img/728x90.jpg
சாதியைத் தாண்டி நம்மால முன்னேற முடியாதம்மான்னு கேப்பான் சாதிக்கொடுமையால் உயிரைவிட்ட சரவணன் தாய்

சாதியைத் தாண்டி நம்மால முன்னேற முடியாதம்மான்னு கேப்பான் சாதிக்கொடுமையால் உயிரைவிட்ட சரவணன் தாய்

 `ஏன் சார், தாழ்த்தப்பட்ட மாணவன் நல்லாப் படிக்கக் கூடாதா? பாட்டு, விளையாட்டுனு திறமைகளை வளர்த்துக்கக் கூடாதா?. `சாதிகள் இல்லையடி பாப்பா'னு சொல்லவேண்டிய ஆசிரியைகளே, இப்படிச் சாதி வன்மத்தால், அநியாயமாக சரவணன் உயிரை எடுத்துட்டாங்களே.

``தீண்டாமை மனிதநேயமற்ற செயலும் பெருங்குற்றமும் ஆகும்' என்று பள்ளிப் பாடப்புத்தகங்களில் கொட்டைக் கொட்டையாகப் போட்டிருக்காங்க. ஆனால், நிஜத்துல அந்தப் பள்ளிக்கூடத்திலேயே தீண்டாமை இருக்கு. வாத்தியார்களே, மாணவர்களிடம் சாதி துவேஷத்தை வளர்க்கிறாங்க. மூன்று ஆசிரியர்களின் சாதியக் கொடுமையைத் தாங்க திராணி இல்லாமல் என் உயிருக்கு உயிரான நண்பன் தூக்குல தொங்கிட்டான். அதுக்குக் காரணமான ஆசிரியர்களை சட்டமோ, போலீஸோ எதுவுமே செய்யலை. பேசாம, `இன்ன சாதி மாணவர்கள் மட்டும் இந்தப் பள்ளிகூடத்துல படிக்கலாம்'னு எல்லாப் பள்ளிகளிலும் அரசாங்கமே எழுதிப் போடட்டும் சார். எங்களுக்கு உசுராவது மிஞ்சும்"
 
நண்பனை இழந்த பெருங்கோபம், யுவராஜ் வார்தைகளில் தெறிக்கிறது. தனது நண்பன் சாவுக்குக் காரணமான பள்ளி ஆசிரியைகளைப் பற்றி ஆவேசமாகப் பேசியவைதாம் மேலிருக்கும் வரிகள்.
 
கரூர் மாவட்டம், ஆண்டான்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். இதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், சரஸ்வதி தம்பதியின் மகனான சரவணன், அருகில் உள்ள செயின்ட் அந்தோணி பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். யுவராஜின் நெருங்கிய நண்பரான இவர், திடீரென 24.01.2018 அன்று வீட்டில் தூக்கு மாட்டி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
 
`சரவணன் சாவுக்குக் காரணமான ஆசிரியைகள் ஜெயந்தி, தேவி, சுமதி மீதும், சாதி துவேஷம் நடக்க வாய்ப்பளித்த பள்ளி மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று சரவணனின் பெற்றோர், சட்டப் போராட்டம் நடத்திவருகிறார்கள். சரவணன் மரணம் பற்றி தன் பங்குக்குக் கானா பாடல் இயற்றிப் பாடி,சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் யுவராஜ். சாதிக் கொடுமையால் இறந்த சரவணன் அம்மா
 
சரவணனின் தாய் சரஸ்வதி, ``நாலாவது வகுப்பிலிருந்து சரவணன் இந்த ஸ்கூலுலதான் படிச்சான். பத்தாம் வகுப்பில் 470 மார்க் வாங்கினான். பாட்டு, டான்ஸ், கட்டுரை, பேச்சுப் போட்டி, விளையாட்டுனு எல்லாத்திலும் கலந்து ஜெயிப்பேன். எல்லோர்கிட்டயும் அன்பாப் பேசுவான். இவன் எல்லாத்திலும் முதல்ல வந்ததால், கிளாஸ் லீடரா போட்டிருக்காங்க. `ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதா?'னு ஆசிரியைகள் ஜெயந்தி, சுமதி, நூலக ஆசிரியை தேவி என மூணு பேரும் அடிக்கடி இழிவாப் பேசியிருக்காங்க.
 
