img/728x90.jpg
கலெக்டரே நேரில் வந்து உதவிய செருப்புத் தைக்கும் தொழிலாளி முனியசாமி இப்போது எப்படி இருக்கிறார்?

கலெக்டரே நேரில் வந்து உதவிய செருப்புத் தைக்கும் தொழிலாளி முனியசாமி இப்போது எப்படி இருக்கிறார்?

களத்தில் இணையதள வாசகர்கள் கரூர் செருப்புத் தைக்கும் தொழிலாளி முனியசாமியை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஓராண்டுக்கு முன்பு கரூர் லைட்ஹவுஸ் பகுதியில் செருப்பு தைத்துக்கொண்டிருந்த இவரின் அல்லல் நிறைந்த வாழ்க்கையைப் பற்றி  களத்தில் இணையதளத்தில் பதிவு செய்திருந்தோம். அந்தச் செய்தியைப் படித்து, அப்போதைய கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ், முனியசாமியின் கடைக்கே வந்து சந்தித்தார். மறுநாள் அவரைக் கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து, 35 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பெட்டி, 20,000 ரூபாய் கலெக்டர் விருப்புரிமை நிதி, முனியசாமியின் மனைவிக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க வழிசெய்தார்.

 
இந்தச் செய்தியையும் பதிவு செய்திருந்தோம். அதைப் படித்த பல வாசகர்கள், `முனியசாமிக்கு நாங்கள் உதவுகிறோம். அவரது வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்புங்கள்' எனக் கோரிக்கை வைத்தனர். வங்கிக் கணக்கு தகவல்களை நாம் அனுப்ப, ஒன்றரை லட்சத்துக்கும் மேல் அவருக்குப் பணம் அனுப்பி உதவினர் வாசகர்கள். அதோடு,கரூரைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வாசகர்கள் முனியசாமிையை நேரில் பார்த்து, `உங்க கதை எங்களை உருக்கிடுச்சுய்யா. இந்தாங்க, எங்களால முடிஞ்ச சின்ன உதவி' என்றபடி கையில் கிடைத்த தொகையை வழங்கிவிட்டுச் சென்றனர்.
 
பலர் அவரை நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச்சென்று, வயிறார சாப்பிட வைத்தனர், இன்னும் சிலர் அவருக்கு நல்ல உடைகள் வாங்கிக் கொடுத்து, அவரை அணிய வைத்து அழகுபார்த்தனர். நெகிழ்ச்சியடைந்த முனியசாமி, உதவிய நல் உள்ளங்களுக்கு மனமார நன்றி தெரிவித்தார். இந்தச் சம்பவம் நடந்து ஓராண்டாகி விட்டது. இப்போது முனியசாமியின் நிலை எப்படி இருக்கிறது  என்பதைத்  தெரிந்துகொள்ள, அவரைப் பார்க்கச் சென்றோம். 
 
அதற்கு முன், முனியசாமியின் கதையைத் தெரிந்துகொள்வது உத்தமம். வறுமையின் விளிம்பில் இருந்த முனியசாமியும், அவரது குடும்பமும் பல வருடங்களாக இரண்டு வேளை மட்டுமே சாப்பிட்டு வந்தனர். அந்த ஏழ்மை நிலைமையிலும் முனியசாமி பள்ளிக்கூடம் போகும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக புத்தகப்பைகளையும், செருப்புகளையும் தைத்து தந்தார். ஏழ்மையிலும் அவருக்கு இருந்த அந்த மகத்தான மனிதாபிமானம்தான் அவருக்கு மலையளவு பாராட்டுகளையும்,உதவிகளையும் பெற்றுத்தந்தது.
 
சரி, இப்போது முனியசாமியின் நிலைமை? அதே லைட்ஹவுஸ் பகுதியில் கலெக்டர் வழங்கிய பெட்டிக்குள், மெஷின் வைத்து செருப்புத் தைக்கிறார். நம்மைக் கண்டதும் பூரிப்படைந்த முனியசாமி, "வாங்கத் தம்பி வாங்க. செத்த இருங்க. ஒரு ஸ்கூல் பையனோட பையைத் தச்சுகிட்டு இருக்கேன். அவன் காலத்தோட பள்ளிக்கூடம் போகணும். அப்புறம் நாம சாவகாசமா பேசலாம்" என்றபடி, கருமமே கண்ணாக இருந்தார். சிறிது நேரத்தில் அந்தக் கிழிந்த பேக்கை தைத்து முடித்து, மாணவரிடம் கொடுத்தார். அவன் கொடுத்த காசை `வேண்டாம் தம்பி’ என மறுத்துவிட்டார். 
 
