img/728x90.jpg
இந்தியாவிலேயே கொடுமையான சட்டத்தில் திருமுருகன் காந்தி கைது  - வழக்கறிஞர்களின் ஆதங்கம்

இந்தியாவிலேயே கொடுமையான சட்டத்தில் திருமுருகன் காந்தி கைது - வழக்கறிஞர்களின் ஆதங்கம்

 `இந்தியாவிலேயே கொடுமையான சட்டத்தில் திருமுருகன் காந்தி கைது' - வழக்கறிஞர்களின் ஆதங்கம்

 
``இந்தச் சட்டம் திருமுருகன் காந்தி மீது போடப்பட்டது சரியா தவறாங்கிறது ஒருபுறம் இருக்கட்டும். இந்தச் சட்டமே தவறானது. அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது."
`இந்தியாவிலேயே கொடுமையான சட்டத்தில் திருமுருகன் காந்தி கைது' - வழக்கறிஞர்களின் ஆதங்கம்
`சிறுநீர் கழிக்கணும்னு மூணு மணி நேரமா கேட்டுட்டு இருக்கேன் நிறுத்தவே இல்ல' என ஆதங்கப்பட்டு திருமுருகன் காந்தி பேசிய காணொலிக் காட்சி நம் முன் பல கேள்விகளை வைத்திருக்கின்றன. அவர் கைது செய்யப்படுவது ஒரு வாடிக்கையான செய்திதான் என்றாலும், இம்முறை அவர் கைது செய்யப்பட்டிருப்பது, சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ். வழக்கறிஞர்களின் பேச்சு மொழியில் இதை `யுஏபிஏ' என்கிறார்கள். (UAPA- Unlawful activities prevention act) 
 
திருமுருகன்காந்தி
 
இந்தச் சட்டத்தில் கைது செய்யப்படும் அளவுக்கு திருமுருகன் காந்தி என்ன செய்தார். இந்தச் சட்டத்தில் இதற்குமுன் கைது செய்யப்பட்டவர்கள் இருக்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக சில வழக்கறிஞர்களுடன் பேசினேன். அவர்கள் சொன்ன பதில்கள் பெரும் அதிர்ச்சியையும், நம் கருத்துச் சுதந்திரத்தின் மீது அவநம்பிக்கையையும் கொடுப்பதாக இருந்தன. அவர்களிடம் பேசியதிலிருந்து...
 
வழக்கறிஞர் கேசவன்
 
வழக்கறிஞர் கேசவன்``இந்தச் சட்டம் திருமுருகன் காந்தி மீது போடப்பட்டது சரியா தவறாங்கிறது ஒருபுறம் இருக்கட்டும். இந்தச் சட்டமே தவறானது. அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது. முதல்ல இதுபோல மோசமான சட்டங்கள் உருவான வரலாற்றுப் பின்னணியை உங்களுக்குச் சொல்றேன். பிரிட்டிஷ்காரங்க நம்ம நாட்டில ஆட்சி செஞ்சபோது `எங்களுக்குச் சுதந்திரம் வேணும்'னு போராடுற இந்தியர்களை ரொம்ப உக்கிரமா ஒடுக்க முடிவு பண்ணாங்க. ரௌலட் என்கிறவரோட தலைமையில் ஒரு குழு அமைச்சு சட்டம் வரையறுத்தாங்க. அதுதான் ரௌலட் சட்டம். அந்த ரௌலட் சட்டத்தின்படி, பிரிட்டிஷ் அரசாங்கம் யாரை தீவிரவாதின்னு சந்தேகிக்கிறதோ அவங்களை பிணையில்லாமல் கைது செய்யலாம். நீதிமன்ற வழக்கு விசாரணையில்லாம ரெண்டு வருஷத்துக்கு அவங்களைச் சிறைப்படுத்தலாம். மேல்முறையீடுக்கான வாய்ப்பே இல்லை.
 
