img/728x90.jpg
8 ம் வகுப்பு வரை முழுத்தேர்ச்சியில் மாற்றம்: இடைநிற்றலை அதிகரிக்குமா?  ஓர் அலசல்

8 ம் வகுப்பு வரை முழுத்தேர்ச்சியில் மாற்றம்: இடைநிற்றலை அதிகரிக்குமா? ஓர் அலசல்

 

 
5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால்தான், இனி அடுத்த வகுப்புக்குச் செல்லமுடியும். தோல்வி அடையும் மாணவர்களுக்கு, அடுத்த இரண்டு மாதம் கழித்து மீண்டும் தேர்வு நடத்தப்படும். அதிலும் தேர்ச்சிபெறாத மாணவர்கள், அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும்!"
2011-ம் ஆண்டு கணக்கின்படி, இந்தியாவில் கல்வியறிவு பெற்றவர்களின் சதவிகிதம் 74. இந்நிலையை அதிகரிக்க, அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. கல்வி உரிமைச் சட்டத்தில், ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி அடிப்படை உரிமை என்று வரையறுக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யவைத்துள்ளது. 'அனைவருக்கும் கல்வி இயக்கம்'. பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துவரும் பெரும் பொறுப்பை ஏற்றுச் செயல்படுகிறது. இந்தப் பல முயற்சிகளின் ஒரே நோக்கம், அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி சேர வேண்டும் என்பதே. இதன் ஒரு பகுதியாக, எட்டாம் வகுப்பு வரை முழுத் தேர்ச்சி எனும் நிலைப்பாட்டை அரசு மேற்கொண்டது. இதுகுறித்து நேர் மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. ஆயினும், மாணவர்கள் எட்டு ஆண்டுகள் கல்வி பெறுவதை உறுதிசெய்யும் விதத்தில் இது அமைந்திருந்தது.
 
தற்போது, 8-ம் வகுப்பு வரையில் முழுத் தேர்ச்சி என்பதில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசியபோது, ``5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால்தான், இனி அடுத்த வகுப்புக்குச் செல்லமுடியும். தோல்வி அடையும் மாணவர்களுக்கு, அடுத்த இரண்டு மாதம் கழித்து மீண்டும் தேர்வு நடத்தப்படும். அதிலும் தேர்ச்சிபெறாத மாணவர்கள், அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் இந்த முடிவு என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கல்விப் புலத்தில் இயங்கும் சிலரிடம் பேசினேன்.
 
மகாலட்சுமி ஆசிரியைதிருவண்ணாமலையில் பழங்குடி மக்களின் குழந்தைகள் அதிகம் படிக்கும் பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றும் மகாலட்சுமி: 
 
``கேரளாவில் கொத்தடிமையிலிருந்து மீட்ட 11 வயது சிறுமியை, எங்கள் பள்ளியில் சேர்த்தோம். அதுவரை பள்ளிக்கே சென்றிராத அவளை எந்த வகுப்பில் சேர்ப்பது? அவளுடன் பேசிப் பார்த்ததில், ஏழாம் வகுப்பில் சேர்க்கலாம் என முடிவெடுத்தோம். கல்வி மீதுள்ள ஆர்வத்தால் அவள் விரைவாகக் கற்கத் தொடங்கிவிட்டாள். ஆனால், இந்தத் திறனை எல்லா குழந்தைகளிடமும் எதிர்பார்க்க முடியாது அல்லவா? குழந்தைத் தொழிலாளராக இருக்கும் 9 அல்லது 10 வயது குழந்தையை மீட்டு, ஐந்தாம் வகுப்பில் சேர்க்கும்பட்சத்தில், ஒரே வருடத்தில் தேர்வில் தேர்ச்சி அடையும் அளவுக்குத் தேறிவிடுவார் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாகக் கற்கும்போது, அடிப்படையான கல்வியை அந்தக் குழந்தைப் பெற்றுவிடும். அதற்கு எட்டாம் வகுப்பு வரை முழுத் தேர்ச்சி என்பது அவசியம் தேவை. 5 மற்றும் 8-ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அடுத்த வகுப்புக்குச் செல்லலாம் என அரசு முடிவெடுப்பது, கல்வி உரிமைச் சட்டத்துக்கே உலை வைக்கும். இதனால், பழங்குடி மற்றும் விளிம்பு நிலை மக்களின் குழந்தைகள், ஐந்தாம் வகுப்பில் தோல்வி அடையும்போது, மீண்டும் பள்ளிக்கு வருவது சந்தேகம்தான். கொத்தடிமை சிறுமியைப் பற்றிச் சொன்னேன் அல்லவா... அவளைப் போல யாரேனும் சேரும்பட்சத்தில், ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி அடையாமல் போனால், அந்தக் குழந்தையின் குடும்பத்தால் மீண்டும் வேலைக்கு அனுப்பப்படுவதைத் தடுக்கமுடியாமல் போகும். இவர்கள் போன்ற எளிய பொருளாதார பிள்ளைகள், பத்தாம் வகுப்பு வரை வந்துவிட்டாலே போதும். பிறகு, ஐடிஐ போல ஏதேனும் தொழில்பயிற்சியில் சேர்ந்து வாழ்க்கையை நகர்த்த முடியும். ஆனால், அரசு கொண்டுவரும் புதிய மாற்றத்தால் நிச்சயம் கல்வி இடைநிற்றல் அதிகரிக்கும்."
 
சத்தியமங்கலம் மலைப்பகுதியில் குழந்தைகளின் கல்விச் செயல்பாட்டில் இயங்கி வரும் 'சுடர்' அமைப்பின் நடராஜன்:
 
nadarajan sudar``பொதுவாக, மலைப்பகுதியில் பள்ளிகளே குறைவு. மாணவரின் இருப்பிடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் தொடக்கப் பள்ளி இருக்க வேண்டும் எனக் கல்வி உரிமைச் சட்டம் சொல்கிறது. ஆனால், பல இடங்களில் அது நடைமுறையில் இல்லை. அதனாலேயே, நாங்கள் குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகளை நடத்தவேண்டிய சூழல் வந்தது. பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பச் சொல்லி, பெற்றோர்களிடம் போராட வேண்டியிருக்கிறது. தொடர்ச்சியாக மாணவர்களை வரவழைப்பதிலும் பெரும் பிரச்னை இருக்கிறது. எப்படியாவது அவர்களுக்குக் கல்வியை அளித்துவிட வேண்டும் எனும் நோக்கமே, எங்களை இயங்கவைக்கிறது. இங்கே படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனையும் சமவெளி பள்ளியில் படிக்கும் கற்றல் திறனையும் ஒன்றாக மதிப்பிட முடியாது. இந்நிலையில், ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்தால்தான் அடுத்த வகுப்பு என்பது பெரும் பின்னடைவாக அமையும். தோல்வி அடைந்த மாணவர்கள் மீண்டும் காட்டு வேலைகளுக்குச் செல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களைப் பார்த்துவிட்டு, நன்கு படிக்கும் மாணவர்களும் வேலைக்குச் செல்ல தூண்டப்படலாம். இது, கல்வியே சென்றுசேராத பகுதிகளில் கல்விப் பணியாற்றுவதற்கு பெரும் இடையூறாக அமையும். இடைநிற்றல் அதிகமாகிவிடும் என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. இந்த விஷயத்தில் அரசு அவசரப்படாமல், கடைக்கோடி வரை யோசித்துச் சரியான முடிவை எடுக்க வேண்டும்.''