img/728x90.jpg
ஊர்மக்களுக்காக ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள்!

ஊர்மக்களுக்காக ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள்!

ஊர்மக்களுக்காக ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள்! - திருத்துறைப்பூண்டி அதிசயம்
 
மற்ற மாநிலங்களில் மக்கள் பிரச்னைகளுக்காக, அங்குள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவது ஆச்சர்யமல்ல. ஆனால், தமிழ்நாட்டில் அப்படியல்ல. ஊரே அழிந்தாலும் ஒன்று சேரவே மாட்டார்கள். ஒன்றிய, கிளை அளவில் நிலைமை இன்னும் மோசம். கட்சிப் பாகுபாட்டால், எப்பொழுது எதிரும் புதிருமாகவே இருப்பார்கள்.
 
இந்நிலையில்தான் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், பா.ஜ.க, பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றாக இணைந்து செயல்படுவது மக்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
 
 
சமீபத்தில் திருத்துறைப்பூண்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் இங்குள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாயின. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, இப்பகுதியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகர்களும் ஒன்றாக இணைந்து ஒரு குழுவை உருவாக்கி இருக்கிறார்கள். முதல்கட்டமாக, இவர்கள் தங்களது சொந்தப் பணத்தைப் போட்டு, ரூ.3 லட்சம் நிதி சேர்த்து, பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்குப் பிரித்து கொடுப்பதென முடிவெடுத்துள்ளார்கள்.
 
தீ விபத்தில் எரிந்துபோன ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள், வீட்டுப் பத்திரங்கள் உள்ளிட்டவைகளைச் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளிடம் கலந்து பேசி, விரைவாகப் பெற்று தரும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்கள். தீயணைப்பு வாகனங்கள், ஊருக்குள் எளிதாக வந்து போவதற்கு ஏற்ற வகையில் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் முடிவெடுத்துள்ளார்கள். இதற்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கிறது.