img/728x90.jpg
மூன்று மாதங்களாக செக்ஸ் டார்ச்சர்! - கதறும் பெண் எஸ்.பி  சிக்கலில் ஐ.ஜி

மூன்று மாதங்களாக செக்ஸ் டார்ச்சர்! - கதறும் பெண் எஸ்.பி சிக்கலில் ஐ.ஜி

 தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் (டி.வி.ஏ.சி) ஐ.ஜி-யான முருகன் ஐ.பி.எஸ், எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார்’’ என்று எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள ஓர் உயரதிகாரி எழுப்பியுள்ள குற்றச்சாட்டால், தமிழகக் காவல்துறையே அதிர்ந்துகிடக்கிறது. 

 
மாநில போலீஸ் சர்வீஸ் மூலம் ஐ.பி.எஸ் அந்தஸ்தைப் பெற்றவர் முருகன். சி.பி.ஐ-யிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அந்த வரிசையில், டி.வி.ஏ.சி பிரிவு ஐ.ஜி பதவியில் பணியாற்றி வருகிறார். மாநிலம் முழுக்க உள்ள லஞ்ச ஊழல் வழக்குகளையும் விசாரித்து வருகிறார். இந்நிலையில்தான், அவர்மீது இப்படி செக்ஸ் டார்ச்சர் புகார்.
 
சென்னை, ஆலந்தூரில் உள்ள டி.வி.ஏ.சி அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் ஐ.ஜி முருகனின் அறை உள்ளது. அந்த அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளிடம் இதுபற்றி விசாரித்தோம். ‘‘கடந்த மாதத்தில் ஒருநாள் அந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாலை நேரம், ஐ.ஜி-யின் அறைக்கு அந்தப் பெண் அதிகாரி போயிருக்கிறார். திடீரென அவரை நோக்கிவந்த முருகன், அறையின் உள்பக்கமாக தாழ்ப்பாளை லாக் செய்துவிட்டு கட்டிப்பிடிக்க முயற்சி செய்துள்ளார். கடும் எதிர்ப்பு தெரிவித்துப் பெரும் போராட்டத்துக்குப் பிறகு அவர் வெளியே ஓடிவந்துள்ளார். அந்தப் பெண் அதிகாரி மீது முருகனுக்கு ஆசை. வேலை தொடர்பான காரணங்களைச் சொல்லி அலுவலகத்துக்கு வரவழைத்து, திடீரெனப் பேச்சை மாற்றி அவரது அழகை வர்ணிப்பாராம் முருகன். இரவில் போன் செய்து வளவளவென்று பேசுவாராம். மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்த டார்ச்சர் இருந்துள்ளது. உயர் அதிகாரி என்பதால் பொறுமைகாத்தவர், முருகனின் டார்ச்சர் உச்சகட்டத்தை அடைந்ததும் அழுது புலம்பியிருக்கிறார். போலீஸ் டி.ஜி.பி மற்றும்  டி.வி.ஏ.சி-யின் டி.ஜி.பி ஆகியோரிடம் புகார் கொடுத்துள்ளார். பத்து நாள்கள் ஆகியும் எந்தப் பதிலும் இல்லாததால், உள்துறை செயலாளருக்கு புகாரை அனுப்பியுள்ளார். அங்கும் எந்த விசாரணையும் நடக்கவில்லை. அதனால், முதல்வரின் செயலாளருக்கு புகார் தெரிவித்துள்ளார். அதன் பிறகும், எதுவும் நடக்கவில்லை. அதனால், விடுப்பில் சென்றுவிட்டார்.
 
 
 
விஷயம் மீடியாக்களுக்குக் கசிய... பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் டார்ச்சர்கள் தொடர்பான புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டியை காவல்துறையில் அவசர அவசரமாக அமைத்துள்ளனர். கூடுதல் டி.ஜி.பி சீமா அகர்வால், கூடுதல் டி.ஜி.பி அருணாசலம், டி.ஐ.ஜி தேன்மொழி, கூடுதல் எஸ்.பி சரஸ்வதி (ஓய்வு) ஆகியோரைக் கொண்டு அந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, எஸ்.பி ஒருவர்மீது, பெண் போலீஸ் ஒருவர் பாலியல் ரீதியான புகார் கொடுத்தார். அப்போதும் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு, அதன் தலைவராக இருந்து சீமா அகர்வால் விசாரித்தார். அந்த விவகாரம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. தொழில்நுட்பப் பிரிவு எஸ்.ஐ ஒருவர்மீது பெண் துப்புரவுப் பணியாளர் புகார் கொடுத்து வழக்கெல்லாம் நடந்தது. அந்த விவகாரமும் அமுங்கிப்போனது. அதிகார வர்க்கம்மீது பாலியல் புகார் செய்யும் பெண் அதிகாரிகளை மிரட்டி, புகாரை வாபஸ் வாங்க வைத்துவிடுகிறார்கள். இந்த வரிசையில் இந்தப் பெண் உயரதிகாரியின் புகாரும் போய்விடுமோ எனக் கவலையாய் இருக்கிறது’’ என்று வருத்தத்துடன் பேசினார்கள் அவர்கள்.
 
