img/728x90.jpg
சிங்கிள் சிங்கமோ கும்பல் சிங்கங்களோ பயமே இல்லாமல் நடக்கும் சிங்கக் கடத்தல்!

சிங்கிள் சிங்கமோ கும்பல் சிங்கங்களோ பயமே இல்லாமல் நடக்கும் சிங்கக் கடத்தல்!

 சிங்கம், புலி போன்ற பெரிய பூனைகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம். அதேசமயம் அவற்றின் உடல் பாகங்களைச் சர்வதேச அளவில் வணிகம் செய்வதும் உலகளவில் தடைசெய்யப்பட்டுள்ளது, தென்னாப்பிரிக்காவைத் தவிர.

 
2017-ம் ஆண்டு ஜூன் மாதம் மொஸாம்பிக்கின் மபுடோ சர்வதேச விமான நிலையத்தில் ஒரு சீனர் கைது செய்யப்பட்டார். அவரிடம் யானைத் தந்தங்களும் சிங்கப் பற்களும் நகங்களும் இருந்தது. அதே வருடம் நவம்பர் மாதம் நைஜீரியாவிலும் ஒரு தென்னாப்பிரிக்கர் கைது செய்யப்பட்டார். அவரிடம் 70 சிங்கங்களின் பற்களும் நகங்களும் இருந்தன. இதேபோல் இரண்டு மாதங்களுக்கு முன்னர் செனெகலில் தந்தங்களைக் கடத்தியவரிடம் சிங்கப் பற்களுமிருந்தன. யானைகளைத் தந்தத்துக்காக வேட்டையாடுவது ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக நடந்துவருவது அனைவரும் அறிந்ததே. அதைத் தடுப்பதற்காக பல்வேறு நாடுகளில் வேட்டைத் தடுப்புச் சட்டங்களும் கடுமையான தண்டனைகளும் அமலிலுள்ளது. ஆனால், சிங்க வேட்டையென்பது சிறிது வித்தியாசமானது. அது சட்டபூர்வமாக அரசு அனுமதியுடனே நடந்துகொண்டிருக்கிறது. 
 
ஆப்பிரிக்கா முழுவதும் சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டிருக்கிறது. ஆனால், அதன் உடல் பாகங்களுக்கான தேவை கள்ளச்சந்தையில் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. சிங்கத்தின் எலும்புகள், அதன் கோரப் பற்கள், நகங்கள் என்று அனைத்துமே அதில் அடக்கம். பாரம்பரிய மருத்துவ முறைகளில் மருந்து தயாரிக்கவும், ஆபரணங்கள் செய்யவுமென்று பல்வேறு வகைப் பயன்பாடுகளுக்குச் சிங்கத்தின் உடல் பாகங்களை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாங்குகிறார்கள். மிருகங்களைக் காட்டில் வேட்டையாடுவது சட்டவிரோதமானது. அதனால், அதையே தென்னாப்பிரிக்காவில் பராமரித்து வளர்த்துப் பிறகு வேட்டையாடுகிறார்கள்.
 
சிங்கம், புலி போன்ற பெரிய பூனைகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம். அதேசமயம் அவற்றின் உடல் பாகங்களைச் சர்வதேச அளவில் வணிகம் செய்வதும் உலகளவில் தடைசெய்யப்பட்டுள்ளது, தென்னாப்பிரிக்காவைத் தவிர. அங்கு சிங்கங்களைக் கூண்டுகளில் அடைத்து இனச்சேர்க்கை செய்யவைத்து வளர்க்கிறார்கள். அத்தகைய நிறுவனங்கள் அவற்றை வைத்திருக்கும் நிலை மிகவும் பரிதாபகரமானது. சில நிறுவனங்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று அதை வைத்து மக்களுக்கு வேட்டைப் பயிற்சிகளை அளிக்கின்றனர். அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்குச் சிங்கங்களை வேட்டையாட அனுமதியளித்தனர். அதில் அவர்கள் கொல்லும் சிங்கத்தின் தலை அல்லது நகங்களைப் பரிசாகக் கொடுத்தனுப்பினார்கள். இதையும் ஒருவித வியாபாரமாகச் சிங்கங்களை வைத்துச் செய்துவருகின்றன சில நிறுவனங்கள். இப்படி பெட்டியில் அடைபட்ட சிங்கத்தை வேட்டையாடுவதை அவர்கள் "கேன்டு ஹண்ட் ( Canned Hunts)" என்று அழைத்தார்கள்.
 
