img/728x90.jpg
தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பணம்?

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பணம்?

 தமிழகம் முழுவதும் 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சோதனையிட்டனர். இந்தச் சோதனையில் 160 கோடி ரூபாய் பணம், 100 கிலோ தங்கம் சிக்கியது. சொத்துப் பத்திரங்கள், முதலீடுகள், நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் அடங்கிய முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் சாக்குமூட்டையில் கட்டி எடுத்துச் சென்றனர்.

 
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், தமிழகத்தில் வருமான வரித்துறையின் வேகம் அதிகரித்துள்ளது. 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, சென்னை என்று பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில்வராத பலகோடி ருபாய் பணம் சிக்கியது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, சேகர் ரெட்டி, ராமமோகன ராவ் உள்ளிடோரிடம் வருமான வரித்துறையிர் மேற்கொண்ட சோதனையில் பல நூறுகோடி சிக்கியது. ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் நின்றபோது ஓட்டுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது. அப்போது, வருமான வரித்துறை மேற்கொண்ட சோதனையில் 89 கோடி ரூபாய் பட்டுவாடா நடந்ததற்கான ஆவணங்கள் கிடைத்தன. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களும் வருமான வரித்துறையினரின் சோதனைக்குத் தப்பவில்லை.
 
அதன் பிறகு, சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள் என்று மொத்தம் 187 இடங்களில் 1,800 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை சில நாள்கள் நீடித்தது. அதன் பின்னர், சில மாதங்கள் அமைதியாக இருந்த வருமான வரித்துறையின் வேகம் இப்போது மீண்டும் தீவிரமெடுத்துள்ளது. தமிழக அரசின் திட்டங்களுக்கு முட்டை, சத்துமாவு, பருப்பு வகைகள் வழங்கும் கிறிஸ்டி நிறுவனத்தில் ஜூலை 5-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதே நேரத்தில் அக்னி குரூப் கம்பெனிகளிலும் சோதனை போட்டனர். இந்தச் சோதனை ஐந்து நாள்கள் நீடித்தது. அமெரிக்க டாலர்கள், ரூ.250 கோடி ரூபாய், பல கோடி ரூபாய் மதிப்பில் அரசு டெண்டர் எடுத்தற்கான ஆவணங்கள் என்று பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகின.
 
இதற்கிடையில், ஜூலை 9-ம் தேதி சென்னை வந்த பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷா, `நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக ஊழல் நடக்கிறது' என்று குற்றம்சாட்டிவிட்டுச் சென்றார். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார், ``முட்டை நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்தது குறித்துதான் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருக்கிறது. ஆனால், முட்டை கொள்முதலில் ஊழல் என்று எப்படிச் சொல்ல முடியும்? எனவே, தமிழக அரசு மீது குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும். இந்த ஆட்சி மீது களங்கம் ஏற்படுத்த நடக்கும் பிரசாரங்களை முறியடிப்போம். தேவையில்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மாநில அரசு மீது சுமத்துவது வாடிக்கையாக இருக்கிறது. இப்படி வசைபாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அ.தி.மு.க தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்'' என்றார். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ``ஊழல் இருந்தால் வழக்குப் போடுவதை விட்டுவிட்டு பொத்தாம் பொதுவாகப் பேசக் கூடாது'' என்று சவால் விட்டார்.
 
இந்த நிலையில் கிறிஸ்டி, அக்னி நிறுவனங்களைத் தொடர்ந்து தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகள், அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியைச் சேர்ந்தவர் செய்யாத்துரை. தமிழக அரசின் முதல் நிலை ஒப்பந்ததாரர். அவரின் வாரிசுகளும் அத்தொழிலில் உள்ளனர். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப்பணிகள், சாலைப்பணிகளை செய்யாத்துரையின் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 
 
