img/728x90.jpg
ஊழலிலிருந்து தப்பிக்க ஒரு சட்டம் அட்டகத்தி லோக் ஆயுக்தா!

ஊழலிலிருந்து தப்பிக்க ஒரு சட்டம் அட்டகத்தி லோக் ஆயுக்தா!

‘ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்பைக் கொண்டுவர வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்ததால், வேறு வழியில்லாமல் அவசர அவசரமாக தமிழக சட்டப்பேரவையில் ஜூலை 9-ம் தேதி நிறைவேற்றப்பட்டது லோக் ஆயுக்தா மசோதா. ஆனால், ‘ஊழல் செய்பவர்கள் தப்பித்துக் கொள்வதற்கான எல்லா வழிமுறைகளையும் கொண்டு இந்த மசோதா வந்துள்ளது’ என்று குமுறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். ‘உள்ளாட்சி அமைப்புகள், அரசின் ஒப்பந்தங்கள், பணி நியமனம், அரசின் பணிமாறுதல்கள் உள்ளிட்டவற்றை லோக் ஆயுக்தா விசாரிக்க முடியாது’ என்று அரசு சொல்லியிருக்கிறது. இதன் மூலம், ‘இதிலெல்லாம் ஊழல் நடக்கிறது. அதையெல்லாம் லோக் ஆயுக்தா விசாரணையின்கீழ் கொண்டுவர மாட்டோம்’ என்பதை தமிழக அரசு தெரியப்படுத்தி விட்டது. 
 
லோக் ஆயுக்தா என்ற அமைப்புக்கு முன்னோடி, கர்நாடக மாநில லோக் ஆயுக்தா. அங்கு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஜனதா கட்சி, 34 ஆண்டுகளுக்கு முன்பே கர்நாடகா லோக் ஆயுக்தா சட்டத்தை 1984-ம் ஆண்டு நிறைவேற்றியது. அது 1986-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தின்படி, முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பொது ஊழியர்கள் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை லோக் ஆயுக்தா விசாரணை செய்து நடவடிக்கைக்குப் பரிந்துரைக்க முடியும். குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் வீடுகளில், அலுவலகங்களில் சோதனை நடத்தும் அதிகாரமும் அந்த அமைப்புக்கு உண்டு. அதன்பின்னர் கர்நாடகாவில் பல சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக சந்தோஷ் ஹெக்டேவுக்குப் பின்னர் அந்த மாநில லோக் ஆயுக்தாவும் பல் பிடுங்கப்பட்ட பாம்பாகத்தான் இருக்கிறது.   
 
இப்போது தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தில் ஊழலை ஒழிக்கும் வகையில் எந்த ஒரு வலுவான அம்சமும் இல்லை என்று அடித்துச் சொல்கிறார்கள் சமூக ஆர்வலர்களும், நீதித்துறையைச் சேர்ந்தவர்களும். 
 
‘‘லோக் ஆயுக்தா என்பது அரசின் மற்றொரு துறையாகத்தான் இருக்கிறது. அரசின் துறையாக இருந்தால் எப்படி இந்த அமைப்பால் ஊழலை ஒழிக்க முடியும்?’’ என்ற கேள்வியுடன் நம்மிடம் பேசினார், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன். 
 
‘‘லோக் ஆயுக்தா அமைப்பில் ஐந்து பேர் நியமிக்கப்படவேண்டும். ஒருவர் தலைவர். மற்ற உறுப்பினர்களில் இரண்டு பேர் நீதித்துறை சார்ந்தவர்கள், மீதி இரண்டு பேர் நீதித்துறை சாராதவர்கள். இவர்களைத் தேர்ந்தெடுப்பது முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட மூவர் குழு. இந்தக் குழுவில் முதல்வர், சபாநாயகர் இருவரும் மெஜாரிட்டியாக ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதால், ஆளும்கட்சி சொல்லும் நபர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதுதான் இதன் பொருள். அதனால் இது அரசாங்கத்தின் ஒரு பிரிவு போலவே செயல்படும்.  
 
முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், கவுன்சிலர்கள் என அதிகாரத்துக்கு வரும் அரசியல்வாதிகள்... தலைமைச் செயலாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அரசுப்பணியில் இருப்பவர்கள் ஆகியோர் செய்யும் முறைகேடுகளை விசாரிக்க வேண்டிய லோக் ஆயுக்தா அமைப்பானது நீதிமன்றத்தின் பொலிவமைப்பு கொண்டிருக்க வேண்டும். தன்னிச்சையாக இயங்குவதாக இருக்க வேண்டும். எனவே, தேர்வுக்குழுவில் உயர் நீதிமன்ற நீதிபதிகளும் இடம் பெற வேண்டும். ஆனால், இந்தக் குழுவில் நீதித்துறை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.  
 
‘லோக் ஆயுக்தாவின் தலைவர் நீதித்துறையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அல்லது 25 ஆண்டுகள் பொது அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்’ என்கிறார்கள். பொது அனுபவம் என்று அவர்கள் சொல்வது அரசியலைக் குறிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. தலைவர் பதவியில் அரசுக்குச் சாதகமான ஓர் அரசியல்வாதியை அல்லது  25 ஆண்டுகள் நீதித்துறையில் பணியாற்றிய அரசுக்குச் சாதகமான ஒருவரை நியமிப்பார்கள். லோக் ஆயுக்தாவின் செயலாளர், விசாரணை இயக்குநர் ஆகியோராகவும் அரசுக்குச் சாதகமானவர்களே நியமிக்கப்படுவார்கள்.  
 
‘தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை ஊழல் தடுப்புத் துறைக்கு அனுப்புவோம்’ என்கின்றனர். ‘முகாந்திரம் இருக்கிறதா என்பதை இரண்டு மாதங்களுக்குள் விசாரிக்க வேண்டும்.  விரிவான விசாரணை என்றால் ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும்’ என்று கால வரம்பு நிர்ணயித்திருக்கிறார்கள். லோக் ஆயுக்தாவில் பாராட்டப்பட வேண்டிய அம்சம், இது ஒன்று மட்டும்தான்.  
 
தலைமைச் செயலாளர் மீதான ஊழல்களை ஊழல் தடுப்புத் துறை விசாரிக்கும் என்றால், அந்த விசாரணை எப்படி நேர்மையாக இருக்கும்? தலைமைச் செயலாளரைவிட கீழான அந்தஸ்தில் இருக்கும் துணைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் விசாரணை இயக்குநர், குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், அரசு செயலர்களை எப்படி விசாரிப்பார்? ஊழல் புகார்கள்மீதான விரிவான விசாரணைக்குப் பின்னர், முதல்வர் மீதான குற்றச்சாட்டு என்றால் அதை கவர்னருக்கு அனுப்புவார்கள். அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு என்றால் முதல்வருக்கு அனுப்புவார்கள். எம்.எல்.ஏ-க்கள்மீதான குற்றச்சாட்டுகள் என்றால், சபாநாயகருக்கு அனுப்புவார்கள். அவர்கள் எப்படி நேர்மையாக நடவடிக்கை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. லோக் ஆயுக்தாவுக்குக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் அதிகாரம் இல்லை.  
 
இதற்கெல்லாம் மாறாக, புகார் கொடுத்தவர்களை மிரட்டும் ஓர் அம்சமே இருக்கிறது. புகார் பொய்யாக இருந்தால் ஓராண்டு சிறை என்று சொல்கிறார்கள். அதே போலப் புகார் அளித்தவரைப் பாதுகாக்கும் அம்சமும் இல்லை. அரசே உருவாக்கிய பொம்மை, அவர்களை எதிர்த்து என்ன செய்யும் என்பதுதான் என் கேள்வி’’ என்றார் அரிபரந்தாமன்.   
 