கடந்த ஜூலை 16-ம் தேதி. தென்னாப்பிரிக்க அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. சிங்க உறுப்புகளை ஏற்றுமதி செய்வதை அதிகப்படுத்த வேண்டுமென்றும், தற்போது 800 சிங்கங்களின் உறுப்புகள் ஏற்றுமதி செய்யப்படுவதை அடுத்த ஆண்டுகளில் 1500-ஆக அதிகப்படுத்த வேண்டுமென்று அந்த அறிக்கை பேசியது.
 
வன விலங்கு ஏற்றுமதியே ஆபத்தானது. ஆனால், அதை அதிகமாக்க வேண்டுமென்று அரசு பேசுகிறதே என்று வன விலங்கு ஆர்வலர்களும், சூழலியல் ஆர்வலர்களும் விழிபிதுங்கி நிற்கிறார்கள். அரசே விலங்குசார் ஏற்றுமதியை ஊக்குவிப்பது விலங்குக் கடத்தல்களை அதிகப்படுத்தலாம். "சட்டரீதியிலான அறிவியல் பூர்வமான எந்த நன்மைகளும் இதனால் கிடைக்கப்போவதில்லை. இது என்னைக் கலங்க வைக்கிறது" என்கிறார் பண்தேராவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான லூக் ஹண்டர் (Luke Hunter). தென்னாப்பிரிக்காவில் பராமரிப்புக்குள் சுமார் 8000 சிங்கங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. ஆனால், காடுகளில் வெறும் 1700 சிங்கங்களே வாழ்கின்றன. காட்டில் சுதந்திரமாக வாழவேண்டிய சிங்கங்கள் எப்போது வளர்ப்புப் பிராணிகளாயின? அவற்றைப் பராமரிப்பில் வைப்பதற்கான காரணமென்ன?
 
ஆப்பிரிக்காவில் 1993 முதல் 2014-ம் ஆண்டுக்குள் 43% சிங்கங்கள் குறைந்துள்ளன. அங்கு மொத்தமிருப்பதே சுமார் 20,000 சிங்கங்கள்தான். அதிலும் தென்னாப்பிரிக்காவில் மட்டும் 8,000 சிங்கங்கள் ஏற்றுமதிக்காக, வியாபார நோக்குடன் கூண்டுகளில் அடைத்துப் பராமரிக்கப்படுகின்றன. இது இயற்கைக்கு விரோதமானது. தொடர்ச்சியான கேள்விகளுக்குப் பின் அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை இதுதொடர்பாக பதிலளித்தது, "சிங்கங்களைக் காப்பிடங்களில் வளர்க்கும்போது அவற்றின் இறப்பால் எலும்புகள் சேர்ந்துகொண்டே செல்கின்றன. அதனால்தான் ஏற்றுமதி எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறோம். அதேசமயம் ஒரு கூட்டம் அவற்றின் உடல் பாகங்களுக்குத் தொடர்ச்சியாக விலை நிர்ணயித்துப் பற்றாக்குறையை அதிகப்படுத்திக் கொண்டேயிருக்கின்றது. இதனால் சட்டவிரோத சிங்க வேட்டைகள் காட்டுக்குள் அதிகமாகிவிடும். அதைத் தடுக்கவும் இந்த ஏற்றுமதி உதவியாக உள்ளது" என்று விளக்கமளித்துள்ளது. காப்பிடத்தில் வைத்து வளர்ப்பானேன்? அவற்றை வேட்டையாடுவானேன்? பிறகு எலும்புகள் சேர்ந்துவிட்டதென்று ஏற்றுமதி செய்வானேன்? குற்றத்தைத் தடுப்பதற்காக அந்தக் குற்றத்தையே சட்டபூர்வமான தொழிலாக மாற்றுவதா?
 
சிங்கங்களின் உடல் பாகங்களை ஏற்றுமதி செய்வதை சட்டத்திற்கு உட்பட்டதாக மாற்றியது, அதில் நடந்துவந்த சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்திவிடுமென்று கூறுகிறது அரசாங்கம். ஆனால், தென்னாப்பிரிக்க அரசு இதுவரை அதைச் சரியென்று கூறும் வகையில் அறிவியல் பூர்வமான ஒரு ஆதாரத்தைக் கூடச் சமர்ப்பிக்கவில்லை. 
 
