img/728x90.jpg
எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா! காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்

எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா! காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்

 ஊழல் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான். மொத்த ஊழல் பணமும் எங்கே கொண்டுசெல்லப்படுகிறது என்பதைக் கண்டறிவதுதான் ஐ.டி அதிகாரிகளின் நோக்கமாக இருக்கிறது' என்கின்றனர், கோட்டை வட்டார அதிகாரிகள். 

 
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையில் வைத்திருக்கும் நெடுஞ்சாலைத் துறையைக் குறிவைத்துக் களமிறங்கியிருக்கிறது வருமான வரித்துறை. 'மத்திய அரசு இவர்களைக் கைவிட்டுவிட்டது என்பதன் அடையாளம்தான் இந்த ரெய்டு. இதைப் புரிந்துகொண்டு, அதிகாரத்தில் இருந்து ஒதுங்கியிருக்கிறார் பன்னீர்செல்வம்' என்கிறார், தங்க.தமிழ்ச்செல்வன். 
 
நாமக்கல் மாவட்டம், ஆண்டிபாளையத்தில் இயங்கிவரும் கிறிஸ்டி ஃபிரைடு கிராம் நிறுவனத்தில், கடந்த வாரம் ஐ.டி சோதனை அரங்கேறியது. இந்தச் சோதனையில், நூற்றுக்கும் மேற்பட்ட பென் டிரைவ்கள், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஐந்து நாள் நீடித்த ரெய்டின் முடிவில், 1,350 கோடி ரூபாய் அளவுக்கு வரிஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதேவேளை, பண மதிப்புநீக்க நடவடிக்கையின்போது திருச்செங்கோட்டில் உள்ள கூட்டுறவு வங்கி ஒன்றில் 256 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியானது. ' கிறிஸ்டி நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமிக்கு முதலமைச்சர் அலுவலகத்தோடு நெருங்கிய தொடர்பு உண்டு. ஆளும்கட்சியில் உள்ளவர்களின் பணம் எந்தெந்த வெளிநாடுகளில் பதுக்கப்பட்டது, எந்தெந்த வகைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதையெல்லாம் முழுமையாகக் கண்டறியும் வேலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இந்த விவகாரத்தில், ஊழல் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான். மொத்த ஊழல் பணமும் எங்கே கொண்டு செல்லப்படுகிறது என்பதைக் கண்டறிவதுதான் ஐ.டி அதிகாரிகளின் நோக்கமாக இருக்கிறது' என்கின்றனர் கோட்டை வட்டார அதிகாரிகள். 
 
இன்று காலை, தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டுவரும் செய்யாத்துரை, நாகராஜன் ஆகியோருக்குச் சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்துவருகிறது. சென்னையில் உள்ள ஆர்.ஏ.புரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சோதனை நீடித்துவருகிறது. இந்தச் சோதனையில், கணக்கில் காட்டப்படாத சுமார் 100 கோடி ரூபாய்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில், செய்யாத்துரையின் சொந்த ஊரான விருதுநகர், அருப்புக்கோட்டை அலுவலகம் என எதையும் ஐ.டி அதிகாரிகள் விட்டுவைக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியின் நட்பு வளையத்தில் இருக்கும் இவர்களை ஐ.டி அதிகாரிகள் குறிவைத்ததை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் கொங்கு மண்டல அமைச்சர்கள். 
 
இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க-வுக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர் ஒருவர், "சசிகலா பக்கம் இருந்து மதுசூதனன் உட்பட முக்கிய நிர்வாகிகளை ஓ.பி.எஸ் பக்கம் கொண்டுவருவதற்கு 2016 டிசம்பர் மாத ரெய்டு பயன்பட்டது. பண மதிப்புநீக்க நடவடிக்கையின்போது, எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமான சேலம் இளங்கோவனின் கூட்டுறவுத் துறையில் ரெய்டு நடந்தது. இதில் 151 கோடி ரூபாய் அளவுக்கு டெபாசிட் செய்யப்பட்ட தகவல்களும் வெளியாகின. இந்த விவகாரமும் அப்படியே அமுங்கிப்போனது. அ.தி.மு.க-வின் மொத்த அமைச்சரவையும் அமித் ஷாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துசேர்ந்தது. அன்று, மன்னார்குடிக்கு எதிரான பா.ஜ.க-வின் ஆபரேஷனுக்கு யார் யாரெல்லாம் பக்கபலமாக இருந்தார்களோ, அவர்களையெல்லாம் தற்போது சுற்றிவளைக்கத் தொடங்கிவிட்டனர். இதற்கு ஒரே காரணம், எடப்பாடி பழனிசாமியோடு கூட்டு சேர்வதால் எந்த லாபமும் இல்லை என்பதுதான். சொல்லப் போனால், எடப்பாடி அரசைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதால் மோடிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது. ' மோடியால்தான் இந்த அரசு நீடித்துக்கொண்டிருக்கிறது' என்ற விமர்சனத்தை அமித் ஷா கவனத்துக்கும் பா.ஜ.க நிர்வாகிகள் கொண்டுசென்றுள்ளனர். அதேநேரம், கடந்த சில வாரங்களாக எடப்பாடி பழனிசாமியின் போக்கில் தென்படும் மாற்றங்களையும் மத்திய உளவுத்துறை தீவிரமாகக் கண்காணித்துவந்தது. இதை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் 'ஒரு நாடு, ஒரு தேர்தல்' என்ற முயற்சிக்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவிக்கவில்லை. அதன் விளைவுகளைத்தான் ரெய்டு வடிவில் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள்" என்கிறார். 
 
தங்க.தமிழ்ச்செல்வன்நெடுஞ்சாலைத் துறை ரெய்டுகுறித்து தினகரன் ஆதரவாளரான தங்க.தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். " ரெய்டு நடப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். அண்ணா தி.மு.க-வை அமித் ஷா கைவிட்டுவிட்டார் என்பதைத்தான் இது காட்டுகிறது. இந்த அரசின்மீது நாங்கள் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொன்னோம். அப்போது, பா.ஜ.க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இணைப்பு முயற்சிக்கு முன்னதாக, பன்னீர்செல்வமும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினார். அப்போதும் மத்தியில் உள்ளவர்கள் அமைதியாக இருந்தார்கள். இப்போது ரெய்டு நடத்துகிறார்கள் என்றால், இவர்களை அச்சுறுத்துவதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது" என்றவர், 
 
" எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் பலம் இல்லை என்பதை அமித் ஷா புரிந்துகொண்டார். மோடியும் இதை உணர்ந்துகொண்டார். இவர்களை நம்பினால், பா.ஜ.க இங்கு வளராது. இத்தனை நாள் இவர்களைத் தாங்கிப்பிடித்தவர்கள், இப்போது ரெய்டை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியை மக்களும் தொண்டர்களும் விரும்பவில்லை. இனி வரும் நாள்களில் இரட்டை இலை உட்பட அனைத்து விவகாரங்களும் எடப்பாடிக்கு எதிராகப்போவதற்கான வாய்ப்புகளே அதிகம். மாநிலம் முழுவதும் அ.தி.மு.க தொண்டர்கள் யார் பக்கம் என்பதைப் பார்த்துவிட்டு, மத்திய அரசு முடிவெடுத்திருக்க வேண்டும். கிறிஸ்டி நிறுவனம் எடுத்துச்செய்த முட்டை, சத்துமாவு உள்ளிட்டவற்றில் பல்வேறு வகையான ஊழல்கள் நடந்துள்ளன. எடப்பாடி பழனிசாமி அரசில்தான் இதெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. ஒருங்கிணைப்பாளராக இருக்கும் பன்னீர்செல்வமும் அரசியல் அதிகாரத்தில் இருந்து விலகித்தான் இருக்கிறார். அவர் சொல்லும் எந்தப் பரிந்துரைகளையும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்வதில்லை. 'நம்முடைய வேலையைக் கவனிப்போம்' என பன்னீரும் அமைதியாகத்தான் இருக்கிறார். தொண்டர்கள் பலம் என்பது தினகரன் பக்கம்தான் இருக்கிறது. இப்போதாவது எங்கள் பக்கம் எடப்பாடி வந்துவிட்டால், அவருக்குத்தான் பலம் கிடைக்கும். மத்திய அரசின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சவேண்டிய அவசியமும் இருக்காது" என்றார் சிரித்தபடியே.