சில மாணவர்களின் வீடுகளுக்கே போய், `உங்க பிள்ளையை சரவணனோடு பழக விடாதீங்க. சரவணனின் கீழ்சாதி புத்தி தொத்திக்கும்'னு சொல்லியிருக்காங்க. பீஸ் கட்ட தாமதமாச்சுன்னா, எல்லா மாணவர்கள் முன்னாடியும் இவனைச் சாதியைச் சொல்லித் திட்டியிருக்காங்க.
 
`சாதியைத் தாண்டி நம்மால முன்னேற முடியாதாம்மா?'னு என்கிட்ட அழுவான். `இன்னும் சில மாசத்துல படிப்பு முடிஞ்சுரும். பல்லைக் கடிச்சுட்டு பொறுத்துக்க'னு சொல்வேன். பள்ளியின் முதல்வர் அனீஸ் என்கிற எல்சி ஜோசப்பிடம், அந்த ஆசிரியைகள் பற்றி புகார் பண்ணினேன். `அப்படி யாரும் டார்ச்சர் பண்ணலை. உங்க மகன் கற்பனையாச் சொல்றான்'னு சொல்லிட்டார். ஆனால், சரவணனோடு படிக்கும் மாணவர்கள், மூன்று டீச்சர்களின் டார்ச்சர்களை புட்டுப் புட்டு வெச்சும், பள்ளி முதல்வர் கண்டுக்கலை'' எனக் கலங்கும் கண்களுடன் தொடர்கிறார்.
 
``சரவணன் தற்கொலை பண்ணிக்கிறதுக்கு முதல்நாள், `உனக்கு பிராக்டிக்கல் மார்க்கு போடமாட்டோம். நீ எப்படி பாஸ் பண்ணுறேன்னு பார்க்கிறோம்'னு மிரட்டி இருக்காங்க. வீட்டுக்கு வந்தவன், எல்லோரும் தூங்கியன பிறகு தனியறையில் தூக்குப்போட்டுக்கிட்டான். விடிஞ்சதும் தூக்குல தொங்கற காட்சியைப் பார்த்ததும் நெஞ்சே வெடிச்சுப்போச்சு. கரூர் நகர காவல் நிலையத்துல புகார் கொடுத்தோம். அவங்க பள்ளிக்கு ஆதரவா பேசி, கேஸை எடுத்துக்கவே இல்லே.
 
கலெக்டர், எஸ்.பி, கோர்ட்டுன்னு சட்டப் போராட்டம் நடத்தினதில், 12.03.2018-ல், `தற்கொலைக்குத் தூண்டினார்கள்'னு எஃப்.ஐ.ஆர் போடவைத்தோம். ஆனால், அந்த ஆசிரியைகளை அரெஸ்ட் பண்ணலை. இப்போ, `இந்த வழக்கில் பள்ளி ஆசிரியைகள் குற்றம் செய்தார்கள் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை'னு சொல்லி, கேஸை முடிச்சுட்டாங்க. அதனை எதிர்த்து கேஸ் போட போறோம். என் மகன் சாவுக்கு ஆசிரியைகளின் சாதிய காழ்ப்புஉணர்ச்சியே காரணம். 16 மாணவர்கள், `சரவணன் சாவுக்குக் காரணம் அந்த மூன்று ஆசிரியைகள்தாம்'னு சொல்லியும், போலீஸ் கண்டுக்கலை. இப்போ அந்த மாணவர்களையும் பள்ளியில் மிரட்டறாங்க. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றச் சொல்லி, மதுரை ஹைகோர்ட்டுல வழக்கு தொடுக்கப் போறோம். ஆசிரியைகளின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவெச்சு, அந்தப் பள்ளியின் அங்கீகாரத்தையும் ரத்துப் பண்ணவைக்கணும்'' என்கிறார் அந்தத் தாய் ஆவேச்சத்துடன்.யுவராஜ்
 
நண்பன் சரவணன் குறித்து யுவராஜ், ``நானும் சரவணனும் அஞ்சாம் வகுப்பு வரை அந்த ஸ்கூல்ல ஒண்ணாப் படிச்சோம். அவனை எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் அவ்வளவு பிடிக்கும். ஏன்னா, அவன் அவ்வளவு நல்லவன். அவனை மாதிரி ஒரு திறமையான மாணவனைப் பார்க்க முடியாது. எவ்வளவோ கனவுகள் வெச்சிருந்தான். `இந்தச் சாதி தடுக்க தடுக்கத்தான் எனக்கு வெறிக்கொண்டு மேலே போகணும் சொல்லுது. என்னைத் துரத்தும் சாதியை எதிர்காலத்தில் துரத்தி அடிப்பேன்'னு சொல்வான். அந்த அளவுக்கு அந்த மூன்று ஆசிரியைகளும் டார்ச்சர் பண்ணியிருக்காங்க.
 
