img/728x90.jpg
வேட்டி கட்டியவர் அன்றே பிரதமராகியிருப்பார் எடப்பாடி பழனிசாமிக்கு  சிதம்பரம்

வேட்டி கட்டியவர் அன்றே பிரதமராகியிருப்பார் எடப்பாடி பழனிசாமிக்கு சிதம்பரம்

 ' வேட்டி கட்டியவர் அன்றே பிரதமராகியிருப்பார்!'- எடப்பாடி பழனிசாமிக்கு, சிதம்பரம் 'கை' கொடுக்கும் பின்னணி

காங்கிரஸ் கூட்டணியை தி.மு.க நிராகரித்துவிட்டாலோ, எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காவிட்டாலோ அ.தி.மு.க ஆப்ஷனைப் பயன்படுத்த வேண்டும்' என மேலிடத்தில் கூறியிருக்கிறார் சிதம்பரம்.
' வேட்டி கட்டியவர் அன்றே பிரதமராகியிருப்பார்!'- எடப்பாடி பழனிசாமிக்கு, சிதம்பரம் 'கை' கொடுக்கும் பின்னணி
அண்ணா தி.மு.கவை குறிவைத்து பா.ஜ.க நடத்தும் ரெய்டு ஆட்டத்துக்கு முதலமைச்சர் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. ' காங்கிரஸ் கூட்டணிக்குள் அ.தி.மு.க-வைக் கொண்டு வரும் வேலையில் சிதம்பரம் ஈடுபட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி அரசைக் காப்பாற்றும் முயற்சியிலும் அவர் தீவிரமாக இறங்கியிருக்கிறார்' என்கின்றனர் காங்கிரஸ் வட்டாரத்தில். 
 
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரமாண்ட கூட்டணியை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் அமித் ஷா. சென்னையில் நடந்த பூத் கமிட்டி நிர்வாகிகளின் கூட்டத்துக்குப் பிறகு நேற்று பாட்னாவில் ஐக்கிய ஜனதாதளத் தலைவர் நிதிஷ் குமாரை அவர் சந்தித்துப் பேசினார். பா.ஜ.கவுக்கும் ஐ.ஜ.தளத்துக்கும் இடையில் இருந்த கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கு இந்தப் பயணத்தை அமித் ஷா பயன்படுத்திக்கொண்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே, நாடு முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வலு சேர்க்கும் வகையில் மாநிலக் கட்சிகளை அணிக்குள் கொண்டு வரும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் பா.ம.க உள்ளிட்ட கட்சிகளின் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், கொங்கு மண்டலத்தில் உள்ள சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் என அந்தந்த மாவட்டங்களில் வலுவாக இருப்பவர்களை எல்லாம் பா.ஜ.கவுக்குள் கொண்டு வந்துவிட்டனர்.
 
கடந்த 9-ம் தேதி அமித் ஷா வந்தபோது பத்தாயிரம் பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இவ்வளவு நிர்வாகிகளைத் திரட்டியதன் பின்னணியில் பா.ம.கவின் முன்னாள் எம்.எல்.ஏ-க்களான ரவிராஜ், கலிவரதன் உள்ளிட்டோர் பிரதான காரணிகளாக இருந்தனர். அடுத்ததாக மோடி பங்கேற்க  இருக்கும் கூட்டத்துக்காக ஒன்றரை லட்சம் பூத் கமிட்டி நிர்வாகிகளைத் திரட்டும் வேலைகளை இவர்கள் தொடங்கியிருக்கிறார்கள். ' ரஜினியோடு கூட்டணி என அறிவித்துவிட்டால், இன்னும் பல்லாயிரம் பேர் பா.ஜ.கவுக்குள் இணைவார்கள்' எனக் கணக்கு போட்டு வருகிறார் அமித் ஷா. அதேநேரம், சசிகலா குடும்பத்துக்கு எதிராக ரெய்டு நடவடிக்கைகளைத் தொடங்கியதுபோல, அ.தி.மு.க அமைச்சர்களுக்கு எதிராகவும் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டார் அமித் ஷா. 
 
 
அமித் ஷா`` நாமக்கல் கிறிஸ்டி நிறுவனத்தில் நடந்த ரெய்டும் 1,350 கோடி வரி ஏய்ப்பு புகாரும் எடப்பாடி பழனிசாமியை குறிவைத்து நடத்தப்பட்டவைதான். இப்படியொரு ரெய்டு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் சிதம்பரத்தின் விருப்பமாக இருந்தது" என விவரித்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர், `` பா.ஜ.க-அ.தி.மு.கவுடன் கடும் மோதல் வரும்பட்சத்தில் அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் சிதம்பரத்தின் நிலைப்பாடு. தமிழக அரசின் மீது குறைகூறும் எதிர்க்கட்சிகள், ' இது ஒரு எடுபிடி அரசு; பினாமி அரசு' என விமர்சிக்கும்போதெல்லாம், சிதம்பரம் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான வார்த்தைகளைக் கூறிவந்தார். பா.ஜ.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி வந்தார். தேர்தல் வரும் நேரங்களில், பா.ஜ.கவின் மூத்த நிர்வாகிகளின் விருப்பத்துக்கு ஜெயலலிதா எப்படிப் பதில் சொல்வாரோ, அதே பாணியில்தான் எடப்பாடி பழனிசாமியும் பதில் அளித்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தல் குறித்துப் பேசிய அ.தி.மு.க-வின் மூத்த அமைச்சர்களுக்குப் பதில் கூறிய எடப்பாடி பழனிசாமி, 'நேரம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்' என்றார். இந்தப் பதிலை பா.ஜ.க நிர்வாகிகள் ரசிக்கவில்லை. எனவேதான், அடுத்தகட்ட வாய்ப்புகளை எடப்பாடி தேடுவதற்கு முன்பாகவே ரெய்டு நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்தனர்" என்றவர், 
 
