img/728x90.jpg
இடிந்த 150 அரண்மனை வீடுகளும் சில நூறு பேரும்! செழிப்பான விவசாயக் கிராமம் சிதைந்த கதை

இடிந்த 150 அரண்மனை வீடுகளும் சில நூறு பேரும்! செழிப்பான விவசாயக் கிராமம் சிதைந்த கதை

 எங்க ஊர்ல எனக்கு தெரிஞ்சே அப்படி ஒரு விவசாயம் நடக்கும். எங்க ஊரு மண்ணுல மிளகாய், கடலை பருப்பு, நிலக்கடலை பயிர்கள் சக்கைப்போடு போடும். ஒரு மிளகாய் செடி ஆள் உயரம் வளரும்

 
கரூர், திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்திருக்கிறது இந்த சூலபுரம். ஒருகாலத்தில் செல்வச்செழிப்பாக இருந்த இந்தக் கிராமம்,இப்போது பஞ்சத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்தப் பஞ்சம் இயற்கையாக உருவானது இல்லை. 2000 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கும் ஒரு தனியார் சிமெண்ட் ஆலை, சுண்ணாம்புக்கல் குவாரிகளால் செயற்கையாக உருவாக்கப்பட்டது. அந்தப் கிராமத்தில் நுழைந்து பார்த்தால், 150க்கும் மேற்பட்ட பெரிய பெரிய வீடுகள் உடைந்து சிதிலமடைந்து, புதர்கள் மண்டி,கருவேல மரங்கள் வளர்ந்து, சுவர்கள் இடிந்து, பாம்புகள் புழங்கும் இடமாக இருப்பது நமது மனதில் சோகத்தை கொட்டிவிட்டுப் போகிறது. சூலபுரம் 'வாழ்ந்து கெட்ட' கிராமமாக நம் மனதை அழுத்த ஆரம்பிக்கிறது.
 
அந்தக் கிராமத்தின் கதையை விவரிக்க ஆரம்பிக்கிறார் அந்த ஊரின் பெரியவரான அப்துல் ரசீது, "எனக்கு இப்போ 91 வயசு ஆவுது தம்பி. என் வாழ்க்கையில் பாதி இரவுகள்ல இந்த ஊரை நினைச்சுதான் அழுதுருக்கேன். சூலபுரம்ன்னா 1990 க்கு முன்ன வரை அப்படி ஒரு பேரு தம்பி. சுத்துப்பட்டு பதினெட்டு பட்டிக்கு இதுதான் தலை கிராமம்.
 
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை, கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கடவூர் ஒன்றியங்களிலேயே பெரிய, வசதியான ஊரா சூலபுரம் இருந்துச்சு. இந்த ஊர்ல பொண்ணு கொடுக்க பொண்ணு எடுக்க எட்டூரு சீமையிலயும் போட்டி நடக்கும். 1000 வீடுகள் இருந்துச்சு. ஒவ்வொரு குடும்பமும் அவ்வளவு வசதி,வாய்ப்பா இருந்தாங்க. எங்களுக்கே அப்ப முப்பது தோட்டம் இருந்துச்சு. வேலைக்கே நூறு பண்ணை ஆள் வச்சுருந்தோம். ஆனால்,1959 ல் கரூர் புலியூர்ல ஆரம்பிக்கப்பட்ட செட்டிநாடு சிமெண்ட் ஆலைக்காரங்க, கடவூர், குஜிலியம்பாறை ஒன்றியங்கள்ல உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகளிடம் நிலங்களை வாங்கினாங்க.
 
எங்க ஊர்க்காரங்களும் விபரம் பத்தாம அவங்ககிட்ட நிலங்கள்ல ஒரு பகுதியை வித்துட்டாங்க. எங்கப்பாவும் பாதி சொத்தை அவங்களுக்கு தாரை வார்த்துட்டார். அதோட,வீரியம் அப்ப தெரியலை. 1990 க்கு பிறகுதான் தெரிய ஆரம்பிச்சுச்சு. சுண்ணாம்புக் கல் எடுக்க பூமியைக் கொஞ்சம் கொஞ்சமா தோண்டி, விதிகளை மீறி முறைகேடாக 900 அடிகளுக்கு கீழ தோண்ட ஆரம்பிச்சதும், 30 ஊர்கள்லயும் பூமிக்குள் நிலத்தடி நீர் மட்டம் 1,000 அடிக்கு கீழ போயிட்டு. விவசாயம் பண்ண வழியில்லை. குடிக்கவே தண்ணீர் கிடைக்கலை.
 
