img/728x90.jpg
வளர்மதிக்கு பல்ஸ் ரத்த அழுத்தம் குறைந்துவருகிறது

வளர்மதிக்கு பல்ஸ் ரத்த அழுத்தம் குறைந்துவருகிறது

 "வளர்மதி சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். இதையடுத்து, அவருக்கு பல்ஸ், ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து புழல் சிறைக்குச் சென்றவர், தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்துவருகிறார்'' என்றார் ஜீவானந்தம்.

 
``வளர்மதிக்கு பல்ஸ்... ரத்த அழுத்தம் குறைந்துவருகிறது!
 
கேரளாவில் பெய்த கனமழையாலும், அதனால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் அங்குள்ள மக்கள் கடும் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த மக்களின் துயரங்களைத் துடைக்கப் பலரும் ஆதரவுக்கரங்களை நீட்டி வருகின்றனர். இந்தச் சூழலில், சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவியும், சமூக ஆர்வலருமான வளர்மதி கேரள வெள்ளத்துக்கு உதவி செய்வதற்காகச் சென்னையில் தன்னுடைய குழுவைச் சேர்ந்தவர்களுடன் நிதி திரட்டியுள்ளார். வளர்மதியையும், அவருடைய குழுவினரையும் கியூபிரிவு போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி சென்னை சென்ட்ரல் அருகே அந்தக் குழுவினர் நிதி திரட்டிக் கொண்டிருந்தனர்.
 
அப்போது அங்குவந்த நபர் ஒருவர், வளர்மதியைப் புகைப்படம் எடுத்துள்ளார். அதைக் கண்ட வளர்மதி, ``எதற்காகப் புகைப்படம் எடுக்கிறீர்கள்... நீங்கள் யார்'' எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், ``நான் யாராக இருந்தால் உனக்கென்ன...'' என்று பதிலளித்துள்ளார். அதற்கு வளர்மதி, ``தெரியாத நபர்கள் என்னைப் புகைப்படம் எடுப்பதை அனுமதிக்க மாட்டேன். யார் நீங்கள்'' என அவர் மீண்டும் கேட்டுள்ளார். இந்த நிலையில், அந்த நபர் திடீரென வளர்மதியிடம் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ந்துபோன வளர்மதி, கூச்சலிட்டுள்ளார். நிலைமையை உணர்ந்த அங்குள்ளவர்கள், சம்பந்தப்பட்ட நபரைத் தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பியோடிய அந்த நபர் அருகிலிருந்த காவல் நிலையத்துக்குள் புகுந்துள்ளார். ஆனால், அவர்களும் விடாமல் துரத்திச் சென்று அந்தக் காவல் நிலையத்துக்கு முன்பாக நின்று கோஷம் எழுப்பியுள்ளனர். 
 
வளர்மதி கைது 
இதையறிந்து வெளியே வந்த காவலர்கள், ``போலீஸாரையே அடிப்பீர்களா'' எனக் கேட்டுள்ளனர். அப்போதுதான் வளர்மதியிடம் அநாகரிகமாக நடந்துகொண்டவர் நுண்ணறிவு போலீஸ் என்பதும் அவருடைய பெயர் ஸ்டாலின் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கு கூடியவர்ளை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்துள்ளனர். அதோடு, வளர்மதி உட்பட ஆறு பேரையும் கைது செய்துள்ளனர். பின்னர் வளர்மதியைக் காவல் வேனில்  ஏற்றிய போலீஸாருடன், எந்தவொரு பெண் போலீஸாரும் பாதுகாப்புக்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்தப் பிரச்னை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
 
இதுகுறித்து பேசிய வளர்மதியின் வழக்கறிஞர் ஜீவானந்தம், ``வலுக்கட்டாயமாக வளர்மதியை வேனில் ஏற்றியதோடு, அவரைப் பாலியல் ரீதியாகவும் போலீஸார் துன்புறுத்தியுள்ளனர். குறிப்பாக, பெரியமேடு காவல் ஆய்வாளர் சிவராஜ், வளர்மதியைத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் அவர், வளர்மதி வேனைவிட்டு இறங்கிவிடாதவண்ணம் அவரை இறுக்கமாகப் பிடித்திருந்திருக்கிறார். இது, பாலியல் துன்புறுத்தலாகும். இதையடுத்து,`இப்படித் தகாத செயல்பாடுகளில் ஈடுபட்ட காவல் துறையைச் சேர்ந்த ஸ்டாலின், சிவராஜ் ஆகியோர்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உயிர் போனாலும் உணவருந்த மாட்டேன்' என வளர்மதி சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். இதையடுத்து, அவருக்கு பல்ஸ், ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து புழல் சிறைக்குச் சென்றவர், தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்துவருகிறார்'' என்றார், மிகத் தெளிவாக.  
 
வழக்கறிஞர் ஜீவானந்தம் 
 
பிரச்னை குறித்து வளர்மதியின் தந்தை மாதையன், ``என் மகள் எந்தத் தவறும் செய்ய மாட்டாள் என்பது எனக்குத் தெரியும். துணிச்சலாகப்  பேசுவாளே தவிர, வேறு எந்தத் தவறும் செய்யமாட்டாள். இந்தச் சமூகத்துக்காகத் துணிச்சலாக, தைரியமாகப் பேசுவது தவறா. அதற்காக, காவல் துறையைச் சேர்ந்த ஓர் அதிகாரி, என் மகளிடம் அநாகரிகமான முறையில் நடந்திருக்கிறார். இது, எனக்கு மிகவும் கவலையளிக்கிறது. இந்தச் செயலை, அவர்கள் வீட்டுப் பெண்ணுக்குச் செய்திருந்தால் சும்மா விட்டிருப்பார்களா. அதிகாரம் இருந்தால் போதும்... யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதைக் காட்டுகிறது போலீஸாரின் இந்த நடவடிக்கை. என் மகளிடம் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட போலீஸார்மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார், கண்ணீருடன்.