• :
  • :
களத்தில்

11% கமிஷன் தோற்றது 14% கமிஷன் வென்றது

11% கமிஷன் தோற்றது 14% கமிஷன் வென்றது

 தமிழக அரசின் பொதுப்பணித் துறையில், ஒரு பணிக்கான டெண்டர் விடப்பட்டுப் பணியை கான்ட்ராக்டர் தொடங்கிய பிறகு, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டால் அந்தப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. கமிஷன் பிரித்துக்கொள்வதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், அதிகாரிகள் ஆகியோரிடையே ஏற்பட்ட பிரச்னைதான் இதற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு பரபரக்கிறது.

 
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 110 விதியின்கீழ் பொதுப்பணித் துறையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆண்டகலூர் கேட் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் 16 வகுப்பறைகள் மற்றும் இரண்டு ஆய்வுக்கூடங்கள் கட்டுவதற்கு மூன்று கோடியே 30 லட்சம் ரூபாய்க்கும், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 20 வகுப்பறைகள் மற்றும் நான்கு ஆய்வுக்கூடங்கள் கட்டுவதற்கு மூன்று கோடியே 45 லட்சம் ரூபாய்க்கும், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 16 வகுப்பறைகள் மற்றும் நான்கு ஆய்வுக்கூடங்கள் கட்டுவதற்கு மூன்று கோடியே 35 லட்சம் ரூபாய்க்கும் டெண்டர் அறிவிக்கப்பட்டது. இந்தப் பணிகள் தொடர்பாகத்தான் பிரச்னை எழுந்தது.
 
 
இதுபற்றி ஸ்ரீமாசடச்சி அம்மன் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தரம், அதிரடியாக பல குற்றச்சாட்டுகளை வீசுகிறார். ‘‘நாமக்கல் பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் சார்பாக நாங்கள் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், மின்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோரைச் சந்தித்தோம். ஒவ்வொரு பணிக்கும் 11 சதவிகிதம் கமிஷன் கொடுப்பதாக உறுதியளித்தோம். பிறகு, எங்கள் சங்கத்தைச் சேர்ந்த நாச்சிமார் கன்ஸ்ட்ரக்‌ஷனுக்கு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி பணிகளையும், நியூ சிட்டி என்ஜினீயரிங் கன்ஸ்ட்ரக்‌ஷனுக்கு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் மகளிர் கலைக்கல்லூரி பணிகளையும், ஸ்ரீமாசடச்சி அம்மன் கன்ஸ்ட்ரக்‌ஷனான எங்களுக்கு ஆண்டகலூர் கேட் திருவள்ளுவர் கலைக்கல்லூரி பணிகளையும் கொடுப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் உறுதி அளித்தார். 12.12.2017 அன்று சென்னை பொதுப்பணித் துறை அலுவலகத்தில் தலைமைப் பொறியாளர் துரைசாமி முன்னிலையில் டெண்டர் நடைபெற்றது. அப்போது, ‘அமைச்சர் சொல்லிவிட்டார். பணிகள் உங்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளன’ என்று தலைமைப் பொறியாளர் கூறினார். பிறகு திடீரென, இந்தப் பணிகளை நாமக்கல் எஸ்.ஆர் கன்ஸ்ட்ரக்‌ஷனுக்குக் கொடுத்துவிட்டனர். சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவுக்கும், நாமக்கல்  எம்.எல்.ஏ-வான பாஸ்கருக்கும் 14 சதவிகிதம் கமிஷன் கொடுத்துவிட்டு, இந்த டெண்டரைப் பெற்றுப் பணிகளைத் தொடங்கிவிட்டது எஸ்.ஆர் கன்ஸ்ட்ரக்‌ஷன்.
 