இப்போது எங்க ஊரையொட்டிய கருக்காலிப் பகுதியிலேயே ஆலைக்காரங்க இன்னொரு பிரிவை திறந்துட்டாங்க. இதனால், எங்களுக்கு பாதிப்புகள் அதிகமாயிட்டு. அவங்கள எதிர்த்துக் கேள்வி கேட்கவும் திராணி இல்லை. 'விதி விட்டது வழி'ன்னு வசதியா வாழ்ந்த மக்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கிட்டு, குடியிருந்த வீடுகளை அம்போன்னு விட்டுட்டு, விவசாயம் பார்த்த அன்சார் காடு கழனிகளை மறந்துட்டு, கரூர், திண்டுக்கல், தேனி, ஆந்திரா, கர்நாடகான்னு அசலூரு போயிட்டாங்க. என் குடும்பமும் நொடிச்சு போச்சு. எல்லாரும் வெளியூர் போயிட்டாங்க. என்ன ஆனாலும் என் கட்டை இங்கதான் வேகனும்னு வைராக்கியமா இங்கேயே வாழுறேன்" என்றபோது, அவரையறியாமல் அவரது கண்கள் கண்ணீரை உகுத்தன.
 
ம.தி.மு.க கட்சியைச் சேர்ந்த அன்சார்,  "எங்க குடும்பமும் வசதியா இருந்த குடும்பம்தான். 1960-லேயே முன்னாடி டோர் தொறக்குற பியட் காரை வாங்கியவர் எங்க பெரியப்பா அப்துல் ரஹீம். முதல்ல அரண்மனை மாதிரி இந்த ஊர்ல சிமென்டுல வீடு கட்டியவரும் அவர்தான். 'புதுவூட்டுக்காரர்'ன்னு அதனால் அவருக்கே பேரே வந்துச்சு. ஜவுளி வியாபாரம் பண்ணி ஜாம்ஜாம்னு சம்பாதிச்சவர். ஆனா, இப்போ 'குடிமூழ்கி' போன வீடுகள்ல அவரோட வம்சமும் ஒண்ணா சேர்ந்துடுச்சு. 1,000 வீடுகள்ல 300 வீடுகள் பெரிய பெரிய அரண்மனை டைப் வீடுகள். மச்சுவீடு, காரைவீடு, செம்மண் வீடு, தொழாக்கட்டை போட்ட வீடுன்னு பல வகைகள்ல கட்டப்பட்ட வீடுகள். அதைக் கட்ட சொந்த நிலத்துலேயே கல் அறுத்துக்குவாங்க. இங்க உள்ள மண்ணுக்கு 'இரும்பு மண்'ணுன்னே பேர். சும்மா தண்ணியில நனச்சு, புடிச்சு வச்சா அது அப்படியே பல வருஷத்துக்கு உடையாம ஸ்ட்ராங்கா இருக்கும். அந்த மண்ணுல கட்டப்பட்ட இந்த வீடுகளின் வெளி பூச்சுக்கு நாட்டுக்கோழி முட்டைகள், கடுக்காய் தண்ணீர், சுண்ணாம்புன்னு மூணு கலவையும் பிசைஞ்சு, அந்தப் பூச்சை சுவர்களுக்குப் பூசி இருக்காங்க. இதனால், வீடுகள் பலமா இருக்கும்; சுவர்கள் ஷைனிங்கா இருக்கும்; வீட்டுக்குள்ள ஏ.சி போட்டாப்புல, கூலிங்கா இருக்கும்.
 