அரசியல் செல்வாக்கு உள்ள பல வி.ஐ.பி-க்கள் எடுக்கும் டெண்டர்களை இவர்தான் துணை ஒப்பந்தம் மூலம் நிறைவேற்றிக் கொடுக்கிறார். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அரசு ஒப்பந்த வேலைகள் செய்யாத்துரை நிறுவனம் மூலம் நடந்து வருகிறது. இவருடைய நிறுவனத்தின் வி.ஐ.பி-க்கள் தொடர்பு பற்றி வருமான வரித்துறைக்குப் புகார் போய் இருந்தது. அதுபற்றி, ரகசிய விசாரணை நடத்திய அதிகாரிகள், நேற்று அதிகாலை களத்தில் இறங்கினர். தமிழகம் முழுவதும் 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சோதனையிட்டனர். இந்தச் சோதனையில் 160 கோடி ரூபாய் பணம், 100 கிலோ தங்கம் சிக்கியது. சொத்துப் பத்திரங்கள், முதலீடுகள், நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் அடங்கிய முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் சாக்குமூட்டையில் கட்டி எடுத்துச் சென்றனர். வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களைக்காட்டி அதோடு தொடர்புடைய விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டனர். வங்கிக்கும் சென்று வரவு, செலவு விவரங்கள் குறித்து சில விளக்கங்களைக் கேட்டனர். வங்கி லாக்கர்கள் பற்றிய விவரங்களையும் கேட்டறிந்தனர். மேலும், செய்யாத்துரை நிறுவனத்தின் பெயரில் உள்ள வாகனங்கள் குறித்தும் ஆய்வு செய்தனர். அப்போது சில கார்கள் செய்யாத்துரை வீட்டிலும் அவரது அலுவலகங்களிலும் இல்லை. எனவே, அதுபற்றிய விவரங்கள் பற்றி விசாரணை நடத்தினர். 
 
செய்யாத்துரையின் டிரைவரைப் பிடித்து விசாரித்தனர். அவர் கூறியதன் அடிப்படையில் மூன்று கார்களில் பல கோடி ரூபாய் மறைத்து வைக்கப்பட்டு, அந்த கார்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரிவித்தார். அதில் ஒரு கார், தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி கே.என்.ரவிச்சந்திரன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அங்கு, டிரைவருடன் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், அந்த காரைத் திறந்து பார்த்தனர். அதற்குள் 24 கோடி ரூபாய் இருந்தது. இதுகுறித்து, டி.வி.எச் தரப்பில் விசாரித்தபோது, ``சென்னை சோழிங்கநல்லூர் அருகே டி.வி.எச் நிறுவனம் 900 ராணுவ வீரர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வளாகத்தில் ரோடு போடும் வேலையை செய்யாத்துரை நிறுவனம் செய்கிறது. மேலும், டி.வி.எச் நிறுவனத்துக்கும் செய்யாத்துரை நிறுவனத்துக்கும் தொழில்முறை உறவு இருக்கிறது. அந்த அடிப்படையில், சில தினங்களுக்கு முன்பு, கே.என். ரவிச்சந்திரன் வீட்டுக்கு வந்த செய்யாத்துரை, அவர் வந்த காரை அங்கு நிறுத்தி விட்டு வேறு காரில் சென்றார். இந்தச் சோதனைக்கும் டி.வி.எச் நிறுவனத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை'' என்றனர். 
 
இதுகுறித்து வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், ``நூதன முறையில் போயஸ்கார்டன் பகுதியில், தீபக் என்பவர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட 28 கோடி ரூபாயும், பெசன்ட் நகரில் கார் ஒன்றில் 24 கோடி ரூபாயும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. சேத்துப்பட்டில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சோதனையிட்டபோது, 30 கோடி ரூபாய் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வருமான வரித்துறையின் இந்த அதிரடிச் சோதனையில், மொத்தம் 160 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது'' என்றனர். சில தினங்களுக்கு முன்னர் கிறிஸ்டி, அக்னி குரூப் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை போட்டபோதே செய்யாத்துரையைப் பிடித்திருந்தால் இன்னும் பல நூறுகோடி ரூபாய்வரை சிக்கி இருக்கும்; ஏராளமான ஆவணங்களும் பிடிபட்டிருக்கும் என்று வருமான வரித்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால், செய்யாத்துரை உஷாராகி மறைத்துள்ள ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.