காவல்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது “டி.வி.ஏ.சி-யின் ஐ.ஜி-யாக உள்ள முருகன்தான், ‘குட்கா- ஊழல்’ தொடர்பாக விசாரணை நடத்தியவர். தற்போது விசாரணை சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டாலும், அதுதொடர்பான ஃபைல் விவரங்கள் முருகனுக்கு நன்கு தெரியும். தமிழக சட்டம் - ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரனில் ஆரம்பித்து நான்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசியல் பெருந்தலைகள் என அதில் பலர் சிக்கியுள்ளனர். இவர்களின் முழு விவரங்கள், ஐ.டி ரெய்டில் சிக்கிய டைரியில் இருந்தன. அதை மேற்கோள்காட்டி நடவடிக்கை எடுக்கும்படி, அந்தத் துறையினர் அளித்த கடிதத்தின் அடிப்படையில், டி.வி.ஏ.சி விசாரிக்கவில்லை. மாறாக, அப்போதைய சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், இதே விவகாரம் தொடர்பாக அளித்த கடிதத்தின் அடிப்படையில் மட்டுமே விசாரித்தனர். சின்ன லெவல் போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் சிக்கின. பெரிய திமிங்கிலங்களின் பெயர்களே இல்லை.
 
கிட்டத்தட்ட இதே ட்ராக்கில்தான் தற்போது சி.பி.ஐ-யும் பயணிக்கிறது. தேவைப்பட்டால், அடுத்தகட்ட விசாரணையில் பெரிய திமிங்கிலங்கள் பற்றித் தகவல் கிடைத்தால், அவர்களிடம் விசாரிக்கலாம் என்கிற முடிவில் உள்ளனர். டி.கே.ராஜேந்திரன் வகையறாக்கள் முருகனின் அருள் இல்லாமல் தப்பிக்க முடியுமா என்று வினா எழுப்பி வந்தது போலீஸ் துறையில் உள்ள மற்றொரு போலீஸ் கோஷ்டி. இந்த நிலையில், முருகன் மீது இப்படி செக்ஸ் டார்ச்சர் புகார் கிளம்பியுள்ளது. இந்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கும் வேலையில் அந்த கோஷ்டி தீவிரமாக இறங்கியுள்ளது. டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி மீது ஒரு கண் வைத்துள்ள இரண்டு உயரதிகாரிகள், இந்தக் கோஷ்டிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர்’’ என்றனர். 
 
முருகன் தரப்பு பற்றிச் சொல்லும் சில போலீஸ் அதிகாரிகள், ‘‘அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கிப் பல்வேறு பல்கலைக்கழகங்களின் ஊழல், ரெய்டு என்று அமர்க்களப்படுத்தியவர் முருகன். உள்ளாட்சித் துறையில் முக்கியமான அதிகாரிகளைப் பொறிவைத்துப் பிடித்தார். அதனால், பல தரப்பிலும் எதிரிகளைச் சம்பாதித்தார். அவர்கள் அனைவரும் முருகனுக்கு எதிராக சதிவலையைப் பின்னிவந்தனர். ஆனால், இப்படி ஒரு புகார் கிளம்பும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. திட்டமிட்டு இப்படியொரு புகாரைக் கிளப்பி முருகனை மிரட்டப் பார்க்கிறார்களோ என்றுகூட சந்தேகப்படுகிறோம்.
 
டி.வி.ஏ.சி அலுவலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளன. ஒருவேளை முருகன் அறையில் ஏதாவது நடந்திருந்தால், அவர் அலறியடித்துக்கொண்டு வெளியே வந்திருப்பார். அது, கேமராவில் பதிவாகியிருக்கும். அதைப் பார்த்தாலே, நிஜம் வெளிப்படும். சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் நாளுக்கு அடுத்த நாள் மதியம், உயர் அதிகாரிகளுடன் உட்கார்ந்து சிரித்துப் பேசியபடி லஞ்ச் சாப்பிட்டார் அந்தப் பெண் அதிகாரி. அப்போதெல்லாம் ஏன் அவர் முருகன்மீது புகார் சொல்லவில்லை? திடீரென அவர் புகாருடன் கிளம்பியது ஏன்?’’ என்று கேள்விகளை அடுக்குகிறார்கள்.
 
