img/728x90.jpg
மின் நிலைய கட்டுமான பணிகள் கண்காணிக்க தனியார் நிறுவனம்

மின் நிலைய கட்டுமான பணிகள் கண்காணிக்க தனியார் நிறுவனம்

உப்பூர், உடன்குடி மின் நிலையங்களின் கட்டுமான பணிகளை கண்காணிக்க, தனியார் நிறுவனம் ஒன்றை நியமிக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், எண்ணுாரில், 660 மெகா வாட் திறனில், எண்ணுார் விரிவாக்கம் என்ற பெயரில், அனல் மின் நிலையம் அமைக்கும் பணியை, 2014ல், மின் வாரியம் துவக்கியது.
ரூ.3,921 கோடி : இதன் கட்டுமான பணிகளை, ஹரியானா மாநிலத்தை சேர்ந்த, லேன்கோ' என்ற நிறுவனம் மேற்கொண்டது. திட்டச் செலவு, 3,921 கோடி ரூபாய். அங்கு, இந்த ஆண்டு ஜனவரியில், மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டது. ஆனால், ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சியத்தால், கட்டுமான பணி பாதியில் முடங்கி உள்ளது. அதனால், ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர்; துாத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் அமைக்கப்படும், அனல் மின் நிலையங்களின் பணிகளை, தனியார் நிறுவனம் வாயிலாக கண்காணிக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
புகார் : இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: உப்பூரில், 1,600 மெகா வாட்; உடன்குடியில், 1,320 மெகா வாட் திறனில், ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக, அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கான திட்டச் செலவு, 23 ஆயிரத்து, 400 கோடி ரூபாய். இந்த இரு இடங்களும், சென்னையில் இருந்து, நீண்ட துாரத்தில் இருப்பதால், உயரதிகாரிகளால் அடிக்கடி சென்று, ஆய்வு செய்ய முடியவில்லை. அங்குள்ள பொறியாளர்களும், பணியில் முழு கவனம் செலுத்துவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
சமர்ப்பிப்பு : எனவே, திட்டமிட்டபடி, இரு மின் நிலையங்களிலும், 2020 - 21ல், மின் உற்பத்தியை துவக்கும் வகையில், பணிகளை கண்காணிக்க, தனியார் நிறுவனம் ஒன்று நியமிக்கப்பட உள்ளது. அந்நிறுவனம், பணி நடக்கும் இடங்களில், தங்களது நிபுணர்களை நியமித்து, 'டெண்டர்' விதிப்படி, பணிகள் நடக்கிறதா என்பதை, தினமும் ஆய்வு செய்து, வாரிய அதிகாரிகளுக்கு, அவ்வப்போது அறிக்கை சமர்ப்பிக்கும். இதனால், தரமாகவும், தாமதம் இன்றியும், பணிகளை முடிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.