மைசூரு ராஜா பேலஸ் மாதிரி இருக்கும். ஆனால், ஒவ்வொரு வீட்டையும் விட்டுட்டு மக்கள் போனதும் அத்தனை வீடுகளும் பராமரிப்பின்றியும் சிமென்ட் ஆலை குவாரிகளில் போடுற வெடி அதிர்வுகளாலயும் உடைஞ்சு, சிதைஞ்சி சின்னா பின்னமாகிட்டு. இருக்குற நிலத்தில விவசாயம் பார்க்க வழியில்லைன்னு வெளியூர் போன சனங்க வீடுகள்ல எங்க ஊர் ஆட்களையே இலவசமா குடியிருக்க அனுமதி கொடுத்துட்டு போவாங்க. அப்பதான் வீடுகள் பராமரிப்பா இருக்கும்ங்கிறதால. ஒரு கட்டத்துல எல்லோரும் கொத்துக் கொத்தாக ஊரை காலி செஞ்சதால, இலவசமா தங்க வீடு கொடுத்தாகூட, தங்க ஆளில்லை. அதனால், பெரிய பெரிய வீடுகள் புழங்க ஆளில்லாமல் கிடந்து, குவாரி வெடி தர்ற அதிர்வுகள்ல உடைஞ்சுட்டு. கண்ணுக்கு முன்னாடி மாளிகையா நிறைஞ்சுருந்த வீடுகள் இடிபட்ட முட்டை ஓடா சரிந்து, பெரிய பெரிய சுவர்களெல்லாம் உடைஞ்சு, குட்டிச் சுவர்களா மாறியதைப் பார்க்கிறதே பெருங்கொடுமை சார். 
 
எங்க ஊர்ல எனக்கு தெரிஞ்சே அப்படி ஒரு விவசாயம் நடக்கும். எங்க ஊரு மண்ணுல மிளகாய், கடலை பருப்பு, நிலக்கடலை பயிர்கள் சக்கைப்போடு போடும். ஒரு மிளகாய் செடி ஆள் உயரம் வளரும். ஒரு பறிப்புக்கு ஒரு செடியில ஒரு மூட்டை மிளகாய் கிடைக்கும். அதனால், கரூர்ல இப்போ தொழில் வீதியா இருக்குற ஜவஹர் பஜார்ல அப்போ 35 கடைகள் எங்க ஊர்க்காரங்களுக்குச் சொந்தமானதா இருந்துருக்கு. இங்க உள்ள ஜாகிர் உசேன்கிறவரோட தாத்தா அந்தக் காலத்துலேயே இலங்கைக்கு கப்பல்ல மிளகு ஏற்றுமதி பண்ணியிருக்கார். பத்தூருக்கு உதவி பண்ணின அவர் குடும்பம் ஆலை பண்ணிய அட்டூழியத்தால, இப்போ நடுத்தெருவுல நிக்கிது. ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறவங்களே வசதியா இருந்திருக்காங்க. கேணி விவசாயம்தான். பொதுக்கேணி, வீடுகளுக்குள் கேணி, காடு கரைகளுக்குள் கேணின்னு எங்கு பார்த்தாலும் கேணி மயமா இருக்கும்.
 
வெறும் கையாலேயே அள்ளிக் குடிக்கிற அளவுக்கு கேணிகள்ல தண்ணீர் கைக்கெட்டுற தூரத்தில் சலசலக்கும். பால்போல தண்ணீர் கிடைக்கும். இப்போ 1,500 அடிக்கு போர் போட்டாலும் புகைதான் வருது. சும்மா இந்த ஊரு காத்து சுகமா இருக்கும். வெளியூர்களுக்குப் போன ஆள்களுக்கு மஞ்சள்காமாலை வந்தால்கூட, அன்னைக்கே சூலபுரத்துல வந்து விழுந்துடுவாங்க. இந்தக் காத்து அவங்க நோவ குணமாக்கிடும். இங்க ஆடு, மாடு, கோழிகள் வீட்டுக்கு 500 இருந்திருக்கு. அதனால்தான், பெரிய வீடுகளை நாட்டுக்கோழி முட்டைகள் பயன்படுத்தி கட்ட முடிஞ்சுருக்கு. 
 
கோழிகள் அடைக்க வீட்டுக்கு வீடு ஆள் உயர இரும்பு பஞ்சாரம் இருந்திருக்கு. எங்க ஊர்ல கோழிகள் திருடியே செங்கலனிங்கிற திருடன் பெரிய பணக்காரன் ஆனான்னு சொல்லுவாங்க. இந்த மண்ணுல வளர்ற செம்மறி ஆடு அப்படி ஒரு திமிறா ஓங்குதாங்கா வளரும். அந்தக் கறி அப்படி ஒரு டேஸ்டா இருக்கும். விருந்தோம்பலுக்கும் எங்க ஊரு ஃபேமஸ். சமையலுக்கு நெய்யைப் பயன்படுத்திவிட்டு பாத்திரங்களைக் கழுவும்போது சாக்கடை நெய்யாக மணக்குமாம். எங்க ஊர்ல பல நூறு வருஷமா தோல் ரொட்டின்னு பச்சரிசியில ஒரு ரொட்டி சுடுவாங்க. மனுச தோலைவிட மெலிசா இருக்கும்.
 
