img/728x90.jpg
இணைந்த இருவர்  இணையாத தொண்டர்கள் ! திண்டாடும் அ தி மு க

இணைந்த இருவர் இணையாத தொண்டர்கள் ! திண்டாடும் அ தி மு க

 ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் ஆகிய இருவரும் இணைந்து இன்றுடன் ஒரு வருடம் ஆன நிலையில், அ.தி.மு.க. எதிர்காலம் குறித்து, தொண்டர்கள் முன்பு பல்வேறு கேள்விகள் சுழன்றுகொண்டிருக்கின்றன.
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவால் முதல்வர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியும் இணைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. இருவரும் இணைந்தபிறகு கட்சியிலும், ஆட்சியிலும் மாற்றத்தைக்  கொண்டுவந்தார்கள். ``தொண்டர்கள் விருப்பப்படி இரு அணிகளும் இணைந்ததாகவும், இனி யாரும் தங்களைப் பிரிக்க முடியாது'' என்றும் சொன்ன இவர்கள், அதற்காக இந்த ஓராண்டில் என்ன செய்திருக்கிறார்கள் என்று பின்னோக்கிச் சென்று பார்ப்போம்.
 
ஜெயலலிதா மரணம் அடைந்ததும் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சராகப் பதவி ஏற்றார். இதையடுத்து, 2016-ம் ஆண்டு, டிசம்பர் 29-ம் தேதி, அ.தி.மு.க பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா, அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். ''அ.தி.மு.க அடிப்படை உறுப்பினர்களால்தான் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். பொதுக்குழுவில் நியமித்தது செல்லாது'' என்று தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார் முன்னாள் அ.தி.மு.க எம்.பி. கே.சி.பழனிச்சாமி. இந்தப் பிரச்னைகளுக்கு இடையே, சசிகலாவை முதல்வர் ஆக்கும் வகையில் முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். இதற்கிடையில், சசிகலா தலைமையிலான அமைச்சரவையில் யார் யார் எல்லாம் அமைச்சர்களாகப் போகிறார்கள் என்ற தகவல்கள் கசியத் தொடங்கின. அதில், ஓ.பன்னீர்செல்வம் பெயர் இல்லை என்று சொல்லப்பட்டது.
 
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த இரண்டே நாளில், அதாவது 2017-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி, ஜெயலலிதா சமாதி முன்பு திடீரென்று தியானம் இருக்கத் தொடங்கினார். சசிகலாவுக்கு எதிராகத் தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம், 'தன்னைக் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்தனர்'' என்று பரபரப்பு புகார் வாசித்தார். இதையடுத்து, ஓ.பன்னீர்செலவம் அணி, சசிகலா அணி என்று அ.தி.மு.க தொண்டர்கள் இரு அணிகளாகப் பிரிந்து நின்றனர். ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு எம்.எல்.ஏ-க்கள் சிலர் வரத் தொடங்கினர். அதைத் தடுக்க, அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களைச் சென்னை கூவத்தூரில் உள்ள  தனியார் விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று அடைத்துவைத்தனர். அப்போது, அவர்களுக்கு அரசியல் வகுப்புகளையும் எடுத்ததோடு, தன்னிடமிருந்து பிரிந்து செல்லாத அளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருந்தார் சசிகலா. 
 
இந்நிலையில், `ஜெயலலிதா, சசிகலா தொடர்புடைய சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்' என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதனால், சசிகலாவின் முதல்வர் கனவு நொறுங்கியது. அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை தொடங்கிய நிலையில், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் தலைவராக எடப்பாடி பழனிசாமியைத் தேர்வுசெய்து அறிவித்தார் சசிகலா. இந்த நிலையில்தான் பிப்ரவரி 14-ம் தேதி, சொத்துக் குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றம் சசிகலாவுக்குச் சிறைத் தண்டனை வழங்கியது. ஆட்சியை எடப்பாடி பழனிசாமி கையிலும் கட்சியை டி.டி.வி.தினகரன் (துணைப் பொதுச் செயலாளர்) கையிலும் கொடுத்துவிட்டு பெங்களூரு சிறைக்குச் சென்றார் சசிகலா.
 
