img/728x90.jpg
5 வருஷம் கழிச்சு அமராவதில தண்ணீர் ஆனா, சந்தோஷமில்ல! சோகத்தில் கரூர் விவசாயிகள்

5 வருஷம் கழிச்சு அமராவதில தண்ணீர் ஆனா, சந்தோஷமில்ல! சோகத்தில் கரூர் விவசாயிகள்

 ஐந்து வருடம் கழித்து அமராவதி ஆற்றில் தண்ணீர் வந்தாலும், அதைக் கொண்டாட முடியாத மனநிலையில் இருக்கின்றனர் கரூர் விவசாயிகள்.

``5 வருஷம் கழிச்சு அமராவதில தண்ணீர்... ஆனா, சந்தோஷமில்ல!’’ - சோகத்தில் கரூர் விவசாயிகள்
வராது வந்த மாமணிபோல் ஐந்து வருடங்கள் கழித்து, கரூர் நகரைக் கிழித்துக்கொண்டோடும் அமராவதி ஆற்றில் தண்ணீர் வந்திருக்கிறது. தென்மேற்குப் பருவமழை கருணை காட்டியதின் விளைவு, அமராவதி ஆற்றில் இப்போது தண்ணீர் ஓடுகிறது. திருமாநிலையூர் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றுப் பாலத்தின்மீது நின்றபடி பொதுமக்கள், அமராவதி ஆற்றில் வந்த தண்ணீரை வாய்பிளந்து அதிசயித்துப் பார்க்கின்றனர். ஆனால், அமராவதி ஆற்றில் வந்த தண்ணீரைப் பார்த்து உண்மையில் சந்தோஷப்படவேண்டிய விவசாயிகளோ, சோகம் கப்பிய முகத்தோடு உள்ளனர். ``அமராவதி ஆற்றில் 5 வருடங்களுக்குப் பிறகு தண்ணீர் வருது. அதை வைத்து இதுநாள்வரை தரிசாக கிடந்த 30,000 ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்க்கலாம்தான். ஆனால், கரூர் நகரில் அமராவதி ஆற்றை ஒட்டியிருக்கும் நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகள், இந்தத் தண்ணீரில் சாயக்கழிவுகளைத் திறந்துவிடுவார்கள். இதனால், விவசாயம் மட்டுமல்ல; ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் குடிக்கும் தண்ணீர்கூட விஷமாகிப் போகும். அதனால், அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரை அடையுங்கள்" என்று எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி இருக்கிறார்கள் அவர்கள். 
 
அமராவதி ஆறு, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகரில் உள்ள அமராவதி அணையில் இருந்து பிரிகிறது. திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பாய்ந்து, கரூர் மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடலூர் கிராமத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது. வாய்மடை தொடங்கி கடைமடை வரை அமராவதி ஆறு 240 கிலோமீட்டர் தூரம் கொண்டது. இந்த ஆற்றை நம்பி கரூர் மாவட்டத்தில் 30,000 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெற்றது. ஆனால், அந்த நிலங்களில் விவசாயம் நடந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில்தான் தற்போது அமராவதி அணையில் இருந்து 1,300 கன அடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், சந்தோஷப்பட வேண்டிய விவசாயிகளோ சொல்லொண்ணா துக்கத்தில் இருக்கிறார்கள். 
 
 அமராவதி
 
இதுபற்றி, நம்மிடம் பேசிய விவசாயிகள் சிலர், ``கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆறு கொத்தபாளையத்தில் வந்து சேருகிறது. அங்கிருந்து காவிரி ஆற்றில் அமராவதி ஆறு கலக்கும் திருமுக்கூடலூர் வரை 60 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. இந்த 60 கிலோமீட்டரிலும் ஆற்றின் இருபுறமும், ஆற்றின் கிளைவாய்க்கால்கள் மூலமும் 30,000 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. ஆனால், இந்த 30,000 ஏக்கர் நிலத்திலும் இந்த ஆற்றை நம்பி நன்றாக விவசாயம் நடந்து 15 வருடங்களுக்கு மேல் இருக்கும். 5 வருடங்களுக்கு முன்பு வரை அமராவதி ஆற்றில் தண்ணீர் வந்தாலும், எங்களால் முழுதாக விவசாயம் செய்ய முடியாத சூழலே இருந்தது. காரணம், ஆற்றின் இருகரைகளிலும் இருக்கும் சாயப்பட்டறைகள்தான். அந்த சாயப்பட்டறைகளின் கழிவுநீரை அமராவதி ஆற்றில் கலந்துவிட்டதால், நிலத்தின் தன்மை முழுக்க உப்பாக மாறிட்டு. இதனால், பதினைந்து வருடங்களாக விவசாயம் செய்யாமல் தரிசா போட்டிருந்தோம். கடந்த அஞ்சு வருஷமா கொஞ்சநஞ்சம் நடந்த விவசாயத்தையும் நாங்க செய்யலை. காரணம், அமராவதி ஆற்றில் தண்ணீர் வராது. 
 
