img/728x90.jpg
தீரன் அதிகாரம் ஒன்று பட பாணியில் திருட்டு  கொள்ளைச் சம்பவங்கள்

தீரன் அதிகாரம் ஒன்று பட பாணியில் திருட்டு கொள்ளைச் சம்பவங்கள்

 தீரன் அதிகாரம் ஒன்று' பட பாணியில் நடக்கும் கொள்ளைச் சம்பவங்களை இப்படியே விட்டால், அப்பாவிகள் கொலை செய்யப்படுவது வரை கொண்டு போய்விடும்' என்று மக்கள் அஞ்சுகிறார்கள். 

’தீரன் அதிகாரம் ஒன்று’ பட பாணியில் திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள்! கலங்கும் கரூர்
தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் பவாரியா கும்பல் நடத்தும் கொள்ளைச் சம்பவம்போல், கரூர் மாவட்டத்தில் கொள்ளை, திருட்டு, வழிப்பறிச் சம்பவங்கள் அடுத்தடுத்து நடப்பதாக மக்கள் அச்சத்தோடு தெரிவிக்கிறார்கள். இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரே பகுதியைச் சேர்ந்த எட்டுக் கடைகளின் பூட்டுகளை உடைத்து, கடைகளில் இருந்த பணத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்துவிட்டுப் போக, சம்பந்தபட்ட பகுதி மக்கள் பீதியில் இருக்கிறார்கள். 
 
`டென்ட் அடித்து தங்கி பொருள்களை விற்பதுபோல் நடிக்கும் சில கும்பல்கள்தாம் இப்படிக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுகின்றன. அவர்களை ஒடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்று காவல்துறையே ஒப்புக்கொள்ளும் அளவுக்கு இங்கு நடக்கும் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் மக்களை கலங்கடிக்கத் தொடங்கியிருக்கின்றன.
 
கரூர் நகரத்தையொட்டியுள்ள வெங்கமேடு பகுதி காவல்நிலைய லிமிட்டுக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் சிலை அருகே வரிசையாகப் பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. இங்கே இருக்கும் மூன்று பால் கடைகள், இரண்டு மளிகைக் கடைகள், ஒரு பழக்கடை,சேரன் பள்ளி அருகே உள்ள இரண்டு கடைகள் என்று மொத்தம் எட்டுக் கடைகளில் ஒரே இரவில் பூட்டை உடைத்து கடைகளுக்குள் இருந்த பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுச் சென்றிருக்கிறது ஒரு கும்பல். ஏற்கெனவே, சில மாதங்களுக்கு முன்பு கோவை சாலை ரவுண்டானா பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட கடைகளில் இரண்டு இரவுகளில் தொடர்ச்சியாக இப்படிப் பூட்டை உடைத்து,கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. அங்கிருந்த டாஸ்மாக் காவலாளியைக் கொன்றுவிட்டு, அந்தக் கடையிலும் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியது. அங்கிருக்கும் பெருமாள் கோயிலில் உள்ள சாமி சிலையும் கொள்ளையடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அந்தக் கடையைச் சேர்ந்தவர்கள், காவல்துறையை நம்பாமல் இரவு நேரங்களில் ரோந்து சென்று, கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு நபரைப் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். அவர் மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சியது கரூர் மாவட்டக் காவல்துறை. 
 
இந்நிலையில், மறுபடியும் இப்போது வெங்கமேடு பகுதியில் தொடர்ச்சியாகக் கடைகளில் கொள்ளைச் சம்பவங்கள் நடக்க, திக் திக் மனநிலைக்கு மாறியிருக்கிறார்கள் கரூர்வாசிகள்.
 
கொள்ளை நடந்த பால்கடையின் உரிமையாளர் ரவிக்குமாரிடம் பேசினோம். 
 
``எங்களுக்கு மூன்று பால்கடைகள் இருக்கு. மூன்று கடைகளின் பூட்டுகளையும் உடைத்து, ஒரு லேப்டாப், இரண்டாயிரம் ரூபாயையும் கொள்ளையடித்துவிட்டுப் போயிருக்காங்க. நல்ல வேளையா அன்னைக்கு அதிகமாகப் பணம் வைக்கலை. ஆள் நடமாட்டம் உள்ள பகுதி இது. இவ்வளவு துணிச்சலாக எட்டுக் கடைகளில் வரிசையாகப் பூட்டுகளை உடைத்து, கொள்ளையடிச்சுருக்காங்கன்னா... அவங்க எதுக்கும் துணிஞ்சவங்களா இருக்கணும். பக்கத்துல உள்ள மளிகைக் கடையில் 1000 ரூபாயும், அதைத் தொடர்ந்து உள்ள பழக்கடையில் 10 ஆயிரம் ரூபாயும், அதற்கு அடுத்து உள்ள மளிகைக்கடையில் 60 ஆயிரம் ரூபாயும் கொள்ளை போயிருக்கு. சேரன் பள்ளிக்கூடம் அருகே உள்ள இரண்டு கடைகளில் சில ஆயிரங்கள் கொள்ளை போயிருக்கு. வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கோம். நடவடிக்கை எடுக்கிறதாச் சொல்லியிருக்காங்க. இங்க கடை நடத்தவே பயமா இருக்கு சார்" என்றார்.
 
