img/728x90.jpg
திருச்சி நெடுஞ்சாலையில், சாலை பாதுகாப்புக்காக, புதிய திட்டம்

திருச்சி நெடுஞ்சாலையில், சாலை பாதுகாப்புக்காக, புதிய திட்டம்

தமிழகத்தில், அதிக விபத்துகள் நடக்கும், செங்கல்பட்டு - திருச்சி நெடுஞ்சாலையில், சாலை பாதுகாப்புக்காக, புதிய திட்டம் செயல்படுத்தப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை மாநகர போக்கு வரத்து கழகத்தில், விபத்தில்லாமல் பஸ்களை இயக்கிய, எட்டு பணிமனைகளை சேர்ந்த, ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள், 3,911 பேருக்கும், 69 தொழில்நுட்ப பணியாளர்களுக்கும், பாராட்டு பத்திரங்கள் மற்றும் பரிசுகள், சென்னையில், நேற்று வழங்கப்பட்டன.பரிசுகளை வழங்கி, அமைச்சர் பேசியதாவது: நாட்டில், ஆண்டுக்கு, 1.50 லட்சம் பேர், சாலை விபத்துகளில் இறக்கின்றனர். இதில், தமிழகத்தில், 17 ஆயிரம் பேர் இறக்கின்றனர். தமிழகத்தில், தரமான சாலைகள், அதிவேக வாகனங்கள் இருப்பதாலும், சாலை விதிகளை கடைபிடிக்காததாலும், இவ்விபத்துக்கள் நிகழ்கின்றன.தரமான ஓட்டுனர்களை உருவாக்கும் வகையில், 'லைசென்ஸ்' வழங்கும் முறை, கடுமையாக்கப்பட உள்ளது. வெளிநாடுகளில், சைக்கிள் ஓட்டுவோரும், 'ஹெல்மெட்' போடுகின்றனர்; இங்கு, மோட்டார் சைக்கிள் ஓட்டுவோர், ஹெல்மெட் அணிவதில்லை.அவர்களின் லைசென்சை ரத்து செய்யும் வகையில், அசல் லைசென்ஸ் வைத்திருப்பது, கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் வழியாக, 2020க்குள், விபத்துகளை பாதியாக குறைக்கும் முயற்சியில், தமிழக அரசு ஈடுபட்டு உள்ளது.தமிழகத்தில், செங்கல் பட்டு முதல் திருச்சி வரை உள்ள, 280 கி.மீ., தொலைவில், அதிக விபத்துகள் நடக்கின்றன. அதை கட்டுப்படுத்தும் வகையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து, தானியங்கி முறையில், அபராதம் வசூலிக்கப்படும். இதற்காக, அரசு, 25 கோடி ரூபாயில், நவீன கட்டமைப்புகளை உருவாக்க உள்ளது.அரசு போக்குவரத்து ஓட்டுனர்களுக்கு, புத்தாக்கப் பயிற்சிகள் அளிக்கப் படும். தற்போது, சென்னையில் உள்ள, 34 பணிமனைகளில், எட்டு பணிமனைகளைச் சேர்ந்த ஓட்டுனர்கள், விபத்தில்லாமல், பஸ்களை இயக்கி உள்ளனர்.போக்குவரத்து ஊழியர் களுக்கு, 1,000 கோடி ரூபாய் ஊதிய உயர்வும், 12 ஆயிரத்து, 700 கோடி ரூபாய் நிலுவை தொகையும் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில், மாசு ஏற்படுத்தாத, 'பேட்டரி' பஸ்கள், விரைவில் இயக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம், விரைவு போக்கு வரத்து கழக மேலாண் இயக்குனர் பாஸ்கர், 'அசோக் லைலேண்ட்' நிறுவன மண்டல மேலாளர் மோகன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் செயல் இயக்குனர் சித்தார்த்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.