img/728x90.jpg

"அ.தி.மு.க-வோடு இணைவேன்... தேர்தலில் ஜெயிப்பேன்!" - ஜெ. தீபாவின் கரூர் ஜரூர்

 "கரூர் மாவட்டம் நெரூர் அக்னீஸ்வரர், இப்போது ஜெ.தீபாவை அரசியல்ரீதியாக இயக்கும் சக்தியாகவும் மாறி இருக்கிறார்" என்கிறார்கள் தீபா ஆதரவாளர்கள்.. ஜெ.தீபா தன்னுடைய அரசியல் பாய்ச்சலை கரூரில் இருந்து தெளிவாகக் காட்டத் தொடங்கி இருக்கிறார். 

 
"எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவைத் தலைவி ஜெ. தீபாவை இப்போது இயக்குவது யார் தெரியுமா? சாட்சாத் அந்த ஆதி கடவுளான சிவபெருமானின் அவதாரங்களில் ஒன்றாக நெரூரில் அருள்பாலித்துவரும் அக்னீஸ்வரர்தான்" என்கிறார்கள் தீபா ஆதரவாளர்கள்.
 
சமீபகாலமாக எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை அமைப்பில் உள்ளவர்களே சோர்ந்து போயிருந்த நிலையில், அவரின் கரூர் வருகையில், எழுச்சிமிக்க அவரின் பேச்சும் அந்த அமைப்பில் உள்ளவர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. அதற்குக் காரணம், 'ஜெ.தீபாவின் செயல்பாடுகள், அமைப்பு ரீதியாக ஆரம்பத்தில் இருந்ததுபோல் இப்போது இல்லை' என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். 
 
"தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் ஆட்சியைப் பற்றியோ, தமிழகத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் போராட்டம் உள்ளிட்டவை குறித்தோ பேசாமல், கடமைக்கு தீபா செயல்பட்டு வருகிறார்" என்று அவரின் பேரவையைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளே புலம்பிக் கொண்டிருந்தனர். 
 
 
"அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, முதல்வர் எடப்பாடி அணி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் அணி, தினகரன் அணி என்று பல அணிகளாகவும், கட்சியாகவும் உடைந்து கிடக்கிறது. ஆனாலும், அவர்கள் அனைவரும் அவரவர் அரசியல் பாதைகளில் சரியாகப் பயணிக்கிறார்கள். அவர்களை நம்பி இருக்கும் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள். ஆனால், 'ஜெயலலிதாவைத் தவிர வேற யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளாத நாங்கள், அவரின் அண்ணன் மகள், தோற்றத்தில் அவரைப்போலவே இருக்கிறார்' என்று கருதிதான் ஜெ.தீபாவை ஆதரித்தோம். ஆரம்பத்தில் அவரின் செயல்பாடுகள் நன்றாக இருந்தது. ஆனால், அதன்பிறகு சற்றே சுணக்கமானார். 'இவரை நம்பி வந்தது, எங்களது அரசியல் வாழ்க்கைக்கு நாங்களே குழி வெட்டியதுபோல் ஆகிவிட்டதே' என்று நினைக்க ஆரம்பித்தோம். தீபாவை நம்பி இருப்பது கண்ணை திறந்துகொண்டு கிணற்றில் குதிப்பதுபோல் ஆகிவிடுமோ என்று பயந்தோம். 
 
 
இந்நிலையில்தான், கரூரில் மாநில மற்றும் மாவட்ட ஜெ.தீபா பேரவை நிர்வாகிகள் மத்தியில் தெளிவாகப் பேசி, தன் வழியைச் சரியாக வகுத்து, ஒரு லட்சியத்தோடு அரசியல் களத்தில் குதித்திருக்கும் புதிய தீபாவைப் பார்த்தோம். அவருடைய இந்த மன மாற்றத்திற்குக் காரணம் நெரூரில் உள்ள அக்னீஸ்வரர்தான்" என்கிறார்கள் தீபா அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
 
 ஜெ தீபா
 
முதலில், 'கரூரில் அப்படி என்னதான் அதிரடி மாற்றம் நடந்தது?' என்று பார்த்துவிடுவது உத்தமம். இதுபற்றி நம்மிடம் பேசிய எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை நிர்வாகிகள் சிலர், "ஒரு வாரத்திற்கு முன்பு கரூர் தான்தோன்றிமலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை ஜெ.தீபா தலைமையில் நடத்த அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளர் வி.கே.துரைசாமி ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் ஜெ.தீபா, அதை ரத்து செய்ததால், வெறுத்துப் போனார். 
 
