img/728x90.jpg
 இது நம் சொத்து அரசுப் பள்ளிக்கு நான்கு டெம்போக்களில் சீர் தரும் கிராமம்

இது நம் சொத்து அரசுப் பள்ளிக்கு நான்கு டெம்போக்களில் சீர் தரும் கிராமம்

 இது நம் சொத்து' அரசுப் பள்ளிக்கு நான்கு டெம்போக்களில் சீர் தரும் கிராமம்!

#CelebrateGovtSchool
 
`பகவதி' திரைப்படத்தில், `இது உங்கள் சொத்து' எனப் பேருந்தில் எழுதியிருப்பதை வைத்து, கலாட்டாவான நகைச்சுவை காட்சி வரும். அரசுக்கு உரியவை எல்லாம் பொதுமக்களுக்குச் சொந்தமானவைதானே! அதை நல்லவிதமாகப் புரிந்துகொண்ட ஒரு கிராமத்தினர், அரசுப் பள்ளியை மேம்படுத்தி வருகின்றனர்.
 
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஒன்றியம், கொத்தமங்கம் கிராமம்தான் அது. அங்குள்ள சிதம்பர விடுதி வடக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியை, அந்தக் கிராமமே தத்தெடுத்துள்ளது எனச் சொல்லும் வகையில், பள்ளியின் வளர்ச்சிக்குத் தேவையான ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து நிறைவேற்றுகின்றனர். அதுகுறித்துப் பெருமிதத்தோடு பேசத் தொடங்குகிறார், பள்ளியின் தலைமை ஆசிரியை சந்திரா.
 
அரசுப் பள்ளி ``இந்தச் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளைவிட, எங்கள் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகம். இந்த ஆண்டு 34 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஒவ்வொரு வகுப்புக்கும் தனி கணினி வைத்திருக்கிறோம். கணினியைக் கற்பிக்க மூன்று ஆசிரியர்களும் உள்ளனர். இன்னும் நிறைய வசதிகள் இருப்பதற்குக் காரணம், இந்த ஊர் மக்கள்தான். ஒவ்வொரு மாதமும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பை நடத்த தவறியதில்லை. எல்லோரும் ஆர்வமுடன் பங்கேற்பார்கள். இவ்வளவு ஆர்வத்துடன் வருகிறவர்களுக்குச் சிறு பரிசு கொடுக்கலாமே என நினைத்தோம். அந்தக் கூட்டத்துக்கு வரும் பெற்றோர்களின் பெயர்களைச் சீட்டுகளில் எழுதி, குலுக்கல் முறையில் ஒருவரைத் தேர்ந்தெடுப்போம். அவர்களின் பிள்ளைகளுக்கு உதவும் விதத்தில் டிக்‌ஷனரி, நோட்புக், புத்தகங்கள் போன்ற பரிசுகளைக் கொடுப்போம். அன்றைய தினம் பெற்றோர்களை வரவழைத்த  மாணவர்களுக்கும் பரிசு தருகிறோம். குறிப்பிட்ட கேள்விகளைத் தந்து, யாரெல்லாம் 10 மதிப்பெண் எடுக்கின்றனரோ, அவர்களுக்குச் சிறப்புப் பரிசும் அளித்து வருகிறோம்" என மகிழ்ச்சியுடன் பட்டியலிடுகிறார்.
 
சரி, கிராம மக்கள் செய்யும் உதவிகள் என்ன?
 
``பள்ளியின் வளர்ச்சிக்காக, மாணவர் கலந்தாய்வுக் குழு ஒன்றை அமைத்திருக்கிறோம். இதில், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கிராம மக்கள் எனப் பலரும் இருக்கின்றனர். இந்தக் குழுவின் கூட்டம் அவ்வப்போது நடக்கும். அப்போது பள்ளிக்குத் தேவையானவற்றை எப்படி வாங்குவது என முடிவெடுப்போம். பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், மிகவும் ஆர்வத்துடன் இதில் ஈடுபடுகின்றனர். சென்ற ஆண்டு நடந்த ஆண்டு விழாவில், பள்ளிக்காக வேன் ஒன்றை வாங்கிக்கொடுத்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கச் செய்தனர். அந்த வேன், நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ளது. சற்று தூரத்திலிருந்து வரும் மாணவர்களை அழைத்துவர வேன் உதவியாக இருக்கிறது. பள்ளியின் முன்னாள் மாணவரே அதன் ஓட்டுநராகவும் இருக்கிறார். அவரால் வரமுடியாத நாளில் வரும் ஓட்டுநருக்கும் ஊதியத்தைக் கிராம மக்களே தந்துவிடுகின்றனர்.
 
அதேபோல வருடந்தோறும் மாணவர்களுக்கு, சைக்கிள் பரிசு அளிப்பதும் வழக்கம். அதற்கு மூன்று நிபந்தனைகள் உண்டு. 100 சதவிகிதம் வருகைப் பதிவு இருக்க வேண்டும். ஏ கிரேடு மதிப்பீடு பெற்றிருக்க வேண்டும், அப்பா அல்லது அம்மா பெற்றோர் - ஆசிரியர் சந்திப்புகளுக்குத் தவறாமல் வர வேண்டும். இவற்றைச் சரியாகச் செய்யும் மாணவர்களுக்கு சைக்கிள் பரிசு. சென்ற ஆண்டில் 19 மாணவர்கள் இந்தப் பரிசைத் தட்டிச்சென்றனர். இந்த ஆண்டு இன்னும் அதிகரிக்கும் என உறுதியாக நம்புகிறோம். இதற்கான செலவையும் கிராம மக்களே செய்கின்றனர். சமீபத்தில் நடந்த விழாவில், நான்கு டெம்போக்களில் கல்விச் சீர் கொண்டுவந்தனர்" என்றார் பெருமிதத்துடன். 
 
கல்விச் சீரில் என்னவெல்லாம் இருந்தன?  
 
``மூன்று வகுப்புகளுக்கான பீரோ, பெஞ்ச், டெஸ்க், நீர்ப் பிடிக்கும் குடங்கள், மேஜைகள், நோட்புக் எனப் பள்ளிக்குத் தேவையான பொருள்கள் அத்தனையும் இருந்தன. தங்கள் வீட்டின் ஒரு பகுதியாகவே இந்தப் பள்ளியை மக்கள் பார்க்கிறார்கள். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. மாணவர்களுக்கு நல்லவிதமாகக் கல்வியைக் கற்பித்தல் வழியே எங்கள் நன்றியைத் தெரிவிக்கலாம். அதை நிச்சயம் செய்வோம்" என்கிறார் நெகிழ்வுடன்.