img/728x90.jpg
இல்லாத தந்தி சேவைக்கு ரூ. 1,74,142 செலவு!

இல்லாத தந்தி சேவைக்கு ரூ. 1,74,142 செலவு!

 முறைகேட்டில் முதலிடம் பிடிக்கும் மதுரை மாநகராட்சி

இந்தியாவில் தந்தி சேவை 2013-ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால், அதன்பிறகும் தந்தி அனுப்புவதற்காக 1,74,142 ரூபாயை மதுரை மாநகராட்சி செலவு செய்துள்ளது. இந்தத் தகவலைப் பார்த்து மதுரை மக்கள் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருக்கிறார்கள். இப்படி கடந்த மூன்று நிதியாண்டுகளுக்கான செலவினங்களில் குண்டக்க மண்டக்க கணக்கு எழுதியுள்ளார்கள். ‘‘நானாத்தான் உளறிட்டேனா...’’ என்று வடிவேலு கேட்பதுபோல, தங்கள் கோல்மால் கணக்கைத் தாங்களே வெளியிட்டுச் சிக்கியிருக்கிறார்கள்.  
 
தமிழகத்திலேயே முன்மாதிரியாக, செலவினங்களை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் செலவு விவரங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது மதுரை மாநகராட்சி. ‘‘அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு செலவினமும் அதிகப்படியாக உள்ளது. அவை, நம்பும்படியாகவும் இல்லை. மாநகராட்சியின் செலவினங்களை மறு தணிக்கை செய்ய வேண்டும்’’ என்று புகார் எழுப்பியிருக்கிறார்கள் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள். இதுதொடர்பாக மக்கள் விழிப்புஉணர்வு அறக்கட்டளை அளித்த புகாரை வாங்கிக்கொண்ட மதுரை கலெக்டர் வீரராகவ ராவ், ‘‘உடனே நடவடிக்கை எடுக்கிறேன். இதில் இன்னும் எப்படியெல்லாம் முறைகேடு நடந்துள்ளது என்பதை ஆய்வுசெய்து அறிக்கையாகத் தாருங்கள்’’ என்று கேட்டிருப்பது மாநகராட்சி நிர்வாகத்தைக் கூடுதலாக அதிர வைத்துள்ளது.
 
மக்கள்  விழிப்புஉணர்வு அறக்கட்டளையின் நிறுவனர் நெல்பேட்டை ஹக்கீமிடம் பேசினோம். ‘‘மாநகராட்சியின் நிர்வாகச் செலவினங்களில் காலம் காலமாக முறைகேடுகள் நடக்கின்றன என்றாலும், இப்போதுதான் அவை வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துள்ளன. தகவல் அறியும் உரிமை அடிப்படையில், உள்ளாட்சி நிர்வாகங்கள் தங்கள் செலவினங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மதுரை மாநகராட்சியின் கடந்த மூன்று நிதியாண்டுகளுக்கான செலவினங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது, தூக்கிவாரிப் போடுகிறது. இந்தச் செலவுகளைத் தணிக்கை அதிகாரிகள் எப்படி கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது. 
 
அவர்கள் காட்டியிருக்கும் செலவினங்கள் அதிகப்படியாக இருப்பது ஒருபக்கமென்றால், ஒரே செலவினம் ஒரு வருடத்துக்குள் மூன்று, நான்கு மடங்குகளாக எகிறியிருப்பது பொருளாதார வல்லுநர்களுக்கே சவால் விடும் வகையில் உள்ளது. உதாரணத்துக்கு, மாநகராட்சி ஊழியர்களின் மருத்துவச் செலவு என 2016-17 நிதியாண்டில் ரூ.31,65,405 கணக்கு காட்டியுள்ளார்கள். அதற்கு முந்தைய நிதியாண்டில், இது ரூ.9,04,429 என இருந்தது. ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட மூன்றரை மடங்கு அதிகமாகியுள்ளது. கடந்த நிதியாண்டில் வாகனங்களைப் பழுதுபார்த்துப் பராமரிக்க ரூ.15,43,74,186 செலவு என்று கணக்கு தந்திருக்கிறார்கள். இவ்வளவு பெரிய செலவை மறுஆய்வு செய்திருக்க வேண்டும். ஏனென்றால், இதே வாகனப் பராமரிப்புச் செலவு 2015-16 நிதியாண்டில் ரூ.7,50,45,307 மட்டுமே. ஒரே வருடத்தில் இரண்டு மடங்காக உயர்ந்தது எப்படி?   
 
