img/728x90.jpg
எம்புள்ளைங்கள விடுதியிலேயே வெச்சிக்கோங்க!” - பரிதவித்த குழந்தைகள்... கலங்கும் தாய்

எம்புள்ளைங்கள விடுதியிலேயே வெச்சிக்கோங்க!” - பரிதவித்த குழந்தைகள்... கலங்கும் தாய்

 என் புள்ளைக இதுவரை வெட்டவெளியிலதான் படுத்துருக்கும்ங்க. அங்கே மூணு வேலையும் நல்ல சாப்பாடு கொடுக்கிறாங்க. அதனால்தான்  அங்கேயே இருக்கட்டும்னு எழுதிக்கொடுத்துட்டு வந்துட்டேன்."

“எம்புள்ளைங்கள விடுதியிலேயே வெச்சிக்கோங்க!” - பரிதவித்த குழந்தைகள்... கலங்கும் தாய்
''இதோ, இவன்தான் பெரியவன் ரித்திக் ரோஷன். வயசு மூணு ஆகுதாம். டேபிளுக்குப் பின்னால் ஒளிஞ்சுட்டு நிக்குறானே, அவன்தான் ரித்திக் ரோஷனோட தம்பி லோகேஷ், ரெண்டு வயசாம். பாவம்... புள்ளைங்க வந்ததிலிருந்தே சைலன்ட்டா இருக்குதுங்க. பெரிய பையனாவது அப்பப்போ ஏதாச்சும் வேணும்னு வாயைத் தொறக்குறான். சின்னவன் பேயடிச்ச மாதிரி பாத்துட்டே இருக்கான். முந்தா நாள்தானே வந்தாங்க. இன்னும் ரெண்டு நாள் போச்சுன்னா ஓரளவுக்குச் சரியாகிடும்” - குழந்தைகளைப் பராமரிக்கும் ஆயா சொல்ல, தங்களைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்றுகூட அந்தச் சின்னஞ்சிறு கிளிகளுக்குத் தெரியவில்லை. 
 
கடந்த திங்கட்கிழமை பூந்தமல்லி பேருந்து நிலையத்தில், இரண்டு குழந்தைகள் நீண்ட நேரமாகியும் யாருமற்று அழுதபடியே சுற்றிக்கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு, குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார்கள் காவல்துறையினர். வாட்ஸ்அப் வழியே பகிரப்பட்ட இந்தச் செய்தி பெரும் வலியை ஏற்படுத்தியது. பால் மனம் மாறாத பிஞ்சுகளை பேருந்து நிலையத்தில் விட்டுச்செல்லும் அளவுக்குப் பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் எப்படி மனம் வந்தது. காவல்துறையினர் மீட்பதற்குள் வேறு அசம்பாவிதம் நடந்திருந்தால்? கேள்வியும் பதைபதைப்பும் ஒரு பக்கம்; இரண்டு குழந்தைகளும் இப்போது எப்படி இருக்கிறார்கள் என அறியும் ஆவல் ஒரு பக்கம்... அவர்கள் இருவரும் தங்க வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் நலக் காப்பகத்துக்குச் சென்றோம்.
 
காப்பகத்தின் மாடியில் ரித்திக் ரோஷனும் லோகேஷும், சில சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள். இருவர் கண்களிலும் ஒரு வெறுமை. இரண்டு நாள்களுக்கு முன்புவரை தாயின் மடி அரவணைப்பில் இருந்தவர்கள், இன்று ஒரு புது இடத்தில். ரித்திக் ரோஷனின் தலையில் வெட்டுக்காயம் இருந்தது. சின்னவன் பால் குடியை மறந்திருப்பானோ என்றுகூட தெரியாது. எதையோ கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அருகில் சென்று அணைத்துக்கொண்டேன். பெரியவன் கொஞ்சம் பயந்தான். சின்னவனோ, என் சட்டைப் பையில் கையைவிட்டுத் துழாவினான். பேருந்துப் பயணச்சீட்டைக் கையில் எடுத்தவனின் முகத்தில் புன்னகை. “உங்களைப் பார்த்த பிறகுதான் இந்தப் பொடியன் வாயில் முத்து விழுகுது தம்பி” எனப் பூரிக்கிறார் அந்த ஆயா.
 
 
“குழந்தைகளின் பாதுகாப்பு கருதி நாங்க இங்கே யாரையும் அலோவ் பண்றதில்லே. பெற்றோர்கள் வந்தாலுமே, சரியான ஆவணங்கள் இல்லாமல் உள்ளே விட மாட்டோம். நீங்க விகடனிலிருந்து வர்றதால்தான் பெர்மிஷன் கொடுத்திருக்கோம். நீங்க குழந்தைகளோடு கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்றதுல ஆட்சேபனை இல்லே. ஆனா, போட்டோ மட்டும் எடுத்துடக்கூடாது” என்றபடி பேசுகிறார், பெயர் சொல்ல விரும்பாத காப்பகத்தின் உறுப்பினர்.
 
“திங்கக் கிழமை, பூந்தமல்லி ஸ்டேஷனிலிருந்து சைல்டு லைன் மூலமா ரெண்டு குழந்தைகளையும் கொண்டுவந்து சேர்த்தாங்க. டிரெயின்ல தனியா சுத்தும் குழந்தை, வீதியில் விடப்பட்ட குழந்தை, குப்பைத் தொட்டியில் கிடக்கும் குழந்தை என தினமும் எத்தனையோ குழந்தைகளை மீட்டு காப்பாத்திட்டிருக்கோம். அதெல்லாம் சொல்லமுடியாத மன வேதனை நிமிடங்கள். ரித்திக்கும் லோகேஷூம் இங்கே வந்தப்போ அழுதுட்டுதான் இருந்தாலும் அடுத்தடுத்த நாளே பழகிட்டானுங்க. நேற்று அந்தப் பசங்களின் அம்மா பதறியடிச்சு ஓடி வந்துச்சு. பேரு லெட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). புருசன்கிட்ட புள்ளைகளை விட்டுட்டு வேலைக்குப் போயிருக்கு. அந்தப் பாவியோ, பெத்த புள்ளைகளையே பஸ் ஸ்டாண்ட்ல விட்டுட்டுப் போயிருக்கான். அந்த அம்மா பிளாட்பாரத்துலதான் வாழ்க்கையை நடத்துதாம். புள்ளைகளை அழைச்சுட்டுப் போறியான்னு கேட்டதுக்கு, 'வேணாங்க, ரெண்டும் இங்கேயே இருக்கட்டும். நீங்களே பாத்துக்கோங்க'னு சொல்லிட்டுப் போயிடுச்சு. இந்தப் பச்சை மண்ணுங்க என்ன பெரிய பாரமா இருந்துடப் போகுதுங்க. இப்படி வேணாம்னு போயிடுச்சே” என்றவரின் குரலில் ஏக்கம்.
 
பரிதவிக்கும் தாய்
 
அங்கிருந்து கிளம்பி, லெட்சுமி வேலை பார்க்கும் வீட்டின் ஓனரைத் தொடர்புகொண்டு நேரில் சந்திக்க நினைத்தோம். “எங்க வீட்டுக்கு வராதீங்க சார். வேணும்னா அவளை ரயில்வே ஸ்டேஷனுக்கு அனுப்பிவைக்கிறேன்” என்றார். அடுத்த அரை மணி நேரத்தில், அருகில் உள்ள ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார் லெட்சுமி. 
 
“ஏம்மா, இப்புடி ரெண்டு புள்ளைகளையும் தவிக்க விட்டுட்டீங்க. என்னதான் நடந்துச்சு?” எனக் கேட்டதும், சத்தம்போட்டு அழ ஆரம்பித்துவிட்டார். “இந்தப் பாவியை மன்னிச்சுடுங்க. கால் வயிறு கஞ்சி குடிச்சாலும் புள்ளைகளை வெச்சுப் பாத்துக்குறதுதானே பாக்கியம். ஆனால், அந்தக் கொடுப்பினை எனக்கு வேண்டாம்ங்க. நம்பி வந்தவனே என் குணத்தைக் கலங்கப்படுத்திட்டான். இனி இந்தப் பாவியோடு வாழ்ந்து என் புள்ளைகளும் தெனம் தெனம் சாவ வேணாம்ங்க'' என்றவரின் வார்த்தைகளுக்குப் பின்னுள்ள வலியைப் புரிந்துகொள்ள முடிந்தது.
 