அதேபோல, அதே அரிசி மாவில் திக்கடின்னு ஒரு பதார்த்தம் பண்ணுவாங்க. இது ரெண்டுக்கும் செம்மறியாட்டு நெஞ்சுக் கறியில் சைடிஷ் செய்வாங்க. அந்த டேஸ்ட்க்கு ஈடு இணை இல்லை. சமீபத்தில் நடந்த பல் மருத்துவ நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் வந்த பாண்டிச்சேரியைச் சேர்ந்த இதாயான்னு படிச்சுருப்பீங்க. அவங்க பூர்வீகமும் எங்க ஊர்தான். அவங்க குடும்பமெல்லாம் இங்க தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியூர் போய் செட்டிலானவை. இப்போ, இருக்கும் 50 குடும்பங்களும் இவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு, ஊரை காலி பண்ணி போகாததற்கு காரணம் இந்த மண் மேல் உள்ள மயக்கம்தான் சார். ஏதோ ஒரு பவர் சூலபுரம் மண்ணுக்குள்ள காந்தமா ஒளிஞ்சுருந்து எங்களை இங்கேயே நிப்பாட்டி வச்சுருக்கு" என்றார்.
 
சுபைதம்மா என்ற பெண், "எங்க ஊர்ல நாங்களும் கம்பாளத்து நாயக்கர்களும் வாழுறோம். மதபாகுபாடின்றி ஒற்றுமைக்கும் எங்க ஊர் பேரா இருந்துச்சு. ஆனால், கிராமமே இல்லாம சுத்தமா அழியப்போவுது. இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு சூலபுரத்துல ஈ காக்கைகூட இருக்குமான்னு தெரியலை. என் குடும்பமும் வசதியாதான் இருந்துச்சு. இந்தக் காரை வீட்டைப் பார்த்து பார்த்து கட்டினார் என் கணவர். ரெண்டு பசங்க.
20 வருஷத்துக்கு முன்னாடி அவர் இறந்துட்டார்.
 
இங்க நிலமிருந்தும் விவசாயம் பண்ண வழியில்லை. ரெண்டு பசங்களும் 10 வருஷத்துக்கு முன்னாடி ஒருவன் பெங்களூர் போய் டெய்லராகவும் இன்னொருவன் மேட்டுப்பாளையம் போய் ஹோட்டலும் வச்சு பொழச்சுக்கிட்டு இருக்காங்க. 'சுடுகாடா ஆன ஊரை விட்டுட்டு வாம்மா'ன்னு ரெண்டு பசங்களும் கூப்புடுறாங்க. ஆஸ்தி, அந்தஸ்து, சொத்து, சுகம் எல்லாம் மண்ணோட மண்ணா போகட்டும். ஆனால்,இந்த வீட்டுல என் புருஷன் வாழ்றார் தம்பி. இந்த வீட்டை விட்டுட்டு போறது அவரை விட்டுட்டு போறது மாதிரி. குவாரி வெடி சத்தத்துல ஒரு பக்கம் இடிஞ்சு விழுந்தாலும், ஒரு மூலையில் படுத்து காலத்தை ஓட்டுறதுக்கு காரணம் அதுதான். என் உசிரு இந்த வீட்டுக்குள்ளதான் போகணும்" என்றபோது, அவர் அழுதிருந்தார்.
 
இது பற்றி, செட்டிநாடு சிமென்ட் ஆலையின் ஹெச்.ஆர் ராஜவேலுவிடம் பேசினோம். நாம் சொன்னவற்றைக் கேட்டவர், "விதிமுறைகளை மீறி இங்கே கல்குவாரி இயங்கலை. விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் ஆலை கல்குவாரிகள், சிமென்ட் ஆலை இயங்குது" என்பதோடு முடித்துக்கொண்டார்.
 
சூலபுரம் கிராமத்தைச் சுற்றி வந்தோம். 'கிராமங்களைச் சிதைப்பதா வளர்ச்சி' என்ற பெரும் சோகம் நெஞ்சை அரிக்க ஆரம்பித்தது. விதிமுறைகள்படி இயங்கியதற்கே இந்தப் பாதிப்பு என்றால், விதிகளை மீறினால்?