 திருநாவுக்கரசுபா.ம.க கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பாஸ்கரன்
 
60 ஆயிரம் ரூபாயைப் பறிகொடுத்த மளிகைக் கடை உரிமையாளரான திருநாவுக்கரசுவிடம் பேசினோம்.
 
``எங்கக் கடைப் பூட்டை உடைத்து, அங்கே இருந்த 60 ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடிச்சுருக்காங்க. அதுக்குக் காரணம் வெங்கமேடு காவல்நிலைய போலீஸார் சரியாக ரோந்துப் பணியில் ஈடுபடாததுதான். இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் நடந்த மறுநாளே, வண்டியில் வந்த இரண்டு நபர்கள் எங்கக் கடைகளுக்கு எண்ணெய் சப்ளை செய்பவரின் தாய் பாப்பாத்தி என்பவரிடம் நகையை வழிப்பறி செய்திருக்கிறார்கள். அப்படின்னா, கொள்ளை, வழிப்பறி செய்யும் கும்பலுக்கு எவ்வளவு குளிர்விட்டுப் போயிருக்கும்னு தெரிஞ்சுக்குங்க. வெங்கமேடு காவல்நிலைய கன்ட்ரோலுக்கு 7 போலீஸார்தான் இருக்காங்களாம். அவர்களில் மூணு பேர் பெண் போலீஸ். அப்புறம் எப்படி அவர்களால் கொள்ளைச் சம்வங்களை தடுக்க முடியும்? நாங்க வெங்கமேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தப்ப, `நீங்க கொள்ளை கொடுத்தது பொருளா இருந்தா ரெக்கவரி பண்ணிடலாம். பணம்ங்கிறதால், அந்தக் கும்பலைப் பிடித்தால்கூட, `செலவாயிட்டு சார். தண்ணியடிச்சுட்டோம், பணத்தை விட்டுட்டோம்ன்னு சொல்வாங்க'ன்னு அசால்ட்டா சொல்றாங்க. `கொள்ளை கொடுத்த பணத்தை மறந்துடுங்க'ன்னு போலீஸ் சொல்லாமல் சொல்லுது. இன்னொரு பக்கம், இந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணிகளையும் போலீஸார் அதிகப்படுத்தலை. போலீஸ் இப்படி இருந்தா நாங்க எப்படி தைரியமா கடை நடத்துறது? டென்ட் அடித்து தங்கி, ஏதாச்சும் பொருள்களை விற்கிறதா பாவ்லா காட்டும் கும்பல் இரவுகளில் அங்குள்ள கடை முன்னே படுப்பதுபோல், கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுறதாச் சொல்றாங்க. ஏதாச்சும் அசம்பாவிதம் நடக்குறதுக்குள்ள காவல்துறை கொள்ளைக் கும்பலை அமுக்கணும்" என்றார் அச்சம் விலகாமல்.
 
இதுபற்றி பேசிய, பா.ம.க கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பாஸ்கரன்,
 
``கரூர் மாவட்டத்தில் சமீபத்தில் தொடர்ச்சியா கொள்ளை, வழிப்பறி, திருட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன. காவல்துறை வசதியாகரவிக்குமார் தூங்குவதுதான் காரணம். சில தினங்களுக்கு முன்பு இதே வெங்கமேடு பகுதியில் பட்டப்பகலில் கணவரோடு வாக்கிங் போன சங்கீதா என்பவரின் கழுத்தில் கிடந்த ஆறரை பவுன் தாலிக்கொடியை பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் வழிப்பறி பண்ணிட்டுப் போனாங்க. கரூர் மொச்சக்கொட்டப்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த தங்கராஜ் மனைவி நதியா கழுத்தில் இருந்த தாலிக்கொடியை அறுத்துக்கொண்டு போனது ஒரு கும்பல். கரூர் நகரக் காவல்நிலையத்தில் வெறும் வழக்கா மட்டும் இருக்கு இந்தச் சம்பவம். அதேபோல், சில வாரங்களுக்கு முன்பு கரூர் அருகே உள்ள புன்னம்சத்திரம் பகுதியில் ஒரே நாளில் மூன்று இடங்களில் சரஸ்வதி, ருக்மணி, மாலதிங்கிற மூன்று பெண்களிடம் 6 பவுன் தாலிக்கொடி உள்ளிட்ட 18 பவுன் நகையை வழிப்பறி பண்ணிட்டு போனது மர்மக் கும்பல். வேலாயுதம்பாளையம் காவல்நிலைய போலீஸார் இதுவரை இந்தச் சம்பவங்களில் என்ன நடவடிக்கை எடுத்தாங்கன்னே தெரியலை. 
 