வியட்நாம், லாவோஸ் போன்ற பகுதிகளுக்கே இந்த ஏற்றுமதியின் பெரும் பகுதி செல்கிறது. இந்த நாடுகள் சட்டவிரோத விலங்குக் கடத்தல்களில் அதிகமாக ஈடுபட்டிருப்பதும் அனைவரும் அறிந்ததே. இங்குப் புலிகளின் பல், நகங்கள் போன்றவற்றை அதிகமாக மருத்துவ குணங்களுக்கென்று நினைத்து வாங்குகின்றனர். ஆனால், புலிகளின் எண்ணிக்கை குறைந்துவருவதால் அதற்குப் பதிலாக தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்படும் சிங்கங்களின் பாகங்களை புலியினுடையதென்று சொல்லி விற்கிறார்கள். அதிலும் புலி எலும்பிலிருந்து செய்யப்படும் வைனைக் (wine) குடிப்பது அந்தஸ்து பார்ப்பவர்களின் மத்தியில் மிகவும் பெருமைக்குரியதாகக் கருதப்படுகிறது. அதற்கும் சிங்க எலும்புகளைப் போலியாக விற்க ஏற்றுமதி செய்யப்படுகிறது. அத்தோடு இந்த வைனைக் குடிப்பது உடல் வலுவுக்கும் வீரியத்தை அதிகரிக்கவும் உதவுமென்ற மூட நம்பிக்கையும் தென்கிழக்காசியப் பகுதிகளில் பரவலாகவுள்ளது.
 
நாலாயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே புலிகள் வனங்களில் வாழ்ந்துவருகின்றன. புலிகள் அழிவின் விளிம்பில் வாழ்கின்றன. அது சர்வதேச விலங்குக் கடத்தல் தடுப்புச் சட்டத்தில் முக்கியமான இடத்திலிருக்கின்றது. அதனால் புலிகளை வேட்டையாடுவது மிகவும் கடுமையான தண்டனைகளுக்கு வழிவகுக்கும். அதற்குப் பதிலாக புலிகளைப் போலவே பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த அவற்றைப் போன்ற பற்கள், நகங்களையுடைய சிங்கங்களை வேட்டையாடுகிறார்கள். சுற்றுச்சூழல் புலனாய்வு மையம் 2015-ம் ஆண்டிலிருந்து தென்னாப்பிரிக்காவின் எட்டு விலங்கு வணிக நிறுவனங்களைக் கண்காணித்தது. அதன்மூலம் சிங்கத்தைக் கொன்று அதில் எடுத்த பொருட்களுக்கு "புலிகளிலிருந்து எடுத்தது" என்று லேபிள் போட்டு கள்ளச்சந்தையில் விற்றுக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். அவற்றின் ஆதாரங்களையும் சேகரித்து 2017-ம் ஆண்டு வெளியுலகின் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார்கள்.  லிம்போபோ ( Limpopo National park) என்ற தேசியப் பூங்காவில் 2012-ல் 67 சிங்கங்கள் வாழ்ந்துகொண்டிருந்தன. 2017-ல் அது வெறும் 21-ஆகக் குறைந்துவிட்டது. மொத்தம் 49 சிங்கங்கள் அங்கு மட்டுமே வேட்டையாடப்பட்டுள்ளது. சட்டபூர்வமாக்கியது, சட்டவிரோத வேட்டையை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லையென்பதை இதிலிருந்தே புரிந்துகொள்ள முடிகிறது. விலங்கு வணிகம் சட்டபூர்வமானதாக இருப்பதால், விலங்குக் கடத்தல்காரர்கள் அவர்களின் சரக்குகளை எளிதில் எந்தத் தடையுமின்றிக் கொண்டு சென்றுவிடுவார்கள்.
 
சிங்கத்தின் பாகங்கள் தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் சட்டபூர்வமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், அவை ஆசியாவில் சட்டவிரோதமானது. ஆக தென்னாப்பிரிக்கா கடத்தல்காரர்களுக்குச் சட்டபூர்வமாகவே தனது விலங்குகளை விற்றுக்கொண்டிருக்கிறது. சட்டபூர்வமான வணிகம்கூட விலங்குக் கடத்தலின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது. மனிதனால் சட்டம் போட்டுத் தன் செயல்களை நியாயப்படுத்த முடியலாம். ஆனால், இறுதியில் அந்தச் சட்டங்களின் விளைவுகளையும் அவனேதான் அனுபவித்தாக வேண்டும்.