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஜெ. தீபாவே துரைசாமியின் லைனில் வந்து, 'மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்' என்று சொல்லி இருக்கிறார். அதன்படி, துரைசாமி ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு முதல்நாளே வந்துவிட்ட தீபா, அன்று தனியார் ஹோட்டலில் தங்கினார். அதோடு, ஓரிரு முக்கிய நிர்வாகிகளோடு ரகசியமாக நெரூர் அக்னீஸ்வரர் கோயிலுக்குச் சென்று சிறப்புப் பூஜை செய்திருக்கிறார். ஜெ. தீபாவுக்காக சிறப்புப் பூஜைகள் செய்த அக்னீஸ்வரர் கோயிலின் அர்ச்சகர் சிவமுருகேசன், 'அக்னீஸ்வரர் கோயில் சன்னதியை மிதித்தவர்கள், அவரை வணங்கியவர்கள், இன்று அரசியலில் உச்சத்தில் இருக்கிறார்கள். அவரை துச்சமாக நினைத்தவர்கள் வீழ்ந்து கிடக்கிறார்கள். அக்னீஸ்வரரை வணங்கிய உங்களுக்கு இனி அரசியலில் ஏறுமுகம்தான். இங்கிருந்தே முக்கிய முடிவுகளை காலம் தாழ்த்தாமல் எடுங்கள். வெற்றி நிச்சயம்' என்று ஆலோசனை வழங்கினாராம். உடனே, ஹோட்டலுக்குத் திரும்பிய ஜெ.தீபா, மாவட்ட செயலாளரிடம், "மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமாக மாற்றுங்கள். எல்லா நிர்வாகிகளையும் அழையுங்கள்" என்றாராம்.
 
அதைத் தொடர்ந்தே, மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமாக அது மாறி இருக்கிறது. கூட்டத்தில் ஜெ. தீபா பேச ஆரம்பித்ததும் அங்கு திரண்டிருந்த தொண்டர்கள், முதலில் அவரின் பேச்சைக் கேட்காமல் இருந்துள்ளனர். ஆனால், தீபாவின் பேச்சில் தெளிவும், உறுதியும் வெளிப்படவே அனைவரும் உடனடியாக இருக்கையில் அமர்ந்து ஆச்சர்யத்துடன் பேச்சை ரசித்தனர். அவ்வப்போது உற்சாகத்தில் கரவொலி எழுப்பி தங்களின் ஆதரவையும் தெரிவித்தனர்" என்றார்கள்.
 
ஜெ தீபாஜெ.தீபா பேசுவதற்கு முன்பாக, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்களே அவரின் அதிரடி மாற்றத்தை தொண்டர்களுக்கு உணர்த்தும்விதமாக அமைந்தது. தீர்மானத்தை வாசித்தவர், 'இளம் புரட்சித் தலைவி அம்மா' என்று தீபாவைக் குறிப்பிட்டதும் கூட்டத்தில் பெருத்த ஆரவாரம். 'இனி தீபா ஒவ்வொரு மாவட்டத்திலும் நான்கு நாள்கள் தங்கி, நிர்வாகிகள் கூட்டத்தை நடத்துவார்; அங்கு நடக்கும் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். தொண்டர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வார். மாவட்டம் முழுக்க பேரவையின் கொடியேற்று நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்', 'பேரவையில் விடுபட்ட மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, பேரவையின் வளர்ச்சியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்', 'ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கு மக்கள் முன்பு நீதி கேட்டு மாநிலம் முழுவதும் சென்று தீபா மக்களைச் சந்திப்பார்', 'அதேபோல், தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளான மீத்தேன், ஸ்டெர்லைட், எட்டுவழி பசுமைச் சாலை போன்ற பிரச்னைகளுக்கு இனி, களத்தில் தீபா மக்களோடு மக்களாக நின்று குரல் கொடுப்பார்;போராடுவார்' என்னும் நான்கு தீர்மானங்களைக் கேட்டதும், தொண்டர்கள் உத்வேகம் அடைந்தனர். "இப்போதுதான் தீபா சரியாக பயணிக்கத் தொடங்கி இருக்கிறார்" என்று கூட்டத்தில் பலர் பாராட்டத் தொடங்கினர். 
 
கூட்டத்தில் பேசிய ஜெ.தீபா, மத்திய அரசு, தமிழக அரசு, சசிகலா, டி.டி.வி.தினகரன் என்று பல தரப்பையும் காட்டமாக விமர்சித்தார். கூட்டத்தில் பேசிய அவர், "ஜெயலலிதா இறந்து ஒன்றரை வருடம் கடந்து விட்டது. அவருடைய மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லை. அவரது சாவுக்குக் காரணமாக இருந்தவர்கள், இப்போது அ.தி.மு.க-வை பல அணிகளாக பிரித்துக்கொண்டு, தங்களை தாங்களே தலைவர்களாக அறிவித்துக் கொண்டு, இயக்கத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அம்மா திரட்டி வைத்த ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் அவர்கள் தலைவர்களாகவில்லை. 
 