சமூக ஆர்வலர் ஜெகதீஸ்வரன், லோக் ஆயுக்தாவுக்காக தொடர்ந்து போராடி வந்தவர். அவர், ‘‘பல மாநிலங்களில் லோக் ஆயுக்தா சுதந்திரமான அமைப்பாக இருக்கிறது. அங்கு ஒரு புகார் கொடுத்தால், லோக் ஆயுக்தா புலனாய்வு அமைப்பு, விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும், ஆனால், தமிழக லோக் ஆயுக்தாவில் ஒரு புகார் கொடுத்தால், அதனை ஊழல் தடுப்புத் துறைக்கு அனுப்புவோம் என்கின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்தத் துறை செய்த குட்கா ஊழல் விசாரணை எப்படி நேர்மையாக நடந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.  
 
ஒருவர்மீதான குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரங்கள் இருந்தால், அவரை சஸ்பெண்டு செய்ய வேண்டும். ஆனால், நம் லோக் ஆயுக்தாவின்படி நிர்வாகக் காரணங்களுக்காக ஒருவரைப் பதவிநீக்கம் செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்ததாக யார்மீதும் குற்றச்சாட்டு சொல்ல முடியாது என்றும் ஓர் அம்சத்தை லோக் ஆயுக்தாவில் கொண்டு வந்திருக்கின்றனர். எந்த மாநில லோக் ஆயுக்தாவிலும் இப்படி இல்லை. இதிலிருந்தே எவ்வளவு தூரம் இவர்கள் பயந்து போயிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் டெண்டர்களில் ஏகப்பட்ட சந்தேகங்கள் எழுகின்றன. மாநகராட்சிகளில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. ஆனால், இவை லோக் ஆயுக்தா வரம்பில் வராதாம். கர்நாடகா லோக் ஆயுக்தா, ஊழல் புகார்களைத் தானாக முன்வந்து விசாரணை செய்யும். ஆனால், தமிழகத்தில் அப்படி ஓர் அம்சம் இல்லை’’ என்றார்.
 
 
 
அரசின்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ஜெயக்குமாரிடம் விளக்கம் கேட்டோம். ‘‘எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இந்தச் சட்டத்தை முழுமையாகப் படிக்கவேண்டும். முதல்வர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை யார் முறைகேடு செய்தாலும் விசாரணைக்கு உட்பட்டவர்கள்தான். லோக் ஆயுக்தாவில் அரசியல் தொடர் புள்ளவர்கள் நியமிக்கப்படமாட்டார்கள். அரசின் நியமனத்துக்கு, எதிர்க்கட்சித்தலைவர் எதிர்ப்பு தெரிவிக்க முடியும். எனவே, எதிர்க்கட்சித் தலைவருக்கு மரியாதை கொடுத்து உரிய முறைப்படிதான் நியமனம் இருக்கும். மக்களுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்பதால் இதில் தவறு நடக்க வாய்ப்புகள் இல்லை.   
 
உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் முறைகேடுகளை விசாரிக்க நிதிக்கமிஷன் அறிவுரைப்படி குறைதீர் மன்றம் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு பல வழக்குகள் நடத்தப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதே நேரத்தில் டெண்டர் முறைகேடுகள் குறித்து விசாரிக்க லோக் ஆயுக்தாவுக்கு அதிகாரம் இருக்கிறது. பொது ஊழியர்கள்மீது சிலர் வேண்டுமென்றே தனிப்பட்ட விரோதத்தின்பேரில் புகார் கொடுக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால்தான், பொய்ப்புகார்கள் கொடுத்தால் அபராதம், சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. உரிய ஆதாரங்களுடன் புகார்கள் கொடுத்தால், உரிய விசாரணை நடைபெறும்’’ என்றார்.  
 
ஜனநாயகத்தைக் காப்பாற்ற சட்டம் கொண்டுவரச் சொன்னால், தங்களைக் காப்பாற்றிக்கொள்ள எடப்பாடி அரசு சட்டம் கொண்டு வந்திருக்கிறது!