அதேபோல், கரூர் தாந்தோணி ஜீவா நகரில் குடியிருக்கும் புரோக்கர் மெய்யப்பன் வீட்டுப் பூட்டை உடைத்து நுழைந்து 18 பவுன் நகையை லவட்டிக்கிட்டு போனது மர்மக் கும்பல். பசுபதிபாளையம் போலீஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கலை. கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள எல்லையம்மன் கோயிலில் இருந்த உண்டியல் பணத்தையும், கோயில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தாலி பொட்டையும் மர்ம நபர்கள் கொள்ளையடிச்சுட்டுப் போனாங்க. போலீஸார் நடவடிக்கை எடுக்கலை. மக்களே திரண்டு விசாரித்து, திருக்காம்புலியூரைச் சேர்ந்த சிவசுப்ரமணியன் என்பவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அதேபோல், சில தினங்களுக்கு முன்பு கரூர் கோடீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அதில் மூன்று பெண்களிடம் தங்க செயின்களைப் பறித்தது மர்மக் கும்பல். இதுவரை அதை ரெக்கவரி பண்ணலை. இதைத்தவிர, புன்னம்சத்திரம் பகுதியில் உள்ள சந்தையில் ஈரோட்டைச் சேர்ந்த ஆனந்தி என்ற பெண் கள்ளநோட்டை மாற்ற முயன்று, பொதுமக்களால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். தோகைமலை பகுதியில் கள்ள லாட்டரி விற்பனை அமர்க்களமா நடக்குது. அரவக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை சக்கைப்போடு போடுது. காவிரி கரையெங்கும் மணல் கொள்ளை அமோகமாக நடக்குது. இப்படி கரூர் மாவட்டத்தில் நடக்கும் எந்தக் குற்றச் செயல்களையும் காவல்துறை தடுத்து நிறுத்துவதில்லை. `தீரன் அதிகாரம் ஒன்று' பட பாணியில் நடக்கும் கொள்ளைச் சம்பவங்களை இப்படியே விட்டால், அப்பாவிகள் கொலை செய்யப்படுவது வரை கொண்டு போய்விடும்' என்று மக்கள் அஞ்சுகிறார்கள். 
 
கரூர் நகரிலும், நகரை யொட்டியும்தான் அநேகச் சம்பவங்கள் நடக்கின்றன. கரூர் மாவட்ட காவல்துறை குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கலன்னா, பா.ம.க சார்பில் போராட்டம் வெடிக்கும்" என்றார் ஆக்ரோஷமாக!
 
இதுபற்றி, கரூர் மாவட்ட எஸ்.பி ராஜசேகரனிடம் பேசினோம்.கரூர் மாவட்ட எஸ்.பி ராஜசேகரன்
 
``கரூரில் நடக்கும் கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் எங்கும் நடப்பது போல்தான் நடக்குது. அதிகமா நடக்கலை. கோவை சாலைப் பகுதியில் கொள்ளைச் சம்பவங்களை நடத்திய நபரை அமுக்கி, அவன் மீது குண்டர் சட்டம் பாய்ச்சியிருக்கிறோம். வெங்கமேடு பகுதியில் அதிகமாக் கொள்ளை போகலை. இருந்தாலும்,அதைத் தடுக்க உரிய நடவடிக்கையை எடுத்துக்கிட்டுதான் இருக்கோம். க்ரைம் டீம் சிறப்பாதான் செயல்படுது. நடக்கும் கொள்ளை, வழிப்பறி, திருட்டுச் சம்பவங்களில் 95 விழுக்காடு ரெக்கவரி பண்ணிடுறோம். கரூர் மாவட்டத்தில் இதுபோல் சம்பவங்கள் நடக்காமல் 75 விழுக்காடு தடுத்துவிட்டோம். வெங்கமேடு கொள்ளைச் சம்பவங்களை செய்தவர்கள் விரைவில் பிடிபடுவார்கள். வெளிமாநில நபர்களும், சில குறவர்களும் டென்ட் அடித்து அங்கங்கே தங்கி, பொருள்களை விற்பதுபோல் பாவ்லா காட்டுகிறார்கள். இரவுகளில் அங்குள்ள கடைகளில் படுப்பதுபோல், அந்தக் கடைகளில் கொள்ளையடிக்கிறார்கள். அதனால், கரூர் மாவட்டம் முழுவதும் யாரையும் டென்ட் அடித்து தங்கவிடாமல் தடுத்துவிட்டோம். குற்றங்களை தடுக்க கரூர் மாவட்டக் காவல்துறை எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்" என்றார்.
 
சீக்கிரம் எடுங்கள் சார்!