• :
  • :
களத்தில்

இந்த சாதனையை ஏன் கொண்டாடவில்லை? மௌனம் சாதிக்கும் எடப்பாடி அரசு

இந்த சாதனையை ஏன் கொண்டாடவில்லை?  மௌனம் சாதிக்கும் எடப்பாடி அரசு

 இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில், தமிழகத்திலேயே முதன்முதலாகப் பிராமணர் அல்லாத அர்ச்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டது ஒரு புரட்சிகரமான விஷயமாக விவாதிக்கப்படுகிறது. தி.மு.க ஆட்சியில் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் அரசாணையை, எடப்பாடி அரசு செயல்படுத்தியுள்ளதாகப் பாராட்டிப் பேசப்பட்டாலும், இதை ஏன் தமிழக அரசு பகிரங்கப்படுத்தவில்லை என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

 
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் அரசாணை தி.மு.க ஆட்சியில் 2006-ம் ஆண்டு போடப்பட்டது. அதன்படி சைவ, வைணவக் கோயில்களில் அர்ச்சகராகப் பணிபுரியும் வகையில், தமிழகத்தின் முக்கியக் கோயில்களில் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. முதல் பேட்ச்சில் 206 மாணவர்கள் அர்ச்சகர்களாகப் பயிற்சி முடித்து, மடாதிபதிகளிடம் தீட்சை பெற்றார்கள். அவர்களை அறநிலையத் துறை கோயில்களில் உள்ள காலியிடங்களில் நியமிக்க கருணாநிதி அரசு ஏற்பாடு செய்தது. அதை எதிர்த்து, பரம்பரை அர்ச்சகர் என்று சொல்லப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்று தடை வாங்கினார்கள். பின்பு, இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது.
 
பயிற்சி முடித்த அர்ச்சகர்களுக்கு ஆதரவாக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த வழக்கறிஞர்கள் சி.ராஜு, வாஞ்சிநாதன் ஆகியோர் இருந்தனர்.   2005-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக இருக்கத் தடையில்லை... ஆனால், அந்தந்தக் கோயில்களின் ஆகம விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் நியமிக்கப்பட வேண்டும்’ என்று தீர்ப்பு கூறியது. இந்த நிலையில்தான், மதுரை அழகர் கோயிலுக்குப் பாத்தியப்பட்ட தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் அர்ச்சகராக மாரிச்சாமி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
 
அர்ச்சகர் மாரிச்சாமியைச் சந்தித்தோம். ‘‘எனக்குச் சொந்த ஊர், மதுரை ஆலங்குளம். படிக்கிற காலத்திலேயே ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உண்டு. தி.மு.க ஆட்சியில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெறலாம் என்று அறிவித்தபோது மகிழ்ச்சி அடைந்தேன். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தொடங்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயின்றேன். சிவ ஆகமத்தில் பயிற்சிபெற்று அனைத்து மந்திரங்களையும், வேத பாடங்களையும் கற்றேன். பயிற்சி முடித்தபின், கோயில்களில் எங்களுக்குப் பணி வழங்க சிலர் தடை போட்டார்கள். அதனால், மிகவும் நொந்துபோயிருந்தோம். இந்த நிலையில்தான், ‘தல்லாகுளம் ஐயப்பன் கோயிலுக்கு அர்ச்சகர் தேவை’ என்று இந்து சமய அறநிலையத் துறை அறிவித்திருந்தது. அவர்கள் வைத்த தேர்வில் நான் வெற்றி பெற்று இங்கு நியமிக்கப்பட்டேன். மாத ஊதியம் ஒன்பதாயிரம் ரூபாய். என் மனதுக்குப் பிடித்தமான வேலையை இப்போது செய்துகொண்டிருக்கிறேன்’’ என்றார் மகிழ்ச்சியுடன்.
 
இந்து இளைஞர் சேனா மாநிலத் தலைவர் சோலைக்கண்ணனிடம் பேசினோம். ‘‘இதை வரவேற்கிறோம். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வரவேண்டும். அதே நேரம், இவர்கள் முழுமையான பயிற்சிபெற்று வருகிறார்களா என்பதையும், அதிகாரிகள் தங்கள் சிபாரிசில் யாரையும் நியமிக்கிறார்களா என்பதையும் கண்காணிக்கக் குழு அமைக்க வேண்டும்’’ என்றார்.
 
வழக்கறிஞர் சி.ராஜு, ‘‘பிராமணரல்லாத மாரிச்சாமி, அர்ச்சகராக நியமிக்கப்பட்டதை வரவேற்கிறோம். இதை ஏன் அரசு வெளிப்படையாகச் செய்யவில்லை? இதை வெளிப்படையாகச் சொல்லவே மாரிச்சாமி அச்சப்படுகிறார் என்றால், இன்னும் இதில் பல நெருக்கடிகள் இருப்பது தெரிகிறது. கேரளாவில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதை ஒரு கொண்டாட்டமாகச் செய்தார்கள். அது நாடு முழுவதும் கவனிக்கப் பட்டது. அதுபோல், இதைத் தமிழக அரசு கொண்டாடியிருக்க வேண்டும். தங்கள் அரசின் சாதனையாகக் கூறியிருக்க வேண்டும். இந்து அமைப்புகள், இதைப் பாராட்டாமல் மௌனமாக இருக்கின்றன. 
 
இன்னொரு விஷயம், தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் மாரிச்சாமி நியமிக்கப்பட்டுப் பணி செய்துகொண்டிருக்கிறார். இதுவே மீனாட்சியம்மன் கோயிலாக இருந்திருந்தால், ஏதாவது காரணத்தைக் கூறிப் பணி செய்யவிடாமல் தடுத்திருப்பார்கள். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றங்கள், கடைசியில் ஆகம விதிப்படி என்ற ஒரு வார்த்தையை இணைத்துச் சொல்வதால், அது குழப்பமான தீர்ப்பாகவே உள்ளது. தமிழக அரசு இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய வேண்டும். இந்த ஆகம விவகாரத்தைத் தெளிவுபடுத்தி, குழப்பமில்லாத தீர்ப்பைப் பெற்றுத்தர வேண்டும். பயிற்சி பெற்ற மற்றவர்களையும் படிப்படியாகப் பணியில் சேர்க்க வேண்டும். அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் திறந்து, நிறுத்தப்பட்ட பயிற்சியை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்’’ என்றார்.
 
மேட்டூர் அணையைத் திறப்பதை வைத்துப் பெரும் விளம்பரம் தேடும் தமிழக முதல்வர், பிராமணர் அல்லாத அர்ச்சகரை நியமித்ததன் மூலம் தன் அரசு செய்துள்ள சாதனையை ஏன் பேச மறுக்கிறார்?