அதன்பின்னர், அ.தி.மு.க உள்கட்சி மோதல் பிரச்னை, இந்திய தேர்தல் ஆணையத்துக்குப் போனது. அ.தி.மு.க-வையும் இரட்டை இலையையும் முடக்கிவைத்தது. அதன்பின், நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் சுயேட்சை வேட்பாளராகக் களம் இறங்கினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அவருக்கு ஆதரவாகத் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டனர். ஓ.பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனன் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்ற புகார் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து, வருமானவரித் துறை நடத்திய அதிரடிச் சோதனையில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா தொடர்பான ஆவணங்கள் சிக்கின. இதன் காரணமாக, இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, டி.டி.வி.தினகரன் முகாமில் இருந்து மெள்ள மெள்ள விலக ஆரம்பித்தார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதனால், அ.தி.மு.க. மூன்றாகப் பிரிந்தது.  
 
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியையும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியையும் இணைக்கும் வேலைகள் திரைமறைவில் நடக்கத் தொடங்கின. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி இரு அணிகளும் இணைந்தன. அன்று, கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். மாஃபா பாண்டியராஜனுக்கும் அமைச்சர் பதவி கிடைத்தது. இதையடுத்து அவர்கள், அ.தி.மு.க பொதுக்குழுவைக் கூட்டி, `சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரது நியமனம் செல்லாது' என்று கட்சியிலிருந்து அவர்களை நீக்கி அறிவித்தனர். மேலும், `இனி, அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவியே கிடையாது' என்று தீர்மானம் இயற்றியதோடு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளைப் புதிதாகத் தங்களுக்குச் சாதகமாகக் கொண்டுவந்தனர். 
 
இந்த நிலையில், பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், ''பொதுக்குழுவைக் கூட்டிக் கொள்ளலாம்; ஆனால், அதன் முடிவுகள், நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது'' என்று கூறியது. இந்த நிபந்தனை அடிப்படையில்தான் அந்தப் பொதுக்குழுவே நடந்து முடிந்தது. எனவே, பொதுக்குழு முடிவுகள் இறுதியானது அல்ல. இப்போது, அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக, `தேர்தல் ஆணையத்தில் கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு 4 வாரத்துக்குள் இறுதி முடிவு எடுக்க வேண்டும்' என்று கடந்த வாரம், டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. எனவே, இதற்குப் பதில் சொல்லி கட்சியைக் காப்பாற்றுவது எப்படி என்ற இக்கட்டான சூழ்நிலையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் உள்ளனர். 
 
மேலும், அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணி தொடங்கி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் அந்தப் பணியை முடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு வைத்துவிட்டு, அதை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால், அ.தி.மு.க தொண்டர்கள் ஒருவித சோர்வில் உள்ளனர். இது ஒருபுறம் இருக்க... மறுபுறம் டி.டி.வி.தினகரன், நாடாளுமன்றத் தேர்தல் வேலைளை ஆரம்பித்து அதற்கான ஆலோசனைக் கூட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்தாலும் அ.தி.மு.க தொண்டர்கள், கட்சிப் பணிகளில் ஒட்டுறவு இல்லாமல் செயல்படுவதுபோலவே இருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் இருக்கும் மனு மீதான தீர்ப்பு எப்படி வருமோ என்ற பதற்றமும் தொண்டர்களிடையே உள்ளது. இதனால், திக்குத் திசை தெரியாமல் அ.தி.மு.க தொண்டர்கள் இருக்கிறார்கள். கட்சியின் நிலைமையும் அதுதான். ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் ஆகிய இருவரும் இணைந்து ஒரு வருடம் ஆன நிலையில், அ.தி.மு.க. எதிர்காலம் குறித்து, தொண்டர்கள் முன்பு பல்வேறு கேள்விகள் சுழன்றுகொண்டிருக்கின்றன.