img/728x90.jpg
சொத்துக்குவிப்பு வழக்கு நெருக்கடியில் ஓ.பன்னீர்செவல்வம்

சொத்துக்குவிப்பு வழக்கு நெருக்கடியில் ஓ.பன்னீர்செவல்வம்

 அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கி இருப்பதால் அவர் நெருக்கடியில் சிக்கி இருக்கிறார். இந்த சொத்துக்குவிப்பு வழக்கைத் தி.மு.க தலைமை உன்னிப்பாகக் கவனித்து வருவதால், உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தங்களது விசாரணையைத் தொடங்கி இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றமும் நேரடியாகக் கண்காணித்து வருகிறது. 

 
கடந்த 2001 முதல் 2006-ம் ஆண்டு வரையிலான காலத்தில், ஊழல் வழக்கில் ஜெயலலிதா தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் சிறிது காலம் முதல்வராகவும், அமைச்சராகவும் ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்தபோது வருவாய்க்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்குச் சொத்துகள் குவித்ததாக, அவர் மீது 2006-ம் ஆண்டு, தி.மு.க ஆட்சியின்போது வழக்குத் தொடரப்பட்டது. தனக்கு எதிரான குற்றச்சாட்டு பொய்யானது என்றும், அந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம் மனு செய்வார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 'குற்றவியல் நடைமுறைச்சட்டம் 173 (8)-வது பிரிவின் கீழ்' தன் மீதான வழக்கை மறுவிசாரணை செய்யும்படி, தேனி நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனுத்தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து ஓ.பி.எஸ்-க்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை மறுவிசாரணை செய்ய தேனி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை, சிறப்பு நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. அதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை சிவகங்கை நீதிமன்றத்துக்கு மாற்றும்படி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.  இப்படி, சட்ட நிபுணர்களின் நுணுக்கங்கள் அடிப்படையில் இவற்றையெல்லாம் சாதித்துக்கொண்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக, லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்ற குற்றச்சாட்டு அப்போது பரவலாக எழுந்தது. அதிலும், 'ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக வழக்குப் போட்ட தி.மு.க அரசாங்கமே அதைப்பற்றிக் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டது என்பதுதான் உச்சக்கட்ட வேதனை' என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கடுமையாகக் குற்றம்சாட்டினர்.
 
இந்த நிலையில் 2011-ல் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு, ஓ.பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து மறுவிசாரணையில் இறங்கியது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்த லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை போலீஸார், ''அந்தக் குற்றச்சாட்டுகள் எதற்கும் ஆதாரம் இல்லை'' என்று தெரிவித்து, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். 'ஓ.பன்னீர்செல்வம் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்ததற்கு ஆதாரம் இருக்கிறது' என்று தி.மு.க ஆட்சியில் சொன்ன, அதே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறைதான், பின்னர் வந்த அ.தி.மு.க ஆட்சியில் 'அந்தர் பல்டி' அடித்து 'ஊழலுக்கு ஆதாரம் இல்லை' என்று அறிக்கை கொடுத்தது. இதை ஏற்றுக்கொண்ட, சிவகங்கை முதன்மை நீதிமன்றம், 3.12.2012 அன்று பன்னீர்செல்வம் தரப்பை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. 
 
இந்தநிலையில், தி.மு.க அமைப்புச் செயலாளரும், எம்.பி-யுமான ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்த மனுவில், ''2016-ம் ஆண்டு தேர்தலின்போது, ஓ.பன்னீர்செல்வம் தன் வருமானத்தைக் குறைவாகத் தெரிவித்துள்ளார். பெரியகுளத்தில் தனக்குள்ள விவசாய நிலங்களையும், பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள வீட்டின் சொத்து மதிப்புகளையும் அவர் மறைத்துள்ளார். வருமானமே இல்லாத குடும்பத் தலைவியான அவரின் மனைவி விஜயலட்சுமிக்கு ரூ. 78 லட்சத்துக்கு சொத்துக்கள் உள்ளதாக அவருடைய வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் ஓ.பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் ரூ. 200 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர். ஓ.பி.எஸ்-ன் மகன்கள் பல நிறுவனங்களில் இயக்குனர்களாக உள்ளனர். தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்த டைரியில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ரூ.4 கோடி கொடுத்ததாகக் குறிப்புகள் உள்ளன. இதுபற்றியெல்லாம், கடந்த மார்ச் 10-ம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்று கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடந்தது. அப்போது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட புகார் குறித்தும், அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்’ என்று கூறினார். இதையடுத்து நீதிபதி, 'அந்தப் புகார் மீதான விசாரணையை விரைவாக விசாரணை நடத்தி முடிக்க வேண்டும். அப்போது மனுதாரர் கூறும் குற்றச்சாட்டையும், அதற்கான ஆதாரங்களையும் போலீஸார் பெற்று அதுகுறித்தும் விசாரிக்க வேண்டும். ஒருவேளை போலீஸாரின் புலன் விசாரணையில் காலதாமதம் செய்வதாக மனுதாரர் கருதினால், அவர் எப்போது வேண்டுமானாலும், இந்த நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று கூறி இந்த வழக்கை முடித்து வைத்தார்.
 
இந்தநிலையில், சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணையை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை போலீஸார், உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மீண்டும் தூசிதட்டி எடுத்து இருக்கிறார்கள். இதனால், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் விசாரணை, ஓ.பன்னீர் செல்வத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. இந்த வழக்கைச் சவாலாக எடுத்துக்கொண்டு, 'ஓ.பன்னீர்செல்வத்தை ஒரு கை பார்த்துவிடுவோம்' என்று களத்தில் இறங்கி இருக்கிறது தி.மு.க. அவர்கள், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். எனவே, இந்த வழக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.