ஆனால், ஐந்து வருடங்களுக்குப் பிறகு இப்போது தண்ணீர் வந்திருக்கு. இந்தமுறையும் நாங்க விவசாயம் செய்ய முடியாது. சாயப்பட்டறைகள் இத்தனை நாள்கள் தேக்கி வைத்திருந்த கழிவு நீரை இனி ஆற்றில் கலந்துவிடுவாங்க. இதனால், நாங்க போடுற பயிர் கருகிப் போய்விடும். அதைவிட, நிலத்தடி நீர் இன்னும் மோசமாக உப்பாக மாறி, எங்களால் குடிக்க முடியாது. ஏற்கெனவே இங்குள்ள தண்ணீரைக் குடித்து கிட்னி ஃபெயிலியர், கேன்சர்ன்னு பல கொடிய நோய் வந்து பலர் மடிஞ்சுகிட்டு இருக்காங்க. இதுல, இந்த வருடம் கடுமையாக தண்ணீர் வருவதால், எக்கச்சக்கமான கழிவுநீரை கலந்துவிட்டு, 'தண்ணியை குடிச்சதும் சாவு'ங்கிற நிலைமைக்கு எங்களை தள்ளிடுவாங்க. அதனால், அரசும் மாவட்ட நிர்வாகமும் சாயப்பட்டறைக் கழிவு பிரச்னைக்கு ஒரு முடிவு பண்ணிட்டு, அமராவதி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் திறக்கட்டும். இல்லைன்னா, தயவுசெய்து அமராவதி ஆற்றில் அவர்கள் தண்ணீர் திறக்காமல் இருப்பதே நல்லது" என்றார்கள் வேதனையாக.
 
ராமலிங்கம்இதுபற்றி, நம்மிடம் கூடுதல் தகவல்களோடு பேசிய நிலத்தடி நீர்மட்டம் மற்றும் கழிவுநீர் பாதிப்பு விவசாயச் சங்க கரூர் மாவட்டச் செயலாளர் ராமலிங்கம், ``கரூர் மாவட்ட விவசாயிகள் உண்மையில் பரிதாபத்துக்குரியவர்கள். இல்லைன்னா, கரூர் மாவட்டத்தில் அமராவதி, காவிரி, நொய்யல்ன்னு மூன்று ஆறுகள் பாய்ஞ்சும், இங்கு விவசாயம் செய்யவே முடியாமலும், குடிநீரைக் குடிக்கவே அஞ்சும் மக்கள் இருப்பார்களா? பத்து வருடங்களுக்கு முன்புவரை கரூரில் 526 சாயப்பட்டறைகள் இயங்கி வந்தன. அமராவதி ஆற்றில் அத்தனை சாயப்பட்டறைகளும் சுத்திகரித்து ஆலை கழிவுநீரை திறந்துவிடாமல், விதிகளை மீறி, அப்படியே திறந்துவிட்டார்கள். இதனால், இங்குள்ள விவசாய நிலங்கள் பாழ்பட்டதோடு, நிலத்தடி நீரும் விஷமாகிப்போனது. இந்த தண்ணீரைக் குடித்து பல ஆயிரம் கால்நடைகள் இறந்தன. நூற்றுக்கணக்கான மக்களுக்கு கேன்சர், கிட்னி ஃபெயிலியர் உள்ளிட்ட கொடிய வியாதிகள் வந்தன. காரணம், இந்த அமராவதி ஆற்றின் இருபுறமும் சில நூறு மீட்டர்கள் தூரத்துக்கு நிலத்தடி நீரில் 25 ஆயிரம் வரை டிடிஎஸ் அளவு இருந்ததுதான்.
 