“என் வீட்டுக்காரரு பேரு மோகன். எனக்கு 16 வயசு இருக்கும்போதே அவரைக் காதலிச்சு வீட்டைவிட்டு வந்துட்டேன். அவர் மேலே இருந்த ஆசையில் கண்ணு மண்ணு தெரியாமல் கூப்பிட்ட எடத்துக்கெல்லாம் போனேன். நம்மளை நல்லா பார்த்துப்பாருன்னு நினைச்சேன். ஆனா, பிளாட்பாரத்துல தங்கவெச்சார். 'நம்பி வந்தாச்சு. இனி எங்கே போறது'னு பல்லைக் கடிச்சுட்டு பஸ் ஸ்டாண்ட்டுல வாழ்க்கைய ஆரம்பிச்சேன். மழைக்கும் வெயிலுக்கும் புள்ளைகளைத் தூக்கிட்டு கிடைக்குற எடத்துல ஒதுங்குவேன். போரூர் பஸ் ஸ்டாண்டு, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு, சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்னு நான் தங்காத இடமே இல்லே. தாலி கட்டுன புருஷன் ஆச்சேன்னு இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடினேன். பாவி மனுசன் திடீர்னு ஒருநாள் ஃபிரெண்டை கூட்டிட்டு வந்து, தனியா ஒதுங்கச் சொன்னார். குடிக்கிறதுக்குக் காசு வேணும்னு என்னை பாலியல் தொழிலுல தள்ளப் பாத்தாரு. நான் சுதாரிச்சுட்டு புள்ளைகளையும் தூக்கிட்டு வந்துட்டேன். புள்ளைகளை வளர்க்கிறதுக்கு அழகு எதுக்குன்னு தலைமுடியை வெட்டிக்கிட்டேன். அவரோ வேற ஒரு பொம்பளையோடு சகவாசம் வெச்சிருந்தாரு. ஒருநாள் அந்தப் பொம்பளையோடு வந்து, 'புள்ளைங்களை என்கிட்ட கொடுத்துடு. நாங்க ரெண்டு பேரும் நல்லாப் பாத்துக்குறோம்'னு சொன்னார். நாமதான் அனாதை  மாதிரி சுத்தறோமே, புள்ளைகளாவது நல்லா இருக்கட்டும்னு அவருகிட்ட கொடுத்துட்டு ஒரு வீட்டுல வேலைக்குச் சேர்ந்துட்டேன். ஒரு புருஷனா எனக்குத்தான் துரோகம் பண்ணிட்டாரு. புள்ளைங்களையாவது பத்திரமா பாத்துப்பாருன்னு நினைச்சேன். என் நெனப்புல இடி விழுந்துடுச்சு. என் மொதலாளி அம்மாதான் பேப்பர்ல என் புள்ளைக போட்டோவைப் பார்த்துட்டு சொன்னாங்க. பெத்த வயிறு எப்படி துடிச்சிருக்கும். அடிச்சு பெரண்டு பூந்தமல்லி ஸ்டேஷனுக்கு ஓடினேன். அவங்கதான் ஹோம்ல போய்ப் பார்க்கச் சொன்னாங்க. நானும் பார்த்தேன். அங்கே என் புள்ளைக நாலு சுவத்துக்குள்ளே காத்தாடிக்குக் கீழே படுத்துருந்துச்சுங்க. அதைப் பார்த்ததும் என் வயிறு குளுந்துடுச்சு. இன்னும் ஒரு வாரத்துல புள்ளைகளை மெட்ராசுக்கு அனுப்பிடுவாங்களாம். நான் மாசா மாசம் கெடைக்கிற காசுல ஏதாவது வாங்கிட்டுப்போய் பாத்துக்கலாம்னு இருக்கேன் சார். நான் பண்றது தப்பானு தெரியலே. என் பசங்களுக்கு மூணு வேலை சாப்பாடும் காத்தாடிக்குக் கீழே தூங்குற வாய்ப்பும் கெடைச்சிருக்கு. அதுங்க நல்லா இருக்கட்டும் அது போதும். நேரம் ஆகிடுச்சு நான் கௌம்பறேன். வேலை செஞ்சு நாலு காசு சேர்த்தாதான் சார், பசங்களுக்கு ஏதாவது நல்லது பண்ண முடியும்” என வழிந்தோடும் கண்ணீரை துடைத்துக்கொண்டே நகர்கிறார் அந்தத் தாய். 
 
நம்மால் அங்கிருந்து சட்டென நகரந்துவிட முடியவில்லை. நெஞ்சின் பாரம் கூடிவிட்டது. இரண்டு உயிர்கள் இனி பெற்றோர் அரவணைப்பின்றி வளரப்போகின்றன. இது யார் செய்தது தவறு என்று சொல்ல இயலவில்லை. ஆனால், விதி தன் கண்களை மூடிக்கொண்டு தெருவில் எறிந்திருப்பது சிறகடித்துப் பறக்க இருந்த இரண்டு பட்டாம்பூச்சிகளை!