• :
  • :
களத்தில்

என் மீது நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம் அ.தி.மு.கவுக்கு சவால்விடும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ

 என் மீது நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம் அ.தி.மு.கவுக்கு சவால்விடும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ

அ.தி.மு.கவின் மூன்று எம்.எல்.ஏ-க்களையும் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளராக நியமித்திருக்கிறார் டி.டி.வி.தினகரன். ``அதிகாரத்தில் இருப்பவர்கள் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும் பார்க்கலாம். இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் எல்லாம், எங்களை நோக்கி வரத்தான் போகிறார்கள்" என்கிறார் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ பிரபு. 

 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு உள்பட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். இதில், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களான விருதாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி ஆகியோருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அ.தி.மு.க வட்டாரத்தை அதிர வைத்திருக்கிறது. இதுகுறித்து இன்று பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ' அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' எனப் பேட்டி அளித்தார். ' 18 எம்.எல்.ஏக்களுக்கு ஏற்பட்ட அதேநிலை, இந்த மூன்று எம்.எல்.ஏ-க்களும் நேரும்' என அ.தி.மு.க வட்டாரத்தில் விவாதம் கிளம்பியுள்ளது. 
 
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவிடம் பேசினோம். 
 
`அ.ம.மு.கவில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட 3 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்' என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறாரே? 
 
`` என் மீதுள்ள பாசத்தில் பொறுப்பாளராக நியமித்திருக்கிறார் அண்ணன் டி.டி.வி. அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரும் உண்மையான அ.தி.மு.க-வினர் கிடையாது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அ.தி.மு.க மூலமாகத்தான் எம்.எல்.ஏ ஆனேன். அம்மா இருந்தவரையில் என்னை நல்லபடியாகப் பார்த்துக்கொண்டார். இவர்கள் என்னுடைய தொகுதிக்கு எந்த நல்ல காரியமும் செய்யவில்லை. என் மீது நடவடிக்கை எடுக்க, இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. அ.தி.மு.கவில் இவர்கள் நீடிப்பார்களா என்பதற்குக் காலம் பதில் சொல்லும்." 
 
இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆன பிறகு, இன்னொரு கட்சிக்குள் பொறுப்பு வாங்குவது எந்த வகையில் சரியானது? 
 
`` நான் ஒன்றும் கட்சியைவிட்டுக் கட்சி மாறவில்லையே...அ.தி.மு.கவின் ஒரு பிரிவில்தானே இருக்கிறேன்." 
 
அ.தி.மு.கவும் அ.ம.மு.கவும் ஒன்றா? 
 
`` ஆமாம். அம்மா இறந்த பிறகு அ.தி.மு.க இரண்டு அணியாகப் பிரிந்தது. சின்னம்மா தலைமையில் ஓர் அணியும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியும் பிரிந்தது. பின்னர், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், ஓ.பி.எஸ் பக்கம் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். நாங்கள் சின்னம்மா அணியில் தொடர்ந்து நீடிக்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம். எங்கள் அணிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயர் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது."