img/728x90.jpg
 20 ரூபாய் அவர்களுக்குப் பெரிதுதான்! மதுரை ராஜாஜி பூங்கா கட்டண கலவரம்

20 ரூபாய் அவர்களுக்குப் பெரிதுதான்! மதுரை ராஜாஜி பூங்கா கட்டண கலவரம்

 மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் முதன்மையான பொழுதுபோக்காகப் பார்க்கப்படுவது மதுரை ராஜாஜி பூங்கா. சாமானிய மக்களும் குழந்தைகளும் வார இறுதி நாட்களைக் குறைந்த செலவில் உற்சாகமாகக் கழிக்க ஏற்ற இடம் இந்த ராஜாஜி பூங்கா. ஆனால், இப்பூங்கா மீது குற்றச்சாட்டு ஒன்றை வைக்கின்றனர் பூங்காவுக்கு வரும் பொது மக்கள். எந்த வித முன்னறிவிப்பும் இன்றி சில மாதங்களாகப் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தை அதிகம் வசூல் செய்வதாக அப்பகுதி மக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. 

 
கட்டண விவரங்களை விசாரித்தபோது இதற்கு முன்னர் குழந்தைகளுக்கு ஐந்து ரூபாயும், பெரியவர்களுக்கு பத்து ரூபாயும் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்தக் கட்டணத்தில் முறைகேடு நடந்து வருவதாக வந்த தகவலைத் தொடர்ந்து உண்மை நிலவரத்தை அறிய மதுரை ராஜாஜி பூங்காவுக்கு நேரில் சென்றோம்.
 
உள்ளே சென்றதும் நுழைவுக் கட்டணத்துக்கான அறிவிப்பு பலகையைப் பார்த்தோம். கட்டணம் எழுதப்பட்டிருக்கும் சுவரில், 'பெரியவர், சிறுவர்' எனக் குறிப்பிட்டிருந்ததே தவிர அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நுழைவுக் கட்டணத்தை முன்னெச்சரிக்கையாக வெள்ளை பெயின்டால் அழித்திருந்தார்கள். பூங்காவின் நுழைவுக் கட்டணமாகக் குழந்தைகள், பெரியவர்கள் என ஒரே கட்டணமாக 20 ரூபாய் வசூலித்தார்கள். 'பார்க்கிங்' இல்லாத இடங்களிலும் 'பார்க்கிங் கட்டணம்' வசூலித்தனர்.
 
இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையர் அனிஸ் சேகரிடம் தொலைபேசி வாயிலாகப் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், ஒரு வாரம் கழிந்தும் நுழைவுக் கட்டண விவகாரம் தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கடந்த சனிக்கிழமையன்று (18.8.2018) மதுரை மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்தோம். மதுரை மாநகராட்சி ஆணையர் அனிஸ் சேகர் பேசியபோது, "கட்டணப் புகார் குறித்து விசாரித்தேன். இதுபோன்ற எந்தவிதமான குற்றமும் நடக்கவில்லை என்றுதான் தெரிகிறது" என்றார். 20 ரூபாய்க்கான நுழைவுக் கட்டண ரசீதின் நகலைக் காட்டினோம். "இதுமாதிரி நடப்பது எனக்குத் தெரியாது. விசாரணைக்குப் பிறகு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இதுவரை பூங்காவில் சரியான கட்டணமே வசூலிக்கப்பட்டிருக்கிறது" என்று மிகவும் உறுதியாகச் சொல்லியிருந்தார். `இத்தனை உறுதியாகச் சொல்கிறாரே..!' என அங்கிருந்து நேராக மீண்டும் ஒருமுறை ராஜாஜி பூங்காவுக்குச் சென்றோம். பணம் வசூலிக்கும் அதே நபர்... அதே சுவர்... ஆனால், தற்போது நீல பெயின்ட் அடித்து முழுவதுமாக அழித்திருந்தார்கள். நுழைவுச்சீட்டு வாங்கியபோது, மீண்டும் அதே 20 ரூபாய் கட்டணத்தை வசூலித்தார்கள். 'மாநகராட்சி ஆணையரைக் கைப்பிடித்து கூட்டி வந்து காட்டலாமா' என்றுதான் மனதுக்குள் தோன்றியது. ஆனால், இதில் ஒரு உத்தியைக் கையாண்டிருக்கிறார்கள். பெரியவர் ஒருவருக்கு நேரடியாக 20 ரூபாய் கட்டணம் வாங்காமல், நுழைவுச் சீட்டில் 2 சிறுவர்கள் கட்டணம் = 20 ரூபாய் எனக் குறிப்பிட்டு வாங்குகிறார்கள்.
 
இதுவும் முன்பைவிட அதிக தொகைதான். ஆனால், அதை இவ்வாறு நூதனமான முறையில் கட்டணக் கொள்ளை அங்கு நடைபெற்று வருவது சற்று வியப்பாகத்தான் இருக்கிறது. நுழைவுக் கட்டணம் வசூலிப்பவரிடம், "என்னண்ணே டிக்கெட் ரேட்டு அதிகமா இருக்கே... முன்ன இப்படி இல்லையே... 20 ரூபாவா வாங்குவீங்க" என்று கேட்டால், ``இப்போ என்ன அதுக்கு... விருப்பம் இருந்தா வாங்கிட்டு உள்ள போ... இல்லைன்னா கிளம்பு" என மிகவும் 'பாசமாக' வழியனுப்புகிறார்!
 
இந்தத் திடீர் கட்டண உயர்வால் பூங்காவுக்கு வந்திருந்த மக்கள், கடும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். அழகர்கோவில், திருமங்கலம் போன்ற மதுரையின் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். வாரம் முழுவதும் மாடாக உழைத்துவிட்டு, வாரக்கடைசியை அரசுப் பூங்காவில் குடும்பத்துடன் கழிக்கும் ஆசையில், உணவு முடிச்சுகளோடு வந்த பெற்றோர், குழந்தைகளின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தைச் சொல்வதற்கு வார்த்தைகள் கிடையாது. ஆமாம்.. இவர்களுக்கு அந்த 20 ரூபாய் அத்தனை பெரிய விஷயம்தா