இதர செலவினங்கள் 2014-15 நிதியாண்டில் ரூ.1,10,000 ஆக இருந்தது. 2015-16 நிதியாண்டில் இது ரூ.1,04,79,462 ஆகவும், 2016-17 நிதியாண்டில் ரூ.1,48,97,859 ஆகவும் உயர்ந்துள்ளது. இவை என்ன செலவுகள் என்று குறிப்பிடவில்லை. மாநகராட்சி கடன்களுக்குக் கட்டிய வட்டி என்று ரூ.1,19,86,920 கணக்கு காட்டியுள்ளனர். அது என்ன வகையான கடன், எதற்கு யாரிடம் வாங்கிய கடன் என்பதைத் தெரிவிக்கவில்லை. கணிப்பொறி இயக்கச் செலவு ஒரே வருடத்தில் நான்கு மடங்காக உயர்ந்துள்ளது. அதுபோல தேய்மானம் என்ற வகையில், 2015-16 நிதியாண்டில் ரூ.77,93,84,570 குறிப்பிட்டுள்ளார்கள். இது எதற்கான தேய்மானம், வாகனங்களுக்கா, அலுவலகத்துக்கா அல்லது வேலை செய்பவர்களுக்கா என்பதைக் குறிப்பிடவில்லை. இது பெரிய தொகையாகும்.
 
தந்தி சேவையை 2013-ம் ஆண்டிலேயே அஞ்சல் துறை நிறுத்திவிட்டது. ஆனால், 2015-16 நிதியாண்டில் தபால் மற்றும் தந்தி செலவு என ரூ.4,44,085 ரூபாய்க்குக் கணக்கு காட்டியிருக்கிறார்கள். 2016-17 நிதியாண்டில் தந்தி அனுப்புவதற்காக ரூ.1,74,142 செலவானதாகக் கணக்கு காட்டியிருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய மோசடி! இதைப் பார்க்கும்போதே முறைகேடு என்று தணிக்கை அதிகாரிகளுக்குத் தெரியாமல் போனது ஏன்? 2016-ல் நடந்த பொதுத்தேர்தலுக்குத் தேர்தல் ஆணையம் செலவு செய்தது. மாநகராட்சியும் தன் பங்கிற்கு ரூ.3,82,475 செலவழித்தது. 
 
இப்படி மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு மருந்துகள் வாங்க, சர்வே எடுக்க, தெரு விளக்குகளைப் பராமரிக்க என எழுதியுள்ள செலவினங்கள் அனைத்தும் அதிகப்படியாக உள்ளன. இதையெல்லாம் யார் பார்க்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில் வெளியிட்டு விட்டார்கள். தற்போது கலெக்டர் எங்களிடம் விரிவாக அறிக்கை கேட்டுள்ளார். அவர் நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை உள்ளது’’ என்றார் ஹக்கீம். 
 
இது தொடர்பாக மதுரை மாநகராட்சி கமிஷனர் அனிஷ்சேகரிடம் கேட்டோம். ‘‘இந்தப் புகார்களில் உண்மை இல்லை. மாநகராட்சியில் என்ன செலவாகிறதோ அதைத்தான் குறிப்பிட்டுள்ளோம். அதை விளம்பரத்துக்காகச் சிலர் பெரிதுபடுத்துகிறார்கள். டெலிகிராம் செலவு என்று குறிப்பிடக் காரணம் உள்ளது. அதைப்பற்றி எங்கள் தணிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். செலவினங்களில் அப்படி முறைகேடு நடந்திருந்தால் நான் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார்.
 
இதுபோன்ற கணக்கு முறைகேடுகள் கமிஷனருக்கே தெரியாமல் பல காலமாக நடந்து வருவதாகவும், கமிஷனருக்கு அடுத்த நிலையிலுள்ள அதிகாரிகள் ஒரு குழுவாக இருந்துகொண்டு இதில் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாகவும் மாநகராட்சி ஊழியர்கள் புலம்புகிறார்கள். இதுபற்றி ஆதாரத்துடன் புகார்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை என்பது அவர்களின் ஆதங்கம்.