img/728x90.jpg
திருமாவளவன்  கமல் ஓ கே ஆனால்  ராமதாஸ்  காங்கிரஸ் தலைமையிடம் கொதித்த தி மு க

திருமாவளவன் கமல் ஓ கே ஆனால் ராமதாஸ் காங்கிரஸ் தலைமையிடம் கொதித்த தி மு க

 தேர்தல் களத்தில் பா.ம.க தனியாக நின்று கொள்ளட்டும். இனியும் ராமதாஸ் ஆதரவு மனநிலையோடு குலாம் நபி ஆசாத் போன்றவர்கள், செயல் தலைவரிடம் பேச வேண்டாம் எனக் கூறியுள்ளனர் ஸ்டாலின் தரப்பினர்.

 
காங்கிரஸ் கூட்டணிக்கு ராமதாஸ் தூது அனுப்புவதைக் கடுமையாக எதிர்க்கிறது தி.மு.க. ' நம்முடைய கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. ராமதாஸை சேர்த்துக் கொள்வதால் நமக்குத்தான் நஷ்டம்' என  காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடம் உறுதியாகக் கூறியுள்ளனர் ஸ்டாலின் தரப்பினர். 
 
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக, மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான அணியைக் கட்டமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. இதன் ஒருபகுதியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனையும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனையும் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புகள் தி.மு.க தரப்பை உற்று கவனிக்க வைத்தது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது என்பதை இரண்டாம்கட்டத் தலைவர்களே பேசி வந்தனர். இதுகுறித்து ஸ்டாலின் தரப்பில் இருந்து உறுதியான பதில்கள் வரவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறுவது குறித்து மருத்துவர் ராமதாஸ் கூறிய கருத்துக்கள், தி.மு.க தரப்பைக் கொந்தளிக்க வைத்துள்ளது. 
 
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ' நான்கு ஆண்டுகால பா.ஜ.க ஆட்சிக்கு நூற்றுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண்களைத்தான் வழங்குவேன். மதவாத அரசாக பா.ஜ.க செயல்படுகிறது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்' எனக் கூறினார். இதற்குப் பதில் அளித்த தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர்.தமிழிசை, ' எங்கள் கூட்டணிக்கு வரும்படி ராமதாஸை நாங்கள் அழைக்கவில்லை. ஈழத் தமிழர்களுக்குக் காங்கிரஸ் செய்த துரோகத்தை அவர் மறக்கக் கூடாது' என்றார். இந்த மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும், காங்கிரஸ் அணிக்கு ராமதாஸ் விடுத்த  அழைப்பை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் தி.மு.கவின் மூத்த நிர்வாகிகள் சிலர். இதுகுறித்து ராகுல்காந்தியிடம் நேரடியாகப் பேசியுள்ளனர் ஸ்டாலின் தரப்பினர். ராகுலிடம் பேசிய தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், ' பா.ம.கவுடன் நாங்கள் எந்தக் காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம். ராமதாஸை கூட்டணிக்குள் கொண்டு வருவது குறித்து குலாம்நபி ஆசாத் எங்களிடம் பேசினார். அவரிடம், ' ராமதாஸை நம்ப முடியாது' என உறுதியாகக் கூறிவிட்டோம்.  
 
 
குலாம்நபி ஆசாத்குஜராத் கலவரத்துக்குப் பிறகும், பா.ஜ.க கூட்டணியில் அவர்கள் சேர்ந்தார்கள். ' பா.ஜ.கவோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை' என நாங்கள் தெளிவாகக் கூறிவிட்டோம். சி.பி.ஐ, அமலாக்கத்துறையைக் கையில் வைத்திருக்கும் பா.ஜ.கவை நாங்கள் நேரடியாக எதிர்க்கிறோம் என்பதற்காகத்தான் இதைக் கூறுகிறோம். ராமதாஸுக்கு ஆதரவாக உங்கள் கட்சியைச் சேர்ந்த சில தேசியத் தலைவர்கள் பேசி வருகிறார்கள். இன்று மத்திய அரசுக்கு எதிராக நடந்து வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஓட்டுப் போடுவதற்கு அன்புமணி போகவில்லை. பா.ம.கவின் இரட்டை வேடத்தையே இது காட்டுகிறது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் எப்போதும், ஒரு நிலையான அரசியல் நிலைப்பாட்டில் இருக்க மாட்டார்கள். இவர்களோடு சேர்ந்ததால்தான் 2011 தேர்தலில் மற்ற சமூகத்தினரும் எங்களுக்கு ஓட்டுப் போடவில்லை. இவர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வாக்குகளைவிட எதிர்ப்பு வாக்குகள் அதிகம். இவர்களை ஒரு பிளஸ்ஸாக நினைத்து, எங்களிடம் காங்கிரஸ் தலைவர்கள் பேச வேண்டாம்' என விவரித்தவர், 
 
தொடர்ந்து பேசும்போது, ' திருமாவளவனையோ, கமலையோ நீங்கள் சந்தித்தது குறித்து எந்தப் பதிலையும் நாங்கள் சொல்லவில்லை. திருமாவளவனைப் பார்த்தால், பட்டியலின சமூகரீதியான பிளஸ் நமக்கு வந்து சேரும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். கமல்ஹாசனைத் தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம். இவர்களைத் தவிர்த்து, பா.ம.கவை ஒரு சக்தியாக நீங்கள் பார்த்தால், வரக் கூடிய பட்டியலின வாக்குகளும் வராமல் போய்விடும். ராமதாஸ் செய்யும் அரசியலை நம்பினால், பெரிய பின்னடைவை நாம் சந்திக்க நேரிடும். இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு எதிராக அவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் அவர்களை சேர்த்தால், கட்சிக்காரர்கள் யாரும் தேர்தல் வேலை பார்க்க மாட்டார்கள். எதிர் அணிக்கு எளிதான வெற்றி கிடைப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக மாறிவிடும். எனவே, தேர்தல் களத்தில் பா.ம.க தனியாக நின்று கொள்ளட்டும். இனியும் ராமதாஸ் ஆதரவு மனநிலையோடு குலாம் நபி ஆசாத் போன்றவர்கள், செயல் தலைவரிடம் பேச வேண்டாம். நம்முடைய கூட்டணியைப் பற்றி நீங்கள் எந்தக் கவலையும் அடைய வேண்டியதில்லை. நீங்கள் யாரை சந்திப்பதாக இருந்தாலும், உங்கள் தரப்பில் இருந்து எங்களுக்குத் தகவல் வருகிறது. அந்த வகையில் மகிழ்ச்சி. ஒரு சிலரை நீங்கள் சந்திக்காமல் இருப்பதே நல்லது. அதில், ராமதாஸ் மிக முக்கியமானவர்' என விவரித்துள்ளனர்.