img/728x90.jpg
8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக் கேட்ட பாலபாரதி கைது..!

8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக் கேட்ட பாலபாரதி கைது..!

 தருமபுரி மாவட்டத்தில், 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும், பொதுமக்களையும் கிராமங்கள் தோறும் நேரடியாகச் சென்று சந்தித்து கருத்துக் கேட்ட பாலபாரதியை தருமபுரி மாவட்ட போலீஸார் கைதுசெய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
பாலபாரதி மக்கள் குறை கேட்பு
 
சேலம் டு சென்னை இடையே அமைய உள்ள 8 வழி பசுமைச்சாலை, தருமபுரி மாவட்டத்தில் 53 கிலோ மீட்டர் பயணிக்கிறது. இந்தத் திட்டத்துக்காக, தருமபுரி மாவட்டத்தில் 919.24 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த உள்ளது. இதற்காக, தருமபுரி மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் பூர்வீகக் குடியிருப்புகளை எந்தவித முன்னறிவிப்புமின்றி 70 முதல் 75 மீட்டர் அகலத்துக்கு நிலத்தை அளவீடு செய்து, கல் நட்டுவருகிறது. இதனால், தருமபுரி மாவட்டத்தில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் வீடுகள், விவசாய நிலங்கள், தென்னை மரங்கள், தேக்கு மரங்கள், ஏரி, குளங்கள் நீரோடைகள் எனப் பல்வேறு நீர்நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
 
 
இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கருத்துகளைக் கேட்ட்றிந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளை ஏ.பள்ளிபட்டி காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
 
இதுகுறித்து பாலபாரதியிடம் பேசினோம். ''பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்துள்ள கோம்பூரில், விவசாயி வசந்தா என்ற பெண்மணியைச் சந்தித்தோம். அவர், இந்த நிலமும் வீடும்தான் எங்கள் வாழ்வாதாரம். இந்த நிலத்தில் இருக்கம் பாக்கு மரமும், தென்னந்தோப்பும் எங்கள் வாழ்க்கையின் நம்பிக்கை. இந்த நிலத்தையும் வீட்டையும் 8 வழிச் சாலைக்காக எடுத்துக்கொண்டால், எதை நம்பி நாங்க வாழ முடியும் என்று எதிர்காலத்தை நினைத்து கண்ணீர் வடித்தார்.
 
பாலபாரதி கைது
 
அடுத்து, சில விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டுக்கொண்டு, காளிப்பேட்டை கிராமத்துக்குச் சென்றபோது, பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்தவேலு, தடை விதிக்கப்பட்டுள்ளது; விவசாயிகளைச் சந்திக்கக்கூடாது என்று கூறினார். விவசாயிகளைச் சந்திக்கக் கூடாது என்பதற்கு தங்களிடம் ஆர்டர் இருக்கா..? என்று கேட்டோம். இல்லை எனப் பதில் கூறிய ஆய்வாளர் சென்றுவிட்டார். பிறகு, கோட்டைமேடு பகுதி விவசாயி முருகேசனைச் சந்தித்துப் பேசினோம். நாங்க விவசாயத்தை நம்பி வாழ்கிறோம். ஆனால், எங்களுக்காக யாருமே குரல் கொடுக்க மாட்டேங்கிறாங்க. எங்களைத் தனிமைப்படுத்தி, விவசாயிகளைக்கூட ஒன்று சேர விடாமல் தடுக்கின்றனர். எதிர்த்துப் பேசினால் நக்சலைட் என்று குண்டர் சட்டத்துல கைதுசெய்துவிடுவோம் என்று போலீஸ் மிரட்டுவதாக வேதனைப்பட்டார்.
 
 
அப்போது, அரூர் டிஎஸ்பி., செல்லப்பாண்டி தலைமையில் பெரும் போலீஸ் படை வந்து, விவசாயிகளிடம் அனுமதியின்றி கருத்துக் கேட்கக் கூடாது என்று தடுத்தார். 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து குறைகேட்க நாங்கள் எதற்கு அனுமதி வாங்க வேண்டும். ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்தினால்தான் அனுமதி வாங்க வேண்டும். மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்கக் கூடவா அனுமதி வாங்க வேண்டும். அப்படிப்பட்ட அனுமதி வாங்கவேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது. மீறினால் கைது செய்வீர்களா... செய்துகொள்ளுங்கள் என்று காவல்துறையின் அடக்குமுறையை மீறி மக்களிடம் குறைகேட்போம் என்று முழக்கமிட்டோம். ஆனால் மக்களிடம் குறைகளைக்கூட கேட்க முடியாதவாறு அரசாங்கமும் காவல்துறையும், என்னையும் மாவட்ட கட்சி நிர்வாகிகள் 14 பேரைக் கைதுசெய்து ஏ.பள்ளிபட்டி காவல் நிலையம் கொண்டுவந்துவிட்டனர்.
 
ஏ.பள்ளிபட்டி
 
பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு நிலத்தைக் கையகப்படுத்த மாநில அரசும், மாவட்ட வருவாய்த்துறையும் முறையாக விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஆனால், இத்திட்டம்குறித்து மக்களுக்கு எந்த வித முன்னறிவிப்பும், நோட்டீஸும் வருவாய்த்துறை கொடுக்கவில்லை. அதேபோல, 8 வழிச் சாலைக்காக ஆய்வுசெய்யப்பட்ட பாதையை விட்டுவிட்டு, சிலரின் விருப்பு வெறுப்புக்காக தற்போது மாற்றுப் பாதையை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. இதனால், தற்போது சில தனியார் ஆலைகள் நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் அளவீடு செய்துள்ளனர். இது, சிறு மற்றும் குறு விவசாய நிலங்களைப் பெரிதும் பாதித்துள்ளது. அரசின் பாரபட்சமான  அளவீட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன்.  இதுபோன்ற முறைகேடுகள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று மக்களைச் சந்திக்கவிடாமல், அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை தமிழக ஆட்சியாளர்கள், காவல்துறையை வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். இது, ஜனநாயக விரோதச் செயல்'' என்றார்.