img/728x90.jpg
காவிரித்தாய்க்குக் காதோலை கருகமணி, சப்பரம் படைத்து வழிபடும் மக்கள்!

காவிரித்தாய்க்குக் காதோலை கருகமணி, சப்பரம் படைத்து வழிபடும் மக்கள்!

 இந்தக் கொண்டாட்டத்தில் பெரியவர்களுக்கு இணையாக குழந்தைகளும் பங்கேற்று சப்பரம் இழுத்து மகிழ்ந்தனர். தேர் போல அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் படம் ஒட்டப்பட்டிருக்கும். இந்தச் சப்பரத்தைக் கயிறு கட்டி இழுத்தபடி ஊரையே சுற்றி வலம் வந்து  குழந்தைகள் மகிழ்ந்தனர். 

 
கரைபுரண்டு ஓடிவரும் காவிரித்தாயால் விவசாயிகளின் வாழ்க்கை மட்டுமன்றி சப்பரம், காதோலை, கருகமணி போன்ற ஆடிப்பெருக்குக்கான பொருள்கள் செய்பவர்களின் வாழ்க்கையும் மாறியிருக்கிறது. 
 
கும்பகோணம் மடத்துத்தெரு படித்துறையில் காதோலை, கருகமணி விற்பனை செய்த ராஜேந்திரனிடம் பேசினோம். ``காதோலை, கருகமணி செய்வது ஒரு கைவினைத் தொழில். பனை ஓலையை வெட்டி, வெயிலில் நன்கு காயவைத்து, வண்ணம் கலந்த நீரில்  போட்டுக் கொதிக்கவைத்துக் கொள்வோம். பனை ஓலைகள் வண்ணமாகிவிடும். பிறகு, சுருளாகச் சுற்றி, அதன்மேல் கறுப்பு நிற வளையலைப் பொறுத்தினால் கருகமணி ரெடி. இதோடு ஒரு குங்கும பாக்கெட்டையும் சேர்த்து விற்பனை செய்வோம். இதுதான் எங்க குடும்பத் தொழில்..." என்றார் அவர்.
 
படையல்
 
``காதோலை,கருகமணியைக் காவிரித்தாய்க்கு ஏன் படைக்கிறோம்?"
 
``சிலப்பதிகாரத்தில் பனை ஓலையால் செய்யப்பட்ட தோடுகளைத்தான் பெண்கள் அணிகலனாக அணிந்திருந்தார்கள். இறைவனை  நகைகளால் அலங்கரிப்பது நம் தொன்ம மரபு. அதன் தொடர்ச்சிதான் பனை ஓலையில் செய்யப்பட்ட காதோலையை காவிரிக்குப் படைப்பது. காவிரித்தாய் தளும்பிவரும் நாளான ஆடிப்பெருக்கு அன்று, மக்கள்  திரண்டு காதோலை, கருகமணியைக் காவிரித்தாய்க்குப் படைத்து மரியாதை செய்து, அதை அந்தத் தண்ணீரிலேயே விட்டு  நன்றி கூறுவார்கள்" என்கிறார் ரமேஷ் சிவம் குருக்கள்.  மணிகண்டன்
 
திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை அருகே சப்பரம் செய்து விற்பனை செய்துகொண்டிருந்த  மணிகண்டனிடம் பேசினோம். 
 
``ஆடிப்பெருக்குப் பெரியவர்களுக்கான விழா மட்டுமல்ல... குழந்தைகளும் கொண்டாடி மகிழும் விழா. கரை புரண்டோடும் காவிரித்தாயைப் பெரியவர்கள் வணங்குவதை குழந்தைகள் காணவேண்டும். தண்ணீரை தெய்வமாக மதித்துப் போற்றுவதன் அவசியத்தைக் குழந்தைகள் உணர வேண்டும். அதற்காகத்தான் குழந்தைகளையும் அழைத்து வந்து கொண்டாடுகிறார்கள் மக்கள். திருவிழாக் காலங்களில் தெய்வங்களை அலங்காரம் செய்து தேரில் வைத்து நகர்வலம் வருவது வழக்கம். இதனால் அந்தத் தெய்வத்தின் மனம் மட்டுமன்றி மக்களின் மனமும் குளிரும். 
 
அதை உணர்த்தும் வகையில்தான் இந்தச் சப்பரம் இழுக்கும் மரபு தொடங்கியது. பெரியவர்கள் குழந்தைகளுக்குச் சப்பரம் வாங்கித்தந்து, இழுத்து விளையாடவிட்டு, படித்துறையில் வைத்து  அவற்றுக்கு பூஜைகளும் செய்வார்கள்..." என்கிறார் அவர்.  
 
இயற்கையின் பெருங்கருணையால் காவிரி கரைபுரண்டு ஓடி வருவதால் மக்கள் இந்த ஆடிப்பெருக்கை கோலாகலமாகக் கொண்டாடிக் களித்து வருகிறார்கள்..!