ஆனால், என்னைப் பொறுத்தவரை, தொண்டர்களின் கருத்துகளைக் கேட்டபிறகே எந்த முடிவையும் எடுப்பேன். மாவட்ட அளவில் தொடர்ந்து தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, அவர்களின் கருத்துகளை எனக்குத் தெரிவியுங்கள். தொண்டர்கள் கேட்டுக் கொண்டதாலேயே இந்த அமைப்பை நான் தொடங்கினேன். என் தலைமையிலான இந்த அமைப்பும் அ.தி.மு.க-வின் ஓர் அணிதான். அதேபோல் டி.டி.வி. தினகரன் நடத்துவது தனிக்கட்சி. அவர் பின்னால் அ.தி.மு.க தொண்டர்கள் இல்லை. ஆர்.கே. நகர் தேர்தலில் பணத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி அவர் ஜெயித்தார். இப்போது நடப்பது அ.தி.மு.க ஆட்சியல்ல. வரும் தேர்தலில் நாம் போட்டியிடுவோம். அ.தி.மு.க-வோடு இணைந்துதான் அந்தப் போட்டி இருக்கும். ஆனால், அதற்குள் தொண்டர்கள் ஒன்றுகூடி முடிவெடுத்து, கழகத்திற்கு நல்ல தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தொண்டர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச்செயலாளரே கட்சியின் விதிகளில் திருத்தம் செய்ய முடியும். ஆனால், தேர்தல் ஆணையம் மூலம் விதிகளை மீறி திருத்தம் செய்கிறார்கள். தொண்டர்கள் மூலம் அ.தி.மு.க-வுக்குப் பொதுச்செயலாளரை நியமிக்க வலியுறுத்தி சட்டப்போராட்டம் நடத்த இருக்கிறேன். அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் வழியில், அம்மா வழியில் மக்களுக்கு சேவை செய்யும் இயக்கமாக மாற்றுவதே என் லட்சியம். அதற்கு ஒன்றரை கோடி தொண்டர்களும் உறுதுணையாக செய்வார்கள்" என்றார். அவரின் இந்தப் பேச்சைக் கேட்டதும், "தீபாவா இப்படிப் பேசுவது?" என்று கூட்டத்தினர் ஆச்சர்யம் அடைந்தனர். ஜெ. தீபா குறித்து அக்னீஸ்வரர் கோயில் அர்ச்சகர் கருத்து
 
இதுபற்றி, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் கரூர் மாவட்ட செயலாளர் வி.கே.துரைசாமியிடம் பேசினோம். "இப்போது அமைப்பில் புது மாற்றம் நிகழ்ந்திருக்கு. இதே உத்வேகத்தில் இனி தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை தீபா ஏற்படுத்துவார். வேறு எதையும் இப்போதைக்கு சொல்ல முடியாது. பொறுத்திருந்து பாருங்கள்" என்றார் சுருக்கமாக!
 
"கடந்த ஒரு மாதத்திற்கு முன் தீபா, கரூருக்கு வந்திருந்தபோது, அக்னீஸ்வரர் ஆலயம் பற்றிச் சொன்னோம். 'அடுத்தமுறை வரும்போது அந்தக் கோயிலுக்குச் செல்கிறேன்' என்றார். சொன்னபடியே இப்போது அக்னீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வந்தபின், அவரிடம் நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பயனாகவே, அவர் தெளிவாக அரசியல் களத்தில் இறங்கி இருக்கிறார். இந்தக் கூட்டம் முடிந்ததும் மண்டபத்தில் இருந்த பிள்ளையார் கோயிலிலும் தனது புதிய அரசியல் பிரவேசத்திற்காக ஆசி பெற்றார். இனி தீபாவுக்கு நல்ல நேரம்தான்" என்றார்கள் தீபா பேரவை நிர்வாகிகள் சிலர். 
 
நெரூர் அக்னீஸ்வரர் கோயில் அர்ச்சகர் சிவமுருகேசனிடம் பேசினோம். "தீபாவுக்கு இனி அரசியலில் ஏறுமுகம்தான்" என்று மட்டும் சொன்னாரே தவிர, தீபா கோயிலுக்கு வந்தார் என்றோ,வரவில்லை என்றோ எதையும் சொல்லாமல் அமைதி காத்தார். 
 
தீபாவிடம் எழுந்துள்ள இந்த மாற்றம் அரசியலில் அணுகுண்டாக மாறுமா, இல்லை புஸ்வாணமாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.