img/728x90.jpg
தூர்வாரினாலே போதும்  தடுப்பணை தேவையில்லை! காவிரி நீரைச் சேமிக்க ஓர் உபாயம்

தூர்வாரினாலே போதும் தடுப்பணை தேவையில்லை! காவிரி நீரைச் சேமிக்க ஓர் உபாயம்

 காவிரிப் படுகையில் உள்ள 900 நீர் நிலைகள், கால்வாய்களை முறையாகத் தூர் வாரி, நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் தேங்குவதற்கான வழியை ஏற்படுத்தினாலே பெருமளவிலான நீரை சேமித்திட முடியும். முக்கியமான மணல் அள்ளப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

 
காவிரி வெள்ளத்தில் தத்தளிப்பவர்கள் ஒருபக்கம் என்றால், கடைமடைப் பகுதிகளுக்கோ இன்னமும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட சென்றுசேரவில்லை! இந்நிலையில், 'நீர் மேலாண்மை குறித்து அ.தி.மு.க அரசுக்கு தொலைநோக்குப் பார்வையில்லை. அதனால்தான், வெள்ளம் கரைபுரண்டோடும் காவிரி ஆற்றுத் தண்ணீரை முறையாகச் சேமித்துவைக்க வழிதெரியாமல், வீணாகக் கடலில் கலக்க விட்டுக்கொண்டிருக்கிறார்கள்' என்று குற்றச்சாட்டு வைத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின்.
 
காவிரி வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'தண்ணீரை சேகரிக்கும் முயற்சியாக விரைவில் தமிழகத்தில், 62 தடுப்பணைகள் கட்டப்படும்!' என்று அறிவித்திருக்கிறார். 
 
கேரளா வெள்ளம்
'தமிழகத்தின் நிலவியல் அமைப்பு முறை, புதிதாக அணைகள் கட்டுவதற்கோ அல்லது சிறிய அளவிலான தடுப்பணைகள் அமைப்பதற்கோ ஏற்றதாக இல்லை' என்று நீர் மேலாண்மை வல்லுநர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறிவரும் நிலையில், தமிழக முதல்வரின் தடுப்பணை குறித்த அறிவிப்பும், எதிர்க்கட்சித் தலைவரின் நீர் சேமிப்பு குறித்த அக்கறையும் எந்தளவு சாத்தியம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
 
இதுகுறித்து சூழலியல் ஆர்வலரான 'பூவுலகு நண்பர்கள்' சுந்தர்ராஜனிடம் பேசினோம்... ''தண்ணீரெல்லாம் வீணாகக் கடலில் போய் கலக்கிறது - என்று சொல்வதே தவறானப் பார்வை. வெள்ளமாக வடிகிற நீர் கடலில் கலந்துதான் ஆகவேண்டும்.... அதுதான் இயற்கை. ஆனால், காவிரிப் பாசனப் பகுதியில், இப்போது உள்ள நீர்நிலைச் சிக்கல்களை சரிசெய்யவேண்டியதுதான் அத்தியாவசியப் பணி. 
 
ஏனெனில், காவிரிப் பாசனப் பகுதியில் மட்டும் 29 ஆயிரம் மைல் நீளத்துக்கு கால்வாய்கள் இருக்கின்றன. 900-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருக்கின்றன. ஆனால், இவை எல்லாம் தூர் வாரப்படாமல், புதர் மண்டி மண் மேலிட்டுக் கிடக்கின்றன. அதனாலேயே தண்ணீரைச் சேமிக்க வழியில்லாமல் போய்விட்டது. குறிப்பிட்ட நாள் இடைவெளியில் இதுபோன்ற கால்வாய் மற்றும் நீர்நிலைகளைத் தூர் வாரியிருந்தாலே, இப்போது எந்தப் பிரச்னையும் இல்லாமல் எளிதாகத் தண்ணீரைச் சேமித்திருக்க முடியும். அதுமட்டுமல்ல... நீர் நிலைகளில், அளவுக்கு மீறி முறைகேடாக மண் அள்ளப்பட்டுள்ளதால், நீர்ப் போக்குவரத்து வழியானது மேடுகளாகிவிட்டன. இன்னமும் கடைமடைப் பகுதிகளுக்கு நீர் செல்லாததற்கு இதுவும் ஒரு காரணம். ஆக, நீர் நிலையிலும் நீர் வழிப் போக்குவரத்திலும் உள்ள தடைகளை அகற்றுவதுதான் முதல் வேலையாக இருக்கவேண்டும். இந்தப் பணிகள் எல்லாம் முடிவுற்றப் பிறகே, தடுப்பணைகள் கட்டி நீரைச் சேமிக்கும் வழிகளைத் தேர்வு செய்யவேண்டும். 
 
நீர் மேலாண்மைப் பிரச்னைகளுக்கு 'காங்க்ரீட் தீர்வு' தேடுவது முழுமையான பலனளிக்காது. காவிரிப் படுகையில் உள்ள 900 நீர் நிலைகள், கால்வாய்களை முறையாகத் தூர் வாரி, நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் தேங்குவதற்கான வழியை ஏற்படுத்தினாலே பெருமளவிலான நீரை சேமித்திட முடியும். முக்கியமான மணல் அள்ளப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதைவிடுத்து 62 தடுப்பணைகள் கட்டுவதென்பது, பிரச்னைக்கான சரியானத் தீர்வு அல்ல. அப்படிக் கட்டப்படும் அணைகளில், ஏதாவது ஒன்றிரண்டு அணைகள் வேண்டுமானால், பயன்பாட்டுக்கு உரியதாக இருக்குமே அன்றி, மற்ற தடுப்பணைகள் முழுமையான பயனைத் தராது என்பதே உண்மை. 
 
கேரளாவில், இன்றைக்குக் கால நிலை மாற்றங்களால், வரலாறு காணாத பெரு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த விளைவுகளுக்கு முழுக்க முழுக்க நாம்தான் காரணம். அதாவது, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கல்குவாரி, ரிசார்ட்டுகளில் ஆரம்பித்து நியூட்ரினோ, அணைக்கட்டுகள் என புதிது புதிதாக நாம் செயல்படுத்திவரும் திட்டங்கள்தான் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கின்றன. இதுபோன்ற மனிதத் தவறுகளின் தொடர்ச்சியாகத்தான் நிலச்சரிவுகளும் அதையொட்டிய இந்தப் பேரழிவும்!'' என்று முத்தாய்ப்புடன் முடிக்கிறார் பூவுலகு சுந்தர்ராஜன்.