சரவணனின் பெரியப்பா, பள்ளிகூடத்துக்குப் பக்கத்துல கடை வெச்சுருக்கார். அங்கே சில மாணவர்கள் பொருள்களை வாங்கினாங்க. இது தெரிஞ்சதும் அந்த மூணு ஆசிரியைகளும், பள்ளிக்கூட ஓபன் மைக்கில், `ஒரு கீழ்சாதிக்கார நபரின் கடையில் எப்படிப் பொருள்கள் வாங்கலாம். இனிமேல் அப்படி வாங்க கூடாது'னு சொல்லியிருக்காங்க. சரவணன் மாதிரியே அங்கே படிக்கும் மற்ற தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் டார்ச்சர் பண்ணியிருக்காங்க. படிப்பு, விளையாட்டுன்னு சகல விஷயத்திலயும் முன்னாடி இருந்ததால், சரவணனுக்கு ஓவர் டார்ச்சர் கொடுத்திருக்காங்க. ஒருகட்டத்தில் தாங்கமுடியாமல், இந்த உலகத்தை விட்டே போயிட்டான்'' எனக் குமுறுகிறார்.
 
``ஏன் சார், தாழ்த்தப்பட்ட மாணவன் நல்லாப் படிக்கக் கூடாதா? பாட்டு, விளையாட்டுனு திறமைகளை வளர்த்துக்கக் கூடாதா?. `சாதிகள் இல்லையடி பாப்பா'னு சொல்லவேண்டிய ஆசிரியைகளே, இப்படிச் சாதி வன்மத்தால், அநியாயமாக சரவணன் உயிரை எடுத்துட்டாங்களே. இதைச் சும்மா விடக் கூடாதுன்னுதான், எனக்குத் தெரிஞ்ச கானா பாட்டுல, சரவணன் சாவைப் பற்றி பாடி, சமூக வலைதளங்களில் வெளியிட்டேன். `பள்ளிக்கூடத்துல சாதி பார்க்காதீங்க. மாணவர்களை படிக்க வர்ற மாணவர்களாக மட்டும் பாருங்க'னு பேசியிருக்கேன்'' என்கிறார் யுவராஜ்.
 
 அந்த மூன்று ஆசிரியைகளிடமும் பேச முயன்றோம். நம்மிடம் பேசுவதைத் தவிர்த்தனர். செயின்ட் அந்தோணி பள்ளி முதல்வர் அனீஸ் என்கிற எல்சி ஜோசப்பிடம் நாம் சொன்னவற்றைக் கேட்டுவிட்டு, ``அதுபற்றி ஒன்றும் தெரியாது" எனக் கூறி அதிரவைத்தார்.
 
``சரவணன் என்கிற ஒரு மாணவன் உங்கள் பள்ளியில் படித்ததாவது தெரியுமா?" என்று கேட்டோம். ``அதெல்லாம் யாரையும் தெரியாது. மீட்டிங்கில் இருக்கேன்" என்றபடி போனை வைத்துவிட்டார். சில மணி நேரம் கழித்து அழைத்தவர், நமது பெயர் உள்ளிட்டவற்றை விசாரித்துவிட்டு, போனை கட் செய்துவிட்டார்.
 
கரூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் பிருத்திவிராஜ், ``சரவணன் சாவுக்குக் காரணம் மூன்று ஆசிரியைகள் இல்லை. அவங்க சாதி ரீதியாக டார்ச்சர் பண்ணலை. சரவணன் சாவுக்குக் காரணம், குடும்பத்தில் நடக்கும் இல்லீகல் பிரச்னைதான்" என்றார். ``அது என்ன இல்லீகல் பிரச்னை?" என்று கேட்டதற்கு, ``அதை இப்போதைக்குச் சொல்ல முடியாது" எனச் சொல்லிவிட்டார்.
 
சமத்துவத் தீயால், சாதி முழுவதுமாக வெந்துப்போவது எப்போது?