பொதுவாக அதிகபட்சம் 500 டிடிஎஸ் கலந்துள்ள தண்ணீரை குடித்தாலே மனிதர்களுக்கு பல பிரச்னைகள் வரும்ன்னு சொல்வாங்க. ஆனா, 25 ஆயிரம் வரை டிடிஎஸ் அளவு இருந்துச்சுன்னா, இங்குள்ள மக்களுக்கு எவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டிருக்கும்ன்னு கணக்குப் போட்டுக்குங்க. இதனால், வெகுண்டெழுந்த நாங்க பல போராட்டங்களை நடத்தினோம். ஆனா, எங்க பிரச்னைகள் தீரலை.
இதனால், உயர்நீதிமன்றத்தை நாடினோம். 2004-ம் வருடம் நச்சு சாயக்கழிவுகளை ஆற்றில் கலக்கும் சாயப்பட்டறைகளை இழுத்து மூடச் சொல்லி நீதிமன்றம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, அப்போது மொத்தம் இருந்த 526 சாயப்பட்டறைகளில் 450 சாயப்பட்டறைகளை இழுத்து மூடினாங்க. ஜீரோ டிஸ்சார்ஜ் கழிவுநீரை திறந்துவிடுவதாகக் கூறி 66 சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. ஆனால், அரசு அனுமதி இல்லாமல் பல சட்டவிரோத சாயப்பட்டறைகளும் இயங்கி வருகின்றன. இப்படி இப்போது இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளும் கழிவுநீரை மழைக்காலங்களில் அதிகமாகத் திறந்துவிட்டன. அமராவதி ஆற்றில் தண்ணீர் வராத இந்த ஐந்து ஆண்டுகளில் வெறும் ஆற்றிலேயே இரவு நேரங்களில் கழிவுநீரைத் திறந்துவிட்டன. கேட்டால், 'சாக்கடை கழிவு அது இது'ன்னு மழுப்பினாங்க. மாசுக்கட்டுப்பாட்டு முக்கிய அதிகாரியே இங்குள்ள சாயப்பட்டறைகளிடம் விலை போனார். 
 
சாயப்பட்டறை முதலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களுக்கு சேவகம் பண்ணும் அந்த அதிகாரியை மாற்றலாகிப் போகவிடாமல் இங்கேயே இருக்கும்படி செய்திருக்கிறார்கள். வெறும் ஆற்றிலேயே சாயப்பட்டறை கழிவுநீரைக் கலந்த சாயப்பட்டறைகள் ஐந்து வருடங்கள் கழித்து, 1,300 கன அடி தண்ணீர் வரும்போது சும்மா இருப்பார்களா? நினைத்த நேரத்தில் விருப்பப்பட்டபடி எவ்வளவு கொடிய விஷத்தன்மை வாய்ந்த கெமிக்கல்கள் கலந்த கழிவுநீரையும் அமராவதி ஆற்றில் கலந்துவிடுவார்கள். அமராவதி ஆற்றில் தண்ணீர் வந்துள்ளதை உண்மையில் அவர்கள்தாம் ஆனந்தமாக வரவேற்கிறார்கள். இதனால் 30,000 விவசாய நிலங்களை பழையபடி நாங்க தரிசா போட வேண்டியதுதான். இப்படி சாயப்பட்டறைகளால் எங்களுக்குப் பிரச்னை என்பது ஒருபக்கம் இருக்கட்டும். இந்த சாயப்பட்டறைகள் கழிவுநீர் கலந்து போகும் அமராவதி ஆற்று நீர் காவிரியில் கலக்கும். அந்த நீரால் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தும். எல்லோரும் சாயப்பட்டறை கழிவுநீர் கலந்த குடிநீரை குடிச்சுட்டு பாதிக்கப்பட வேண்டியதுதான். அதனால், அமராவதி ஆற்றில் தண்ணீர் வருவதை இங்குள்ள விவசாயிகள் முழுமனதா விரும்பலை. இந்த சாயப்பட்டறைகளின் கழிவுநீரை அமராவதி ஆற்றில் கலக்காமல் செய்ய மாவட்ட நிர்வாகம் முதலில் உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இல்லை என்றால், அமராவதி ஆற்றில் மேற்கொண்டு தண்ணீர் திறக்காமல் நிறுத்தச் சொல்லி போராட்டம் நடத்துவோம்" என்றார் ஆக்ரோஷமாக!
 
இதுபற்றி, கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனிடம் பேசினோம். ``அமராவதி அணை சீராக நிரம்பத் தொடங்கியதுமே, இந்த முறை அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என்பதை யூகித்தோம். அதனால், ஒருமாதத்துக்கு முன்பே இங்குள்ள சாயப்பட்டறைகள் அனைத்துக்கும் விசிட் அடித்து, எல்லோரையும் எச்சரிக்கை செய்தோம். ஜீரோ டிஸ்சார்ஜ் கழிவுநீரை திறக்காமல்,கெமிக்கல் நிறைந்த கழிவுநீரை ஆற்றில் கலந்தால், சாயப்பட்டறைகள் சீஸ் செய்வோம்ன்னு எச்சரித்துள்ளோம். முறைகேடாக இயங்கி வந்த 8 சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். 'தொடர்ந்து அமராவதி ஆற்றில் கழிவுநீரை கலக்கிறார்களா' என அனைத்து சாயப்பட்டறைகளும் கண்காணிக்கப்படும். தவறு செய்யும் சாயப்பட்டறைகள் மீது உடனே நடவடிக்கை பாயும். விவசாயிகள் எந்த கவலையும் இல்லாமல் விவசாய வேலைகள் பார்க்கட்டும்" என்றார்.