``கனவு போல இருக்கு தம்பி. கடந்த வருஷம் இந்நேரம் என் நிழலே என்னை மதிக்காது. செருப்புத் தைக்க வர்றவங்கலாம், நான் ஏதோ கள்ளக்கடத்தல் பண்ற மாதிரி என்னைக் கேவலமா பார்ப்பாங்க. சின்ன பசங்ககூட, என்னை மரியாதை இல்லாம பேசுவாங்க. `செருப்பு தச்ச ஆபிரஹாம் லிங்கன் அமெரிக்கவோட ஜனாதிபதி ஆனார்'னு எல்லாரும் பெருமையா பேசுவாங்க. ஆனா, நிஜத்துல என்னை மாதிரி செருப்பு தைக்கிற ஆளுங்கள வேண்டா வெறுப்பா பார்ப்பாங்க.  அப்போ, என் குடும்பத்துல என் மனைவிக்கு உடம்பு சரியில்லாம இருந்துச்சு. பசங்களுக்கு சரியான வேலை அமையல. மக கல்யாணத்துக்கு வாங்கின 2 லட்சம் கடன் கழுத்தை நெருக்குச்சு.
 
எனக்கும் அடிக்கடி உடம்புல பிரச்னை இருந்துச்சு. சோத்துக்கே வருமானம் கிடைக்காத நிலைமைன்னு கஷ்டம் மட்டுமே என்னைச் சுத்தி இருந்துச்சு. முதியோர் உதவித்தொகை கேட்டு கலெக்டர் ஆபீஸுக்கு 500 தடவை அலைஞ்சிருப்பேன். ஒரு நாயை அடிச்சு துரத்துறாப்ல என்னை விரட்டி அடிப்பாங்க. `பேசாம குடும்பத்தோட செத்துரலாமா'னு இருந்தப்பதான், என்னைப் பத்தி நீங்க எழுதுனீங்க.
 
அதுக்குப் பிறகு கனவு போல பல விஷயம் நடந்துச்சு. கலெக்டரே நேரா, என் கடைக்கு வந்து ஆறுதல் சொன்னது; உதவுனது. பல ஆயிரம் வாசகர்கள் எனக்கு பணம் அனுப்பி, என் கடனை அடைக்க வச்சது, என் மனைவிக்கு நல்ல வைத்தியம் பார்க்க வச்சது, பல நூறு பேர் நேரா வந்து எனக்கு உதவுனது, அதுவரை என்னை மனுஷனா மதிக்காத பலரும் என்னை மதிச்சது, கரூர்ல எங்க போனாலும் மரியாதை கிடைச்சதுன்னு நான் இந்த ஒரு வருஷத்துல அடைஞ்ச சந்தோஷம் என் வாழ்நாளைக்கும் பார்க்காதது.
 
இன்னமும் முகம் தெரியாத பிள்ளைங்க என்னை அப்பா, தாத்தான்னு உறவுமுறை சொல்லி கூப்பிட்டு நலம் விசாரிக்கிறாங்க. உதவியும் பண்றாங்க. இப்போ எனக்கு 66 வயசாவுது தம்பி. 65 வயசு வரை அர்த்தம் இல்லாம வாழ்ந்துட்டோமேன்னு தோணுச்சு. ஆனா, உங்க பத்திரிகை மூலமா என் வாழ்க்கையை அர்த்தமாக்கிட்டீங்க. பணம், காசு பெரிசில்லை தம்பி. கஷ்டத்துல கிடக்குறப்ப நாலு பேர் ஆறுதல் சொன்னா, அதுதான் ஒருத்தனை தெம்பாக்கும். அந்தத் தெம்பை பல பெயர் தெரியாத மனிதர்கள் எனக்கு இன்னைக்கும் கொடுத்திட்டிருக்காங்க.
 
 
இன்னைக்கும் எங்க கஷ்டம் பெருசா ஒழியலை. கஷ்ட ஜீவனம்தான். ஆனா, ஏதோ அர்த்தமான வாழ்க்கை வாழ்றோம்ன்ற திருப்தி இருக்கு. பள்ளிக்கூட பிள்ளைகளுக்கு தினமும் இருபது ஜோடி செருப்பு, பைகளை இலவசமா தச்சு தர்றேன். கரூர்ல யாருக்கு செருப்பு கிழிஞ்சாலும், வண்டியில பெட்ரோலைப் போட்டுக்கிட்டு எங்கிட்டதான் வந்து தைக்க கொடுக்கிறாங்க. அன்பா விசாரிக்கிறாங்க. கேட்குற கூலியைவிட அதிகமா கொடுக்கிறாங்க. பலபேர் டீ வாங்கி கொடுக்கிறாங்க. அதுபோதும் தம்பி. எல்லா கஷ்டங்களையும் சடார்னு கடந்துருவேன். அந்தத் தெம்புல இன்னும் 30 வருஷம் இறுக்கிப் பிடிச்சு வாழ்ந்துருவேன்" என முடித்தார்.
 
அப்போது அங்கே அன்பு, நம்பிக்கை எல்லாம் ஊதுபத்திப் புகைபோல படர்கிறது. முனியசாமியின் கதை எப்படி வாழ வேண்டும் என்பதற்கான பாடம்!