img/728x90.jpg
அமித் ஷா அழைப்பு அழகிரி அதிரடி  பா.ஜ.க எதிர்ப்பு!   ஸ்டாலினை நெகிழ வைத்த காங்கிரஸ்

அமித் ஷா அழைப்பு அழகிரி அதிரடி பா.ஜ.க எதிர்ப்பு! ஸ்டாலினை நெகிழ வைத்த காங்கிரஸ்

 அழகிரியால் எந்தப் பிரச்னையும் இல்லை' எனக் கூறியபோது, மிகுந்த உற்சாகத்துடன் அந்தக் கருத்துகளை வரவேற்றிருக்கிறார் ஸ்டாலின். 

அமித் ஷா அழைப்பு; அழகிரி அதிரடி; பா.ஜ.க எதிர்ப்பு! - ஸ்டாலினை நெகிழ வைத்த காங்கிரஸ் #VikatanExclusive
பா.ஜ.க எதிர்ப்பு நிலையில் தி.மு.க உறுதியாக இருப்பதை வரவேற்றுள்ளனர் காங்கிரஸ் நிர்வாகிகள். `அழகிரியின் பின்னால் ஒரு பொதுக்குழு உறுப்பினர்கூட இல்லை. அவரால் எந்த சலசலப்பையும் உருவாக்கிவிட முடியாது' என ஸ்டாலினிடம் விளக்கிக் கூறியுள்ளனர் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள். 
 
தி.மு.க-வின் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து கூறி வருகின்றனர் அரசியல் கட்சித் தலைவர்கள். குறிப்பாக, பா.ஜ.க-வுக்கு எதிராக அவர் எடுத்த நிலைப்பாட்டை ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளனர் காங்கிரஸ் நிர்வாகிகள். `இதுநாள் வரையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்தவிதக் கருத்தும் கூறாமல் அமைதியாக இருந்தார் ஸ்டாலின். இதனால், பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி அமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக பொதுக்குழுவில் உறுதியாகப் பேசிவிட்டார் ஸ்டாலின்' என நெகிழ்கின்றனர் காங்கிரஸ் வட்டாரத்தில். இந்நிலையில், புதிய தலைவரான ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க நேற்று அறிவாலயம் சென்றார் காங்கிரஸ் முன்னாள் எம்.பி பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா உள்ளிட்டோர். இந்த நிகழ்வில் அரசியல் தொடர்பாக சில விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. 
 
அப்போது ஸ்டாலினிடம் பேசிய கோபண்ணா, `1967-ல் அண்ணா மறைவுக்குப் பிறகு தி.மு.க-வின் புதிய தலைவராக கருணாநிதி முன்னிறுத்தப்பட்டார். அப்போது அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்வதில் கட்சிக்குள் சில பிரச்னைகள் எழுந்தன. இதன்பிறகு ஏற்பட்ட சமரச உடன்படிக்கையின் அடிப்படையில்தான் அவர் தலைவரானார். பொதுச் செயலாளராக நாவலர் நெடுஞ்செழியனும் பொருளாளராக எம்.ஜி.ஆரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அப்படி ஒரு சூழல் இன்று இல்லை. ஒட்டுமொத்த கட்சியும் உங்கள் பின்னால் இருக்கிறது. ஒரு பொதுக்குழு உறுப்பினர்கூட அழகிரியின் பக்கம் செல்லவில்லை. யாரும் அவரை ஆதரிக்கவில்லை. அரசியலில் அவருக்கு எந்த ஆதரவும் இல்லை. அழகிரியால் எந்தப் பிரச்னையும் இல்லை' என விவரித்தபோது, மிகுந்த உற்சாகத்துடன் அந்தக் கருத்துகளை வரவேற்றிருக்கிறார் ஸ்டாலின். 
 
அழகிரிதி.மு.க-வின் பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாட்டுக்குப் பிறகு, `தமிழக காங்கிரஸ் தலைமையிலும் மாற்றம் வர வேண்டும்' எனப் பேசத் தொடங்கியுள்ளனர் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில். இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர், ``நாடாளுமன்றத் தேர்தலில் சீட் பங்கீடு உட்பட பல விஷயங்களை விவாதிப்பதற்குத் தி.மு.க தலைமையிடம் நெருக்கம் காட்டக் கூடிய மாநிலத் தலைமை தேவை. தற்போதுள்ள தலைமைக்கு எதிராக டெல்லி மேலிடத்தில் ஏராளமான புகார்கள் சென்றுள்ளன. இன்னும் அ.தி.மு.க மனநிலையோடு செயல்படக் கூடிய நிர்வாகிகளும் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கிறார்கள். இவர்களுடன் அமர்ந்து கூட்டணி, இடப்பங்கீடு தொடர்பாக விவாதிப்பதற்கு தி.மு.கவில் உள்ள சிலர் தயாராக இல்லை. எனவே, வரக்கூடிய நாள்களில் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் மாற்றம் வரும் என உறுதியாக எதிர்பார்க்கிறோம்" என்றவர், 
 
``அமித் ஷாவை இரங்கல் கூட்டத்துக்குத் தி.மு.க அழைத்தது என்பது அரசியல் நாகரிகம். ஆனால், இதையே காரணமாக வைத்துக்கொண்டு, பா.ஜ.க-வுடன் தி.மு.க நெருங்கிப் போவது போன்ற செய்திகள் வெளியாகின. தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியைத் தடுக்க நினைக்கும் வகையில் இந்தத் தகவல்கள் பெருமளவில் பரவின. இதற்கு நாங்கள் எந்தவித எதிர்வினையும் காட்டாமல் மௌனமாக இருந்தோம். பொதுக்குழுவில் மோடி அரசுக்கு எதிராக உறுதியாகப் பேசிவிட்டார் ஸ்டாலின். இதன் பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையும், பா.ஜ.க. எதிர்ப்பை வலுவாகச் சுட்டிக் காட்டியது. மதச்சார்பற்ற தன்மை என்பது தி.மு.கவின் அடிப்படையான கொள்கை. ஒருமுறை பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததுகூட, தி.மு.கவின் கொள்கைகளை விட்டுக் கொடுத்து அல்ல. 
 
பா.ஜ.க-வின் மூன்று ஜீவாதாரக் கொள்கையாக இருந்த அயோத்தி ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்வது, பொது சிவில் சட்டம் ஆகியவற்றைப் பற்றிப் பேச மாட்டோம் என உறுதியளித்ததால்தான், அந்த அணியில் தி.மு.க. இணைந்தது. உண்மையில், தி.மு.க-வுக்கு இயல்பான கூட்டணி என்பது காங்கிரஸ்தான். தமிழ்நாட்டில் தற்போது பா.ஜ.கவுக்கு எதிரான கோபம் இருக்கிறது. அவர்களுடன் கூட்டணி வைக்கப் பலரும் தயங்குகிறபோது, `தி.மு.க கூட்டணி அமைக்கும்' என எந்த அடிப்படையில் சிலர் முடிவு செய்தார்கள் எனத் தெரியவில்லை. அ.தி.மு.க பிளவுபட்டுள்ள சூழலிலும் இந்த அரசு மீது மக்களுக்கு உள்ள எதிர்ப்புகளும் எங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். இதைக் குறிப்பிட்டபோது மிகுந்த உற்சாகத்தோடு ஏற்றுக் கொண்டார் ஸ்டாலின்" என்றார் விரிவாக.