• :
  • :
களத்தில்

அமைச்சர்களின் வருகை தாமதம் கேட்டை மூடி மாணவிகளை அடைத்துவைத்த நிர்வாகம்

அமைச்சர்களின் வருகை தாமதம்  கேட்டை மூடி மாணவிகளை அடைத்துவைத்த நிர்வாகம்

அமைச்சர்கள் வருகைக்காக மாணவிகளை கல்லூரியில் அடைத்துவைத்த சம்பவம் சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் நிகழ்ந்துள்ளது.

 
சென்னை காயிதே மில்லத் பெண்கள் கலைக் கல்லூரியில் புதிய கலைஅரங்கம் கட்டப்பட்டுள்ளது. இது மத்திய சென்னை எம்.பி-யாக உள்ள அ.தி.மு.க-வைச் சேர்ந்த எஸ்.ஆர்.விஜயகுமார் தொகுதி நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ளது. கட்டடப் பணிகள் முடிந்துவிட்டதால் அதற்கான திறப்பு விழா இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
 
 
அதன்படி, கல்லூரியில் இன்று காலை விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது விழா நடைபெறுவதற்கான நேரமாகியும் அமைச்சர்கள் யாரும் வரவில்லை. வெகுநேரமாகியும் அமைச்சர்கள் வராததால் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவிகளை நிறுத்தி வைக்க கல்லூரியின் வாயில்களைப் பூட்டியுள்ளனர். அப்படி இருந்தும் அமைச்சர்கள் வரவில்லை. வெயில் கடுமையாக அடித்ததால் மாணவிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
 
இதையறிந்த அங்கிருந்த பத்திரிகையாளர்கள் கல்லூரி நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாணவிகளை அடைத்து வைத்துள்ளதற்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி முதல்வரிடம் சென்று முறையிட்டார். இதன்பின்தான், கேட்டைத் திறக்க கல்லூரி நிர்வாகம் ஒத்துக்கொண்டது. கல்லூரி வாயிலை திறந்த உடன் மாணவிகள் அனைவரும் கலைந்துசென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.