`` ஒட்டுமொத்த தமிழக அரசையும் ஊழல் நிர்வாகமாகக் காட்டும் வேலைகளைச் செய்து வருகிறார் அமித் ஷா. ஏற்கெனவே, சசிகலா மற்றும் அவரின் குடும்பத்துக்கு எதிரான பிம்பத்தை எப்படிக் கட்டமைத்தார்களோ அதே பாணியில்தான் அ.தி.மு.க அரசின் மீது குற்றம் சுமத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டனர். இதற்காகத்தான் ப.சிதம்பரமும் காத்திருந்தார். நாளை எடப்பாடி அரசுக்கு எதிராக எந்தச் சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தாலும், காங்கிரஸ் கட்சியின் எட்டு எம்.எல்.ஏ-க்களையும் தன்னுடைய ஆளுகையின்கீழ் கொண்டு வந்து அ.தி.மு.க அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் முடிவை எடுத்திருக்கிறார் ப.சி. இதற்குப் பிரதான காரணம் ஒன்றும் இருக்கிறது. சிதம்பரத்துக்கும் தி.மு.க-வுக்கும் இடையில் நல்லுறவு இல்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 20 இடங்களைக் கேட்டார் சிதம்பரம். ' இந்தக் கூட்டணி வெற்றி பெற்றால், நான் பிரதமர் ஆவதற்கு வாய்ப்பு அதிகம். அதற்கு அனுமதி அளித்துவிடக் கூடாது என்பதால்தான் காங்கிரஸ் அணிக்குள் தி.மு.க வரவில்லை' என்பது சிதம்பரத்தின் எண்ண ஓட்டம். அந்தநேரத்தில்,  'வேட்டி கட்டிய பிரதமர்' என்ற வார்த்தைகளும் அரசியல் வட்டாரத்தில் வலம் வந்தன. ஆனால், கூட்டணி அமையாமல் போனதற்கு 2ஜி விவகாரம் உட்பட பல காரணங்கள் அப்போது அணிவகுத்திருந்தன. 
 
தற்போது வரக் கூடிய தேர்தலில் தி.மு.க கூட்டணியையே சோனியாவும் ராகுலும் விரும்புகின்றனர். இதற்கு தி.மு.க தரப்பிலிருந்து எந்த சிக்னலும் காட்டப்படவில்லை. 'ஒருவேளை காங்கிரஸ் கூட்டணியை தி.மு.க நிராகரித்துவிட்டாலோ, எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காவிட்டாலோ அ.தி.மு.க ஆப்ஷனைப் பயன்படுத்த வேண்டும்' என மேலிடத்தில் கூறியிருக்கிறார் சிதம்பரம். அகில இந்திய காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், அவர்கள் தினகரனை ஓர் ஆப்ஷனாகக் கருதவில்லை. கர்நாடக சட்டப்பேரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்கவும் தினகரனுக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை. இதற்குக் காரணம், ' தினகரனுக்கு அழைப்பு அனுப்பினால், ஊழல்வாதிகளை ஆதரிக்கிறோம் என்றும் ஜெயலலிதா மரணத்தை ஒப்பிட்டும் பா.ஜ.க பேச ஆரம்பித்துவிடும்' என்பதுதான். இதனை உணர்ந்த பிறகுதான், 'தினகரனும் எங்கள் கூட்டணிக்குள் வர வேண்டும்' எனப் பேசிய திருநாவுக்கரசரும் அமைதியானார். தினகரனுக்கான திருநாவுக்கரசரின் வாதங்கள் எதுவும் மேலிடத்தில் எடுபடவில்லை. 
 
தற்போது எடப்பாடி பழனிசாமியைக் காப்பாற்றும் நோக்கில் சிதம்பரம் செயல்படுகிறார். இதனை எடப்பாடி பழனிசாமியும் விரும்புகிறார். 'நாளை மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால், 2021 வரையில் ஆட்சிக்கு எந்தவித சிக்கலும் இல்லை' என்பதுதான் அவருடைய மனநிலையாக இருக்கிறது. காங்கிரஸின் எட்டு எம்.எல்.ஏ-க்களும் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தால், இன்னும் உக்கிரத்தோடு பா.ஜ.க செயல்படும். மத்திய ஆட்சியாளர்களுடன் நல்ல உறவில் இருக்கிறார் பன்னீர்செல்வம். கூட்டணி விவகாரத்தில் அவர் என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்பதும் அடுத்துவரும் நாள்களில் தமிழக அரசியலைத் தீர்மானிக்கக் கூடியவையாக மாறும்" என்றார் விரிவாக.