img/728x90.jpg
குடிசைமாற்று வாரிய வீடு ஒதுக்கீட்டில் ரூ.2 கோடி மோசடி! போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

குடிசைமாற்று வாரிய வீடு ஒதுக்கீட்டில் ரூ.2 கோடி மோசடி! போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

 கடைசியாக, கடந்த பத்து நாள்களுக்கு முன்னர் வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் ரவளி பிரியா கந்தபுனேரியிடம் நாங்கள் மனு ஒன்றைக் கொடுத்தோம். தீர்வுக்காகக் காத்திருக்கிறோம். போலீஸில் நாங்கள் கொடுக்கும் புகார்களை, 'குறிப்பிட்ட இடம்தாண்டிப் போகாத அளவுக்குப் பார்த்துக் கொள்கிறார்களோ' என்று எங்களுக்குச் சந்தேகமாக இருக்கிறது

 
குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்து தருவதாகச் சொல்லி, 65 பேரிடம், இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வேட்டை நடந்திருக்கிறது. சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதிக்குட்பட்ட மீன்பிடித் துறைமுகம், காசிமேடு அண்ணா நகர்ப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், இந்த மோசடி குறித்து போலீஸில் புகார் அளித்துள்ளனர். மேலும், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோசடி குறித்து அந்தப்பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், "எங்கள் பகுதி அ.தி.மு.க. வட்டச் செயலாளராக இருந்த நா.பெ.நாகலிங்கம் என்பவர், எங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு இந்த ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளார். குடிசைமாற்று வாரியக் குடியிருப்பு அதிகாரிகளைப் போல சிலரை அனுப்பி, எங்களை படம் பிடித்ததுடன், டோக்கன்கள் கொடுப்பது போன்று, ஏமாற்று நாடகமாடி அவர் பணத்தைச் சுருட்டியுள்ளார். அந்த அளவுக்கு மிக நூதன முறையில் அவர் செயல்பட்டு எங்களை ஏமாற்றியுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக, அவரிடம் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பைக் கேட்டு சோர்ந்து போய்விட்டோம். நாங்கள் கொடுத்த பணத்தைத் திரும்பக் கொடுத்து விட்டால்கூட போதும் என்று சொல்லியும் விட்டோம். ஆனால், நாகலிங்கமும், இந்தப் பகுதியின் முன்னாள் கவுன்சிலரான அவருடைய மனைவியும் சேர்ந்துகொண்டு, எங்களை  மிரட்டுகிறார்கள். மேலும் கேவலமாகப் பேசி விரட்டி அடிக்கிறார்கள். எண்ணூர் பகுதியில் உள்ள அகில இந்திய வானொலிக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்படும் குடியிருப்பில் வீடு தருவதாகச் சொல்லித்தான், எங்களிடம் பணத்தை வாங்கி மோசடி செய்துள்ளனர். இப்போது அந்த இடத்தில் வீடுகள் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. 
 
ஆனால், எங்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. போலீஸில் பலமுறை புகார் கொடுத்தும் பலன் இல்லை. கடைசியாக, கடந்த பத்து நாள்களுக்கு முன்னர் வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் ரவளி பிரியா கந்தபுனேரியிடம் நாங்கள் மனு ஒன்றைக் கொடுத்தோம். தீர்வுக்காகக் காத்திருக்கிறோம். போலீஸில் நாங்கள் கொடுக்கும் புகார்களை, 'குறிப்பிட்ட இடம்தாண்டிப் போகாத அளவுக்குப் பார்த்துக் கொள்கிறார்களோ' என்று எங்களுக்குச் சந்தேகமாக இருக்கிறது. எங்களுக்கு நியாயம் கிடைக்கும்வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளோம். ஒரு நபருக்கு தலா 25 ஆயிரம் முதல் லட்சம் ரூபாய் வரை கொடுத்து நாங்கள் ஏமாந்து விட்டோம். இனி, நாங்கள் இந்தப் பிரச்னையை விடுவதாக இல்லை" என்றார். பாதிக்கப்பட்ட சுகுணா என்ற பெண், "போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் நாகலிங்கம் மீது வழக்குப் பதியச் சொல்லிக் கோர்ட் டைரக்‌ஷன் வாங்கி வைத்திருக்கிறேன்" என்றார். நாகலிங்கத்திடம் பேசினேன். "நான் 45 ஆண்டுகாலமாக அ.தி.மு.க-வில் உள்ளேன். நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேஷ் பாபு, அமைச்சர் டி. ஜெயக்குமார் பெயர்களைப் போட்டு, ஊரில் பேனர் வைத்ததால், கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் கோஷ்டிகள், என் மீது இப்படி ஒரு புரளியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். ஆயிரம் மதுசூதனன்களை கட்சியில் வளர்த்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன். நான் முழுநேர அரசியல்வாதி. எத்தனையோ எதிர்ப்புகளை  பொதுவாழ்க்கையில் பார்த்துவிட்டேன்.
 
பொதுமக்கள் என் வீட்டை முற்றுகையிட்டால், அதே பொதுமக்களைத் திருப்பிவிட்டு ஓட விடுவேன். என் மீது கேஸ் போட்டு, யார் என்ன பண்ண முடியும்? நான் யாரிடமும் எந்தப் பணமும் வாங்கவில்லை, யாரையும் பார்த்தது கூட இல்லை. குடிசைமாற்று வாரிய வீடுகள் தொடர்பா யார்கிட்டேயும் பேசவில்லை. ஊருக்குள்ளே வந்து என்னைப் பற்றி, கேட்டுப் பாருங்க தம்பி. ஒருத்தன்கூட தப்பா சொல்ல மாட்டான்" என்றார். அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனனிடம் பேசினேன். "யாரு, அந்த நாகலிங்கமா, அப்படியா சொல்றாரு. இருந்துட்டுப் போகட்டும். அந்தத் தம்பி வட்டச் செயலாளர்ங்கறதால,  அவரோட சம்சாரத்துக்கு கவுன்சிலர் சீட்டை, அம்மாக்கிட்டேச் சொல்லிப் போடச் சொன்னதே நான்தான். விஷயம் இப்ப அது இல்ல. அம்மா அரசாங்கத்துல ஏழை, எளியவங்களுக்கு குடியிருப்புக் கட்டிக் கொடுக்கறாங்க, அந்தக் குடியிருப்பை வாங்கிக் கொடுக்கறேன்னு பணம் வாங்கற செயலில் யார் ஈடுபட்டிருந்தாலும் அது அயோக்கியத்தனம்தான். யார் பேரைப் போட்டு, யார் பேனர் வெச்சா, எனக்கு, என்னப்பா. அதுக்கும் பொதுமக்கள் போராட்டம் நடத்துறதுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? என்னத்தயோ சொல்லிட்டுப் போறாங்க, விடுங்க " என்று முடித்துக் கொண்டார்.எந்த நேரமும் பொதுமக்கள் போராட்டம், மறியல் என்று இறங்கக்கூடிய அச்சத்தில் ஆர்.கே.நகர்த் தொகுதி, மீன்பிடித்துறைமுகம் போலீஸார் இருக்கிறார்கள்.