• :
  • :
களத்தில்

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்

 மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்: குரோம்பேட்டை பாலத்தில் விபத்து: 40 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர் பலி

 
 
குரோம்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த இளைஞர்கள் வேகமாக மேம்பாலத்தில் ஏறும்போது ஏற்பட்ட விபத்தில் பாலத்தின் மேலிருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழந்தார். ஓட்டியவர் காயமடைந்தார். உயிரிழந்தவர் பையிலிருந்து கஞ்சாவை போலீஸார் கைப்பற்றினர்.
 
சென்னை பல்லாவரம் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் குரோம்பேட்டை எம்.ஐ.டி மேம்பாலத்தில் இன்று காலை 10 மணியளவில் விபத்து ஒன்று நிகழ்ந்தது. தாம்பரத்திலிருந்து பல்லாவரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் இரண்டு இளைஞர்கள் வேகமாக வந்துள்ளனர். பின்னால் அமர்ந்திருந்தவர் முதுகில் தோல் பை ஒன்றை மாட்டியிருந்துள்ளார்.
 
மேம்பாலத்தின் மீது ஏறிய அவர்கள் ரவுண்டானாவை சுற்றி வலது புறம் திரும்பி அஸ்தினாபுரம் செல்ல முயன்றபோது மோட்டார் பைக் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மேம்பாலத்தின் தடுப்பில் மோதியுள்ளனர்.
 
வேகமாக வந்து மோதியதால் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டார். தூக்கி வீசப்பட்ட அந்த இளைஞர் மேம்பாலத்தின் மேலிருந்து சுமார் 40 அடி உயரத்திலிருந்து கீழே சாலையில் விழுந்து உயிரிழந்தார். இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் அலறினர். மேம்பாலத்தின் மேலே மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த இளைஞர் காயத்துடன் கிடந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
விபத்து குறித்து தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் கீழே விழுந்து உயிரிழந்த இளைஞர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இளைஞர் முதுகில் மாட்டியிருந்த பையில் கால் கிலோ கஞ்சா இருந்தது.
 
மேலும் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் விஜயபிரகாஷ் (18) என தெரிய வந்தது. மோட்டார் பைக்கை ஓட்டிவந்தவர் பெயர் மதிவாணன் என தெரியவந்தது. இருவரும் அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் விபத்து நடந்த போது இருவரும் கஞ்சா போதையில் இருந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.