காரணம் எதுவும் சொல்லாமல் எங்களை நிராகரித்துவிட்டனர் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘விதிமுறைகளை மீறி டெண்டர் விடப்பட்டுள்ளது உண்மைதான். டெண்டரை ரத்து செய்கிறோம்’ என்று பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் துரைசாமி, நீதிமன்றத்தில் உறுதிமொழிப் படிவம் தாக்கல் செய்தார். அதையடுத்து, இந்தப் பணிகளுக்கான டெண்டர் நிறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
 
நாமக்கல் பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத் தலைவரும் நியூ சிட்டி என்ஜினீயரிங் கன்ஸ்ட்ரக்‌ஷன் உரிமையாளருமான மகேந்திரன், ‘‘அமைச்சருக்கு எட்டு சதவிகிதம், லோக்கல்    எம்.எல்.ஏ-க்களுக்கு இரண்டு சதவிகிதம், அமைச்சர் உதவியாளருக்கு ஒரு சதவிகிதம் என மொத்தம் 11 சதவிகிதம் கொடுப்பதாகக் உறுதியளித்தோம். ஆனால், லோக்கல் எம்.எல்.ஏ-க்களுக்கு ஐந்து சதவிகிதம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி எங்களிடம் 14 சதவிகிதம் கேட்டார்கள். ‘பணிக்கான ஒப்பந்தம் போடும்போது அதிகாரிகளுக்கு ஐந்து சதவிகிதம் கொடுக்க வேண்டியுள்ளது. மேலும், ஜி.எஸ்.டி 12 சதவிகிதம் கட்ட வேண்டும். கல்லூரிக் கட்டடம் என்பதால், ஓரளவுக்குப் பணிகளை நேர்த்தியாகச் செய்ய வேண்டும்’ என்று பேசிய பிறகு, 11 சதவிகித கமிஷனுக்கு ஒப்புக்கொண்டனர். கல்லூரிகள் இருக்கும் தொகுதிகளுக்கு உட்பட்ட எம்.எல்.ஏ-க்களான சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, நாமக்கல் தொகுதி எம்.எல்.ஏ பாஸ்கர் ஆகியோர் ஐந்து சதவிகிதம் கமிஷன் கொடுக்க ஒப்புக்கொண்ட எஸ்.ஆர் கன்ஸ்ட்ரக்‌ஷனுக்கு டெண்டரைக் கொடுத்துள்ளனர். இவ்வளவு தொகையை கமிஷனாகக் கொடுத்துவிட்டு, பணிகளை நியாயமாகச் செய்ய முடியுமா?’’ என்றார்.
 
 
 
பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் துரைசாமியிடம் கேட்டபோது, ‘‘தற்போது இதுபற்றி என்னால் எதுவும் பேச முடியாது’’ என்று கூறிவிட்டார். உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், ‘‘இதெல்லாம் அபாண்டமான குற்றச்சாட்டுகள். விதிப்படியே டெண்டர் நடந்தது. குறைந்த ஒப்பந்தப்புள்ளி கோரியவருக்கு டெண்டர் கிடைக்கும் என்பதுதான் நடைமுறை. நாமக்கல் ஒப்பந்ததாரர்கள் சங்கம் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. கமிஷன் பற்றி என்னிடம் அவர்கள் பேசவும் இல்லை. டெண்டர் கிடைக்காத கோபத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அரசு சார்பில் நாங்களும் வழக்கறிஞரை வைத்து வாதாடினால் தடையை உடைத்துவிட முடியும்’’ என்றார்.
 
நாமக்கல் எம்.எல்.ஏ. பாஸ்கர், ‘‘ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தினர் சேவை மனப்பான்மை கொண்டவர்கள் இல்லை. அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மிரட்டிவருகிறார்கள். மற்ற மாவட்டங்களில் அரசுப் பணிகள் அமைதியாக நடைபெற்றுவரும் நிலையில், இவர்கள் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். கமிஷனுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’’ என்றார். 
 
நாம் பலமுறை முயற்சி செய்தும், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பதில் எதுவும் தரவில்லை.