img/728x90.jpg
தி நகரில் ஷாப்பிங் செய்ய உயிரைப் பணயம் வைக்க வேண்டுமா? வரம்பு மீறல் அபாயங்கள்

தி நகரில் ஷாப்பிங் செய்ய உயிரைப் பணயம் வைக்க வேண்டுமா? வரம்பு மீறல் அபாயங்கள்

 தி.நகர்ல வரம்பு மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் ஒன்னு, இரண்டு இல்ல. நூற்றி நாப்பது கட்டிடங்கள் இருக்கு. நாலுமாடிக்கு அப்ரூவ் வாங்கிட்டு எட்டுமாடி கட்டி இருக்கவங்க நிறையபேரு.உலகப் பெருநகரங்களில் வர்த்தகரீதியாக, 

 
சுற்றுலாத்தளமாக, வாழ்வதற்கு தகுதிவாய்ந்த இடம் எனப் பல தளங்களில் முன்னணியில் இருக்கக்கூடிய நகரம் சென்னை. அந்தச் சென்னையில், மக்கள் அதிகம் புழங்குகிற இடங்களில் முக்கியமானது தியாகராய நகர் எனச் சொல்லப்படுகிற தி.நகர். ஒரு சைக்கிளைக் கூட ஒரமாக நிறுத்தமுடியாத அளவுக்கு இடநெருக்கடி மிகுந்த தி.நகர் சாலைகளில் அடுக்குமாடி கட்டடம் பல இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஜவுளி, நகை, வீட்டு உபயோகப் பொருட்கள் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் நாம் வாங்கிச் செல்ல வேண்டுமென விண்ணைத் தொடும் அளவுக்கு கடை பரப்பியிருக்கிறார்கள். குறுகலான சாலைகளில் பெரிய பெரிய கட்டடங்களைக் கட்டுவதற்கும், கட்டியது குறித்து இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்கள் என்பது குறித்தும் அறிந்து கொள்வதற்காக சட்டப் பொறியாளர் பாலாஜியிடம் பேசினேன். வரம்பு மீறி கட்டப்பட்டு வரும் கட்டடங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் பாலாஜி.
 
வரம்பு மீறும் கட்டடம் - பாலாஜி"தி.நகர்ல வரம்பு மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் ஒன்று, இரண்டு இல்லை. 140 கட்டடங்கள் இருக்கு. நாலுமாடிக்கு அப்ரூவ் வாங்கிட்டு எட்டுமாடி கட்டி இருக்கவங்க நிறையபேரு. நெருக்கமான இடச்சூழல்ல பல அடுக்குக் கட்டடங்கள் கட்டுறது ரொம்ப ஆபத்தானது. போன வருஷம் தீ விபத்து நடந்த ஒரு கட்டடத்தையே இதுக்கு உதாரணமாகச் சொல்லலாம். இன்னைக்கு என்ன ஆச்சு, திரும்பவும் அவங்க கட்டிட்டாங்க. அவங்க அப்ளிகேஷன் கொடுத்த தினமே, சி.எம்.டி.ஏ அவங்களுக்கு அப்ரூவல் கொடுக்குது. இருபது நாட்கள்ல எட்டு அடுக்கை எழுப்பி பாதி வேலையை முடிச்சுட்டாங்க. கவர்மென்ட்ல சிசி (Completion Certificate) வாங்குன அப்புறம்தான் இவங்களுக்கு வாட்டர் சப்ளை, பவர் சப்ளையெல்லாம் கொடுக்கணும். ஆனா, சி.எம்.டி.ஏ.வுல எதையும் ஒழுங்கா அவங்க ஃபாலோ பண்றதில்ல. பல துறை அலுவலர்கள் சி.எம்.டி.ஏ.ல இருக்காங்க. இருந்தும் அவங்களோட அலட்சியத்திற்கு நாம தொடர்ந்து விலைக் கொடுத்துட்டுத்தான் இருக்கப்போறோம்.அதேபோல, இன்ஜினியர், ஆர்க்கிடெக்ட் அவங்களுக்கும் இதுல பெரிய பங்கு இருக்கு. கவர்மென்ட் அப்ரூவ் கொடுக்குறதுக்காக அதுக்கு ஏத்தமாதிரி ஒரு ப்ளான் போட்டு கொடுக்கிறது. அப்ரூவ் ஆனபிறகு, முதலாளிகள் வசதிக்கு ஏத்த மாதிரி ஒரு ப்ளான் போட்டு கொடுக்கிறதுன்னு நிறைய முறைகேடுகள் பண்றாங்க. ஆனாலும், இவங்களுக்கெல்லாம் என்ன வந்தது? ஒரு கட்டடம் இடிஞ்சு விழும்போது, தீப்பற்றி எரியும்போது இவங்க உயிரா போகுது. சிறைக்குப் போனாலும் சீக்கிரம் வெளிய வரக்கூடிய எல்லா சாத்தியங்களும் இவங்களுக்கு இருக்கு" என்று அலுப்புடன் முடித்துக் கொண்டார் பாலாஜி.
 
வணிகக் கட்டடங்கள் மட்டுமின்றி குடியிருப்பு கட்டடங்கள் கூட வரம்பு மீறி கட்டப்படுவதால் பல விபத்துகளை நாம் பார்க்கிறோம். அரசு அதிகாரிகள், முதலாளிகள், இன்ஜினியர்கள் என சிலர் தங்களின் சுய லாபத்திற்காக நேர்மையை புறந்தள்ளுகின்றனர். கட்டடத்தைக் கட்டும் தொழிலாளர்களும் சரி, கட்டப்பட்ட பிறகு அதைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் சரி இவர்கள் எந்தப் பாதுகாப்பையும் உறுதி செய்வதில்லை. பாதுகாப்புக்காக இவர்கள் வைத்திருக்கும் உபகரணங்கள் எல்லாம் சம்பிரதாயத்துக்கு உட்பட்டவையாகத்தான் இருக்கின்றன என்பது தொடரும் சம்பவங்கள் நமக்கு உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறது.
 
 
ஒரு கட்டடத்திற்கு முன்னும் பின்னும் வெட்டவெளியில் போதிய இடம்விட வேண்டும். காற்றோட்டமாக இருக்க வேண்டும். தீ விபத்திலிருந்து தப்பிக்கும் வழிகள் எளிதாக இருக்க வேண்டும், சாலையின் நீள அகலத்திற்கு ஏற்றாற்போல் கட்டடத்தின் உயரம் இருக்க வேண்டும் எனப் பல விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், அந்த விதிமுறைகள் எல்லாம் பணம் என்னும் வஸ்துவால் எளிதில் விலைக்கு வாங்கப்பட்டு அறத்தை புதைமணலாக்கி அதன் மீது எழுப்பப்படுகின்றன கட்டடங்கள். தி.நகருக்கு சென்று, அங்குள்ள உயரமான கட்டடங்களில் ஏதேனும் வாங்க வேண்டுமென்றால் பணம் மட்டும் போதாது, உயிரைப் பணயம் வைக்கும் துணிவும் வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.