இருப்பதிலேயே ரொம்பக் கொடுமையான சட்டம் இது. இந்தச் சட்டத்தை எதிர்த்து இந்திய மக்கள் மிகப்பெரிய போராட்டம், ஊர்வலம், கண்டனக் கூட்டமெல்லாம் நடத்துனாங்க. அப்படியொரு கூட்டத்துல நடந்த துப்பாக்கிச் சூடுதான் `ஜாலியன் வாலாபாக்' படுகொலைகள். அவ்வளவு மோசமான சட்டம். இந்தியா சுதந்திரம் அடைஞ்ச பிறகு நம்முடைய அரசும் கிட்டத்தட்ட இதே மாதிரி சில சட்டங்களைக் கொண்டு வந்தது. உதாரணத்துக்கு `மிசா, தடா, பொடா'ன்னு சொல்லலாம். மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இதைக் கடுமையா எதிர்த்ததால இந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. ஆனா, அதுல இன்னும் வழக்கத்துல இருக்கிற சட்டம்தான் இந்த UAPA சட்டம். பயங்கரவாதிகள், குண்டுவெடிப்பு நிகழ்த்துகிறவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சார்ந்தவர்கள், நாட்டில் நாசகார வேலைகளைச் செய்ய இருப்பவர்கள்னு இவங்களையெல்லாம் அந்தச் சட்டத்துல கைது செய்வாங்க. அப்படியொரு சட்டத்தின்கீழ்தான் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டிருக்காரு. இப்போ நீங்க சொல்லுங்க, திருமுருகன் காந்தி அப்படியொரு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டியவரா. இந்தியக் குடிமகனுக்குப் பேச்சுரிமையும், எழுத்துரிமையும் இருக்குன்னு உச்சநீதிமன்றம் நிறைய தீர்ப்புகள் சொல்லி இருக்கு. ஆனா, அரசாங்கம் அதைப் பொருட்படுத்துறதா தெரியலை. மீண்டும் சொல்றேன், இது ரௌலட் சட்டமேதான். என்ன வித்தியாசம் பிரிட்டிஷ் அரசு செய்ததை இம்முறை இந்திய அரசாங்கமே செய்யுது."
 
வழக்கறிஞர் ஜீவானந்தம்
 
வழக்கறிஞர் ஜீவானந்தம்``ஒரு தீவிரவாதியாக திருமுருகன் காந்தியை அடையாளப்படுத்த வேண்டுமென்பதற்காகவே அவரை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார்கள். இந்தச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுபவர்களுக்குப் பிணை சுலபத்தில் கிடைக்காது. வெளியே வருவதற்குக் குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆகும். சொல்லப்போனால் பல வருடங்களுக்குச் சிறையிலேயே வைக்கக்கூடிய அபாயம் நிறைந்த சட்டம் இது. 1967ல் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம்தான் இப்போதைக்கு இந்திய அளவில் கொடுமையான சட்டம். தமிழ்நாட்டில் மட்டும் 46 பேர் ஐந்து வருடங்களாகச் சிறையில் இருக்கிறார்கள். மாவோயிஸ்ட்கள் இந்தச் சட்டத்தின் கீழ் பெருமளவு கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். மாவோயிஸ்ட்களுக்கு, அடிப்படை உரிமையான சட்ட உதவி செய்த மதுரை வழக்கறிஞர் முருகன் கடந்த இருபது மாதங்களாக வெளியே வரமுடியாமல் சிறையில் இருக்கிறார். அவரும் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவரே. இந்தச் சட்டம் பெரும்பாலும் தவறாகத்தான் பயன்படுத்தப்படுகிறது. அரசாங்கத்துக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களை பழிவாங்குவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. தற்போது, திருமுருகன் காந்தி அதற்குப் பலியாகி இருக்கிறார்."
 
மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு
 
வழக்கறிஞர் சங்கரசுப்பு
 
``இந்தச் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டுமென்றால் அதுக்குன்னு, சில வரையறைகள் இருக்கு. அதற்கான எந்தவித அடிப்படையும் இல்லாம திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டிருக்காரு. அவருடைய `மே பதினேழு' இயக்கம் தடைசெய்யப்பட்டதல்ல. எந்தத் தடை செய்யப்பட்ட இயக்கத்தில் அவர் உறுப்பினரும் அல்ல. ஒரு கூட்டத்தில் பேசியதற்காக `UAPA'வின் கீழ் கைது செய்யப்படுகிறார். நம் கருத்துரிமைக்கு நாடு வழங்குகிற பாதுகாப்பு இதுதான்.
 
மக்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை உணர்ந்து போராட ஆரம்பிச்சுட்டாங்க. அது அரசாங்கத்துக்குப் பிடிக்கல. திருமுருகன் காந்தியை ரொம்ப நாள் சிறையில் வெச்சு, அவரை அல்லல் பட வைக்கணுங்கிறதுதான் அரசாங்கத்தின் நோக்கம். இனி போராட வருபவர்களுக்குப் பெரிய அச்சுறுத்தலை உண்டு பண்ணவே இதைச் செய்திருக்காங்க." என்றார்