img/728x90.jpg
அந்த பத்துப் பேரில் ஒரு பெண்தான் கொலைசெய்தவர் - மந்திரவாதி பாபு பாய் வழக்கில் அடுத்த திருப்பம்!

அந்த பத்துப் பேரில் ஒரு பெண்தான் கொலைசெய்தவர் - மந்திரவாதி பாபு பாய் வழக்கில் அடுத்த திருப்பம்!

 சென்னை திருவல்லிக்கேணி மந்திரவாதி கொலையில், பர்தா அணிந்த பெண் ஒருவர்தான் மர்மப் பொருளை தூக்கி எறிந்துள்ளார். அவருக்கும் மந்திரவாதிக்கும் உள்ள முன்விரோதம்குறித்து விசாரணை நடந்துவருகிறது. 

 
சென்னை வண்ணாரப்பேட்டை பென்சில் நகரைச் சேர்ந்த சையத் பஸ்ருதீன் என்கிற பாபுபாய் என்பவருக்கு வயது 62. இவர், திருவல்லிக்கேணியில் உள்ள வணிகவளாகத்தில் அறை ஒன்றை எடுத்து, 40 ஆண்டுகளாக ஓதுதல் வேலை செய்துவந்தார். 'அவரிடம் சென்றால், எந்தப் பிரச்னையும் சரியாகிவிடும்' என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டது. இதனால், பாபு பாயைத் தேடி தினமும் ஏராளமானவர்கள் வரத்தொடங்கினர். தன்னிடம் வருபவர்களின் பிரச்னைகளைப் பொறுமையாகக் கேட்பார் பாபு பாய். பிறகு, அதற்கேற்ப மந்திரங்களைச் செய்வதோடு, ஓதவும் செய்வார். இந்தத் தொழிலில் அவருக்கு நீண்ட காலம் அனுபவம் இருந்ததால், அவர் சொல்வதை அப்படியே  நம்பினர். யாரிடமும் கட்டாயப்படுத்தி அவர் பணம் வசூலிப்பதில்லை. கொடுப்பதை வாங்கிக்கொள்வார். இதனால் குடும்பத்தில், வியாபாரத்தில், ஏன் உடல் நலம் சரியில்லை என்பது போன்ற அனைத்துக்கும் தீர்வு கண்ட பாபு பாயைத் தேடி, பர்தா அணிந்த 10 பெண்கள் வந்திருந்தனர். அவர்களில் ஒவ்வொருவரிடமும் பிரச்னைகளைக் கேட்ட பாபு பாய், அதற்கேற்ப தீர்வுகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். 
 
இந்தச் சமயத்தில்தான் அந்தச் சம்பவம் நடந்தது. பர்தா அணிந்திருந்த பெண்களின் கூட்டத்திலிருந்து ஏதோ ஒரு பொருள் பாபு பாய் மீது தூக்கி வீசப்பட்டது. அது என்ன என்று அவர் சுதாரிப்பதற்குள், திடீரென தீப்பிடித்தது. இதனால் அவர், அதிர்ச்சியடைந்தார். கண் இமைக்கும் நேரத்தில் பாபு பாயின் உடல் முழுவதும் தீ பரவத் தொடங்கியது. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். சிலர், பாபு பாயைக் காப்பாற்ற முயன்றனர். தப்பி ஓடிய கூட்டத்தினரோடு கலந்த பர்தா அணிந்த பெண், அங்கிருந்து எஸ்கேப் ஆனார். இந்தச் சம்பவம் தீயணைப்பு நிலையத்துக்கும் போலீஸாருக்கும் உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது. போலீஸாரும் தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்தனர். அதற்குள் பாபு பாயின் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டு, அவர் உயிருக்குப் போராடினார். உடனே அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பாபு பாய் இறந்தார். 
 
இதுகுறித்து திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம், இன்ஸ்பெக்டர மோகன்தாஸ் ஆகியோர் விசாரித்துவருகின்றனர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். அதில், தீ பிடித்து எரியும் காட்சிகளும், பர்தா அணிந்த பெண்கள் மற்றும் பொது மக்கள், அந்த வணிக வளாகத்திலிருந்து ஓடிவரும் காட்சிகளும் இருந்தன. அதில் யார், பாபு பாய் மீது எளிதில் தீப்பிடித்து எரியும் மர்மப் பொருளை தூக்கி வீசியது என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
 கொலை செய்யப்பட்ட சையத் பஸ்ருதீன் என்கிற பாபு பாய்   
 
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சையத் பஸ்ருதீன், பில்லி, சூனியம், ஓதுதல் என்ற வேலையைச் செய்துவந்தார். அவர் தங்கியிருந்த அறையில் இருந்தவை தீயில் எரிந்துவிட்டன. இதனால், அறையிலிருந்து எங்களுக்கு எந்தவித தடயமும் சிக்கவில்லை. அவர்மீது தூக்கி எறியப்பட்ட பொருள்குறித்து ஆய்வு நடந்துவருகிறது. அது என்ன என்று தெரிந்தால், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும். சிசிடிவி கேமரா பதிவிலும் முக்கியத் தகவல்கள் கிடைக்கவில்லை. 
 
அந்தப் பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, பர்தா அணிந்த 10 பெண்கள் சம்பவம் நடக்கும்போது இருந்துள்ளனர். அவர்கள் யார் என்று விசாரித்துவருகிறோம். அதில்  நான்கு பேர் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன. அவர்களிடம் விசாரித்தபோது, பின்னால் இருந்துதான் அந்த மர்மப் பொருள் தூக்கி வீசப்பட்டது என்று தெரிவித்துள்ளனர். இதனால், அந்த மர்மப் பொருளைத் தூக்கி எறிந்த பெண்ணுக்கும் பாபு பாய்க்கும் உள்ள முன்விரோதம்குறித்து விசாரித்துவருகிறோம். 
 
பாபு பாய், செய்துவந்த தொழில் என்பது சவால்கள் நிறைந்தவை. இதனால், இந்த வழக்கை கவனமாக விசாரித்துவருகிறோம். பாபு பாயைத் தேடிவந்த அவரின் வாடிக்கையாளர்களிடம் விசாரித்துள்ளோம். அதோடு, அவரின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதில் கிடைத்த தகவலின்படி அடுத்தகட்ட விசாரணை நடந்துவருகிறது. விரைவில் பாபு பாயைக்  
கொலை செய்த  பெண்ணைப் பிடித்துவிடுவோம்" என்றனர்.