img/728x90.jpg
சென்னை மழை 37 இடங்களுக்கு ஆபத்து  எச்சரிக்கும் பேரிடர் மேலாண்மை வாரியம்

சென்னை மழை 37 இடங்களுக்கு ஆபத்து எச்சரிக்கும் பேரிடர் மேலாண்மை வாரியம்

பெரும்பாலான சாலைகளின் 'பல்செட்டு' கள் கழன்று விழுந்திருக்கிறது. ஆங்காங்கே தற்காலிகக் குளம், குட்டைகள் உரம் போடாமலே முளைத்துள்ளன. சில நாட்களில் மீன்கள் நீந்தக் கூடும், குத்தகைக்கு விடுகிற சூழலும் உண்டாகி ஒப்பந்தப் புள்ளிகளும் கோரக் கூடும்.

சென்னையில் மழை, வெள்ளம் என்றால், 'பூமி தாங்குமா, மக்கள் நிலை என்னாவது?' போன்ற கேள்விகள், இவ்வருடம் ஆகஸ்ட் மாத தொடக்கத்திலேயே எழுந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சில மணிநேரங்களே பெய்த மழையில், பெரும்பாலான சாலைகளின் 'பல்செட்டு'கள் கழன்று விழுந்திருக்கிறது. ஆங்காங்கே தற்காலிகக் குளம், குட்டைகள் முளைத்துள்ளன. சில நாட்களில் மீன்கள் நீந்தக் கூடும், அவற்றைக் குத்தகைக்கு விடுகிற சூழல் உண்டாகி ஒப்பந்தப் புள்ளிகளும் கோரக் கூடும்.  2015-ல் இரண்டு வாரங்கள் விடாமல் பெய்த பெருமழையால், சென்னைக்கு நேர்ந்த அபாயத்தின் படிப்பினையை அரசு சக்திகள் இன்னமும் உணராதிருப்பதே இதற்கு முக்கியக் காரணம்.

ஒருபக்கம், கடந்த 15 நாட்களாக சென்னையில் கடுமையான குடிநீர்ப் பஞ்சம் நிலவுகிறது. மெட்ரோ வாட்டர் லாரிகளின் மூலம், ஏரியா சிந்த்தெடிக் டாங்குகளில் நிரப்பப்படும் குடிநீர் சேவை, மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான் நடக்கிறது. வழக்கமாக ஒரு குடம் நீர் இரண்டு ரூபாய்க்கு விற்கும், 'உள்ளூர் சக்திமான்கள்' இந்தத் தட்டுப்பாட்டை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டிருப்பதால் குடம் நீர், மூன்று ரூபாய் விலையில், அதுவும் 'முன்பதிவு' வரிசையில் போய்க் கொண்டிருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், 'தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் இரண்டு நாட்கள் மிதமான மழை பெய்யும்" என்று கூறியிருக்கிறார்.  

மழையைப் பொறுத்தவரை மும்பை, உத்தரப்பிரதேசங்களில் ஆவேசத்துடன் சீறியிருக்கிறது. ஒருமாதமாக இங்கு பெய்துவரும் கனமழை காரணமாக மாநிலத்தின் முக்கிய நகரங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. முக்கிய நகரங்களான மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பகுதிகளில் எஞ்சி நிற்பது வெள்ளம்தான் என்ற நிலை காணப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்தும், இடி, மின்னல் தாக்கியும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ தொட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை 'வரும் முன் காப்போம்' என்ற அடிப்படையில் செய்ய வேண்டிய ஆயத்தப் பணிகள் ஏராளமாய் இருக்கிறது. நீர்நிலைகளின் கரைப் பகுதிகளைச் சீர்செய்து தூர் வாருதல், கரைகளை பலப்படுத்துதல், நீரோட்டத்தைத் தடுக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றுதல் போன்ற சாதாரணப் பணிகளைச் செய்து முடிக்க அசாதாரண மனித சக்திகள் இருந்தும் அதை கண்ணெடுத்துப் பார்க்க ஆட்கள் இல்லை. செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து அடையாற்றுக்கு தண்ணீரைத் திருப்பியதும், அடிப்படை கட்டமைப்புகளில் கோட்டை விட்ட காரணத்தினால் நிகழ்ந்தவையே. 'செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்க அனுமதி கொடுத்தது யார், மக்களுக்கு ஏரி திறப்பு குறித்து முன்கூட்டியே தெரிவித்தீர்களா?' போன்ற கேள்விகளை இன்று நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருப்பதும், அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளில் கோட்டைவிட்டதன் எதிரொலிதான் என்பதை மறக்கத் தவறலாமா?

வெள்ளம், புயல், போன்ற ஆபத்துக் காலங்களில் கைகொடுக்கும் பேரிடர் மேலாண்மை வாரியம், 'வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டால், சென்னையில் 306 இடங்கள் பாதிக்கும், 37 இடங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும்' என்று முன்னெச்சரிக்கை செய்துள்ளது. கிண்டி, மணப்பாக்கம், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, ஆழ்வார்ப்பேட்டை, மயிலாப்பூர், சாந்தோம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ராயப்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம் போன்ற பகுதிகள் அதிக பாதிப்பைச் சந்திக்கும் பகுதிகளின் பட்டியலில் உள்ளன. மயிலாப்பூர், சாந்தோம், ராஜா அண்ணாமலைபுரம் போன்ற பகுதிகளும், அதன் சுற்றுப் பகுதிகளும் முதலமைச்சர், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வசிக்கும் முக்கியப் பகுதிகள் என்பதை இங்கே கவனிக்க வேண்டியுள்ளது. அதேபோல், கிண்டி, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆழ்வார்ப்பேட்டை, திருவல்லிக்கேணி போன்ற பகுதிகள் முக்கிய அரசுப் பணிகளின் கேந்திரமாகவும், வணிக மையமாகவும் திகழ்கிற பகுதிகளாக இருக்கிறது.  செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்ட 30 ஆயிரம் கனஅடி நீர், ஆயிரக்கணக்கான வீடுகளை அடையாற்றின் கரை, கோட்டூர்புரம் உள்ளிட்டப் பகுதிகளில் மூழ்கடித்ததை எதிர்கால படிப்பினையாக கற்பதற்குள் வானம், உச்ச கோபத்துடன் கருக்க ஆரம்பித்திருக்கிறது... மூன்றாண்டுகளாகவா கற்றுக் கொண்டே இருப்பீர்கள் என்று சொல்லாமல் நிரூபிக்கக் காத்திருக்கிறது மழை !