த தந்தையுடன் கிளம்பியவரை, மதுரை புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் கைது செய்தார். அதேபோல், தூத்துக்குடி கலவரத்துக்குக் காரணம் என்று கூறி, மக்கள் உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளரான மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மற்றும் வழக்கறிஞர் அரிராகவன் உள்ளிட்ட 100 பேர் மீது வழக்கு... அரசின் 144 தடை உத்தரவை எந்த முன் அனுமதியும் பெறாமல் மீறியதோடு, போலீஸ் தடுப்புகளை சேதப்படுத்தினர், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததோடு, அரசு வாகனங்களை எரித்து குற்றம் புரிந்தனர் என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சென்னைக்கு வந்திருந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதனை, சென்னையிலேயே கைது செய்து மதுரைக்குக் கொண்டு சென்றனர். வாஞ்சிநாதன் மீதான (u/sec 147, 148, 188, 353, 506 (2) and sec. 3 TNPPDL Act) செக்‌ஷன்களுக்குக் குறைவில்லை. சேலம் டூ சென்னை  எட்டுவழிச் சாலைத் (277.3 கி.மீ. தூரம்) திட்டத்தை எதிர்த்து நிலங்களை அரசுக்குத் தரமறுக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. நடிகர் மன்சூர் அலிகான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், சூழலியலாளர் பியூஷ் மானுஷ், சமூக செயற்பாட்டாளர் வளர்மதி, ஆம் ஆத்மி வசீகரன், பூவுலகின் நண்பர்கள், மக்கள் சிவில் உரிமைக் கழகம், அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் கண்டனக்குரல் எழுப்பிய வகையில் சிறைவாசமும், செக்‌ஷன் நேசமும் கிடைத்தபடி இருக்கிறது. விவசாயிகள் கறுப்புகொடிகளை வீடுகளில் ஏற்றியதைப் படம் பிடித்த தமிழகச் செய்தியாளர்களும், கேரளச் செய்தியாளர்களும் போலீஸாரால் மிரட்டப்பட்டும், சிறை பிடிக்கப்பட்டும் அவதிப்பட்டனர். கடும் எதிர்ப்பு கிளம்பிய பின்னரே விடுவிக்கப் பட்டார்கள். அதே போல், விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் கூறப்போன முன்னாள் சி.பி.எம்., எம்.எல்.ஏ., பாலபாரதி நேற்று (7.7.2018) கைதாகியிருக்கிறார். ஏற்கெனவே சி.பி.எம்.மில் முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு இதே விவகாரத்தில் கைதாகியுள்ளார்.  இன்று, கவிக்கோ மன்றத்தின் உரிமையாளரான 71 வயது முஸ்தபா மீது மயிலாப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் (426/18 U/s 34 (1)TNP act) வழக்குப் பதிவு செய்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த கருத்தரங்கம் சென்னை கவிக்கோமன்றத்தில் நேற்று முந்தினம் நடைபெற்றதுதான் இதற்குக் காரணம் என்றெல்லாம் நம்மால் காரணம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது...  'கவிக்கோ மன்றம் முறைப்படி உரிமை பெற்று இயங்கவில்லை' என்று  போலீஸ் சொல்கிற காரணத்தை மட்டும் கேட்போம்.