இதுகுறித்து விவரமறிய அந்தப் பெண் உயரதிகாரியைச் சந்திக்கச் சென்றோம். வீட்டின் அருகிலிருந்தபடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘‘உங்களைப் பார்க்க வந்துள்ளோம். உங்களிடம் பேச வேண்டும்” என்றோம். அவர், ‘‘மன்னிக்கவும். உடல்நலம் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளேன். இப்போதைய சூழ்நிலையில் என்னால் பேச முடியாது. அதனால், தற்போது வரவேண்டாம்” என்றார். “10 நிமிட அவகாசம் போதும்” என்று நாம் சொன்னதற்கு, “நான் மிகவும் மனஅழுத்தத்தில் இருக்கிறேன். உடல் நிலையும் சரியில்லை. அதனால், தற்போது வர வேண்டாம். அந்தக்  கமிட்டி புகாரை விசாரிக் கட்டும். அதன் பின்னர் நானே பேசுகிறேன். நன்றி’’ என இணைப்பைத் துண்டித்தார்.
 
ஐ.ஜி. முருகனிடம் பேசினோம். ‘‘டி.வி.ஏ.சி-யில், சமாதானத்துக்கு இடம் கொடுக்காமல் கறாராகக் கடமையாற்றிவருகிறேன். கமிட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதால், வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை” என்று மட்டும் சொன்னார்.
 
கூடுதல் டி.ஜி.பி-யான சீமா அகர்வாலிடம் பேசியபோது, ‘‘புகார் இப்போதுதான் வந்துள்ளது. முறைப்படியான விசாரணையை விரைவில் தொடங்குவோம்’’ என்றார். அவரிடம், ‘‘இதற்கு முன்புகூட, நீங்கள் விசாகா கமிட்டி தலைவராக இருந்து ஒரு எஸ்.பி- மீதான புகாரை விசாரித்தீர் களாமே. அது என்ன ஆனது?’’ என்றோம்.
 
‘‘அந்த விவகாரம் உயர் நீதிமன்ற நிலுவையில் உள்ளது. சம்பந்தப்பட்ட எஸ்.பி., இப்போது சர்வீஸிலேயே இல்லை’’ என்று முடித்துக் கொண்டார் அவர்.
 
பாலியல் புகார்களில் காவல்துறையினர் சிக்குவது புதிதல்ல. ஆனால், உயர் அதிகாரிகள் அளவுக்குச் சிக்கியிருப்பது அதிர்ச்சியின் உச்சம்.
 
 
பெயருக்கு ஒரு கமிட்டி!
 
தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாக கமிட்டியில், அரசு சாரா நபர் யாரும் இல்லை. இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சுகந்தியிடம் கேட்டபோது, ‘‘பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலகத்திலேயே விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அரசு மற்றும் தனியார் என அனைத்து நிறுவனங்களிலும் இந்தக் கமிட்டி அமைக்கப்பட வேண்டும். இதற்குப் பெண் ஒருவர்தான் தலைவராக இருக்க வேண்டும். கமிட்டி உறுப்பினர்களில் சரிபாதி பெண்கள் இருக்க வேண்டும். அரசுசாரா நிறுவனத்தைச் சேர்ந்தவரும் கமிட்டியில் இருக்க வேண்டும். உயர்மட்டத்தில் இருக்கும் பெண் அலுவலர் தொடங்கி, துப்புரவு பணியாற்றும் பெண்கள் உட்பட அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்புதான் விசாகா கமிட்டி. ஆனால், அரசுத்துறையிலேயே இன்னும் பல இடங்களில் இந்த கமிட்டிகள் அமைக்கப்படவில்லை. தற்போது காவல்துறையில் அமைக்கப்பட்டிருக்கும் கமிட்டியில் அரசுசாரா நிறுவனத்தைச் சார்ந்த நபர் யாரும் இல்லை. அப்படிப்பட்டவரை நியமித்தால், எதற்கும் வளைந்து கொடுக்காமல் இருப்பார் என்கிற பயத்திலேயே நியமிக்கவில்லைபோலும்” என்று சொன்னார்.